சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொட்டடி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற குற்றவாளிகளான முன்னாள் போலீசார் 5 பேர் தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு சலுகை வழங்க வேண்டுமென்று தொடுத்த வழக்கில், “குற்றவாளிகளுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்து மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
இந்த வழக்கில் குற்றவாளிகளான 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் ஒருதரப்பில் வரவேற்பையும் மற்றொரு தரப்பில் மரண தண்டனை என்று இல்லாமல் அதைதவிர்த்த மற்ற கடுமையான தண்டனை வழங்கியிருக்கலாம் என்பதாக ஒரு கருத்தும் நிலவி வருகிறது.
இந்த பின்புலத்தில், இந்த விவகாரத்தை போலீசார் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து, தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் எழுத்தாளர் எம்.எஸ்.ராஜகோபால்.

அவரது பதிவில், ”சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் நடத்திய கொடூரமான சித்திரவதையில் தந்தையும் மகனும் உயிரிழந்த பொழுது நிறைய பதிவுகள் முகநூலில் வந்து கொண்டிருந்தன.
நானும் மிகவும் கடுமையாக அந்த காவலர்களை விமர்சித்து எழுதி இருந்தேன். அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய நண்பனான காவல்துறை அதிகாரியிடம் என்னுடைய பதிவுகளை காண்பிப்பது வழக்கம்.
படித்துவிட்டு அவர் கடுமையாக என்னை பற்றி விமர்சிப்பார் என்று தெரிவித்தார். அதற்காக நான் பதிவதை நிறுத்தவில்லை.
இந்த சாத்தான்குளம் சம்பவத்தை பற்றி நான் பதிந்த ஒரு பதிவை அவருடைய நண்பருக்கு காட்டி விட்டு எனக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். உண்மையில் அந்த பின்னூட்டம் அவர் பதிந்ததல்ல !
அவருடைய காவல்துறை அதிகாரி பதிந்ததாகும். அது கீழ்க்கண்டவாறு இருந்தது !
“சரியாக நடந்து கொள்ளுங்கள்… நீங்கள் இவ்வாறு தொடர்ந்தால் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட நிலை 10 இலட்சம் மக்களில் ஒருவருக்காவது ஏற்படுவது போல உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ” இன்று தெளிவாக ஆங்கிலத்தில் பகிர்ந்து இருந்தார். மிகவும் அதிர்ச்சியடைந்த நான் இதற்கு மேலும் நண்பரோடு தொடர்பு வைத்திருந்தால் அது பலவித சிக்கல்களை உண்டாக்கும் என்று அந்த நண்பரை பதிவு நீக்கம் செய்து விட்டேன்.
அந்த நேரத்தில் ஒரு காவலர் ஒருவர் “இப்பொழுதாவது காவல்துறையின் அதிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! ஏனென்றால் எப்பொழுதும் எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன … உங்களிடம் ஆசனவாய் இருக்கிறது “என்று பதிந்திருந்தார்.
காவல்துறையினரின் மனநிலை எப்படி இருக்கிறது என்றால் எந்தவித அநியாயத்தையும் நியாயப்படுத்தும் அளவுக்கு தான் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய நிலையை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் தனிப்பட்ட நபர்களுடைய பாதிப்புகளை பற்றி அவர்கள் சற்றும் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது தான் இதில் இருந்து தெரிந்து கொண்டதாகும்.
இந்த சாத்தான்குளம் ரெட்டை மரணத்தை பற்றி நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு காவல்துறை அதிகாரிகளிடமும் காவலர்களிடமும் ஒரு பெரிய மனமாற்றத்தையும் தாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டினையும் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.” என்பதாக பதிவிட்டிருக்கிறார்.
தொடரும்.
அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.