பா*யல் குற்றவாளி பங்கு தந்தையா? திருச்சி பகீர்
பாலியல் குற்றவாளிக்கு பங்குத்தந்தை பதவியா? ஆயரிடம் முறையிட்ட பங்கு மக்கள் !
திருச்சி மாவட்டத்தில் ரோமன் கத்தோலிக்க சபையில், ஆயரின் அதிரடி முடிவுகளுக்கு எதிராக பங்குகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். சமீபத்தில், ஆயரை நேரில் சந்தித்து தங்களது உள்ளக்குமுறல்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். என்னதான் பஞ்சாயத்து என்ற கேள்வியோடு சம்பந்தப்பட்ட பங்கு மக்கள் சிலரிடம் அங்குசம் சார்பில் பேசினோம்.
“இது எங்க குடும்பத்துக்கு உள்ளே இருக்கிற பிரச்சினை. இருந்தாலும் இப்போ வெளியில பேசுற மாதிரி ஆகிடுச்சி. ஆனாலும், வெளிப்படையாக எல்லாம் பேச முடியாது” என்ற நிபந்தனையோடு பெயர், தனிப்பட்ட விவரங்களை தவிர்த்து சபையில் நிலவும் சிக்கல்கள் குறித்து அங்குசம் செய்தியாளர் குழுவோடு பகிர்ந்து கொண்டார்கள்.
ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர் பதவியை ஆயர் என்றே அழைக்கிறார்கள். திருச்சி மறை மாவட்டத்துக்கான ஆயர் பதவிக்கான தேர்தல் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிக சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. தேர்தல் அரசியல் போல, தற்போது சபையில் நிகழும் தேர்தல்களிலும் அரசியல் தன் பங்குக்கு கோலோச்சத்தான் செய்கிறது என்கிறார்கள்.
ஒருவழியாக தேர்தலும் முடிந்து புதிய ஆயராக ஆரோக்கியராஜ் பொறுப்பேற்றிருக்கிறார். இவர், சிறுபான்மையிலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் விரல் விட்டும் எண்ணிக்கையில்தான் அருட்தந்தைகளாக இருப்பதால், இதே சபையில் மெஜாரிட்டியாக உள்ள சமூகத்தை சேர்ந்த அருட்தந்தைகளின் தலையீடு ஆதிக்கம்தான் கோலோச்சுகிறது என்கிறார்கள்.
இதன்காரணமாகவே, ஆயராக அவர் அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்புகள் எல்லாமே, அந்தந்த பங்குகளை சேர்ந்த மக்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
திருச்சி பெல் வளாகத்தை அடுத்த கைலாசபுரத்தில் புதியதாக சர்ச் ஒன்றை அருட்தந்தை பிரபு என்பவர் முன்முயற்சி எடுத்து கட்டியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், திடீரென்று அந்த பகுதியின் புதிய அருட்தந்தையாக ஜேம்ஸ் என்பவரை நியமித்திருக்கிறார் ஆயர். பொதுவாக, எந்த அருட்தந்தை மெனக்கெட்டு ஒரு ஆலயத்தை கட்டி எழுப்புகிறாரோ, அவரே அதன் திறப்பு விழா வரையில் அதே பங்கின் அருட்தந்தையாக நீடிப்பதையே விரும்புவார்கள் என்ற நிலையில், இப்படி ஒரு அதிரடி மாற்றம் சம்பந்தபட்ட அருட்தந்தைக்கும் மன வருத்தம்தான் என்கிறார்கள்.
அடுத்து, சங்கிலியாண்டபுரம், துரைசாமிபுரம் பகுதியில் உள்ள தெரசாள்புரம் பங்கு தந்தையாக இன்னாசி முத்து என்பவரை நியமித்ததையடுத்துதான் ஆயருக்கு எதிராக பங்கு மக்கள் கொந்தளித்துவிட்டார்கள்.
எந்த ஒரு பங்கிலும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு பங்குதந்தைகளையும் பணியாற்ற அனுமதிப்பதில்லை. அதிரடியாக இடமாற்றம் செய்துவிடுகிறார்கள் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தெரசாள்புரம் பங்கு தந்தையாக அறிவிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இன்னாசி முத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
இந்த விவகாரத்தில், ஆயருக்கு எதிராக பங்கு மக்களின் சார்பாக சில கேள்விகளை எழுப்புகிறார்கள்.
”தற்போது புதிய அருட்தந்தையாக நியமிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இன்னாசிமுத்து ஏற்கெனவே, நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர். மறை மாவட்டத்தின் முன்னாள் நிதி பொறுப்பாளராக இருந்த சமயத்தில், பல கோடி மதிப்பு சொத்துக்களை கொள்ளையடித்தவர். மறை மாவட்டத்திற்கு சொந்தமான நாகமங்கலத்தில் உள்ள பள்ளியை இன்று வரையில் இவரது தனிப்பட்ட சொத்து போலவே வைத்திருக்கிறார். ஏற்கனவே, பழைய கோயில் பங்கு தந்தையாக இவரை நியமனம் செய்தபோதும் இதேபோல பங்குமக்களின் எதிர்ப்பையடுத்து அந்த முடிவை ஆயர் கைவிட்டிருந்தார்.
இந்த பின்புலத்திலிருந்துதான், ”நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு பங்குகளில் பெரிய நிறுவனங்களில் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற உத்தரவை மீறி அருட்தந்தை இன்னாசி முத்து அவர்களுக்கு தரசால்புரம் பங்கு தந்தையாக பணி நியமனம் செய்ததின் அவசியம் என்ன? மீண்டும் மீண்டும் பெரிய பொறுப்புகளில் அமர வைப்பதில் உள்நோக்கம் என்ன? அழுத்தம் கொடுத்தது யார்?” என்ற கேள்வியை மையமாக எழுப்புகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், ”கத்திட்ரல் ட்ரஸ்ட் வங்கி கணக்கில் இருந்த பல கோடி பணத்தை கொள்ளையடித்த அருட்தந்தைகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில், ஓரினச்சேர்க்கை புகாருக்கு உள்ளான ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டென்னிஸ் கில் பெட் மீது இதுவரையில் ஆயர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என அடுத்தடுத்து பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
இந்தநிலையில்தான், இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதுபோன்ற நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருவதுதான் பங்கு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.
பங்கு மக்கள் தங்களின் ஆதங்கத்தையெல்லாம், அப்படியே தற்போதைய ஆயர் அருட்தந்தை ஆரோக்கியராஜிடம் நேரில் சென்று கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
ரோமன் கத்தோலிக்க சபை உரிய அக்கறை செலுத்தி, இந்த விவகாரத்தில் அணுசரனையோடு அணுகி பொருத்தமான முறையில் தீர்வை எட்ட வேண்டும் என்பதுதான் சபை மக்களின் ஏக்கமாக இருக்கிறது.
– அங்குசம் செய்தியாளர் குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.