சாஸ்திரா பல்கலை விவகாரம் : வரம்பு மீறும் உச்சநீதிமன்றம் ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தஞ்சாவூரில் அமைந்துள்ள சாஸ்திர பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல கட்டிடங்களை கட்டி உள்ளது. தமிழக அரசின் தொடர் சட்டப் போராட்டங்களால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சாஸ்திரா பல்கலைக்கழகமோ, ஆக்கிரமிப்பு நிலத்திற்கு ஈடாக தமிழக அரசுக்கு மாற்று இடம் தருவதாக சொல்கிறது.

மேல்முறையீட்டில் இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், சாஸ்திரா கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு யோசனை சொல்கிறது. அதுவும், தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட பெஞ்ச். ஆக்கிரமிப்பு இடத்தில் கல்வி நிறுவனம் நடந்து வருவதால் பரிசீலிக்க வேண்டியுள்ளது என்கிறது நீதிமன்றம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சாஸ்திரா பல்கலை அந்த இடத்தில் வணிக வளாகமோ, ரெசார்டோ வேறு வகையான நிறுவனங்களோ இருந்திருந்தால் விட்டு வைக்க மாட்டோம் என்றும் சொல்கிறது நீதிமன்றம். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது மிகப்பெரிய குற்றம். ஏதோ எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், தங்குவதற்கு இடமில்லாமல் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்துக் கொண்டது போல, அல்ல சாஸ்த்ரா செய்திருக்கும் ஆக்கிரமிப்பு. தெரிந்தே ஆக்கிரமிப்பு செய்தவர்கள், பல்கலைக்கழகம் நடத்தும் அளவுக்கு மெத்தப் படித்தவர்கள்.

அப்புறம் உச்ச நீதிமன்றம் கருணை காட்டும் அளவுக்கு, இந்த விவகாரத்தில் என்ன இருக்கிறது? ஆக்கிரமிப்பில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள முடியாதா? அந்த இடத்தில் உயிர் காக்கும் மருத்துவமனையே செயல்பட்டு வந்தாலும், மாற்றுக் கட்டிடங்களைக் கட்டி இடமாற்றம் செய்து கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் தந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீருவது தான் சரியான நடைமுறை. நீதி பரிபாலனம் செய்பவர்களின் வேலை அது தான்.

மாற்று இடத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? ‘அரசு நிலம் ஆக்கிரமிப்பு’ என்ற குற்றத்தை அங்கீகரிக்கிறதா உச்ச நீதிமன்றம்? நியாயமாக பார்த்தால் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளையும் இழுத்து வந்து தண்டிக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் ஏழை எளிய மக்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தால் “பொதுச் சொத்தை ஆக்கிரமிக்க எவருக்கும் உரிமை இல்லை.  இடித்து தள்ளுங்கள் அதுதான் உங்கள் கடமை “என்று அரசாங்கங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிப்பதும்  இதே உச்சநீதிமன்றம் தானே?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்றமே ஒரு கடுமையான குற்றத்தை மென்மையாக அணுகுவது ஆரோக்கியமான விஷயமா? இந்திய நீதிபதி பரிபாலன வரலாற்றில் காலத்துக்கும் அழிக்க முடியாத கருப்பு பக்கமாக அமைந்து விடும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியாதா?

கீழமை நீதிமன்றங்களோ உயர்நீதிமன்றங்களோ தவறிழைத்தால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் கண்டிக்க முடியும்? பெண்ணை பலாத்காரம் செய்தவனுக்கு அபராதம் விதிக்கும் இத்துப்போன ஆலமர பஞ்சாயத்துகள்கூட இப்போது திருந்திவிட்டன. கெடுத்தவனே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று யோசனை சொன்னால் சம்பந்தப்பட்ட பெண்ணே பஞ்சாயத்துகாரர்களை முகத்தில் அறைகிற அளவுக்கு காலம் மாறிவிட்டது.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம் சொல்லும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் மாற்று இட கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவே கூடாது. நீதிமன்றம் சொல்லுவது யோசனைதான். இறுதி உத்தரவு அல்ல.

அப்படி ஏற்றுக் கொண்டால் நாளை அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழக அரசுக்கும் சிக்கல்கள் உருவாகும். அரசு நிலத்தை ஆகிரமித்தவர்களெல்லாம் நாளைக்கு நாங்களும் மாற்றுத் தீர்வு சொல்கிறோம் என்று இறங்கினால் என்ன கதியாகும்?

மீண்டும் ஒரு விஷயத்தை நினைவு படுத்துகிறோம். நீதி வழங்குபவர்களின் வரிசையில் கடைசி இடத்தில் தான் நீதிபதிகள் வருகிறார்களே தவிர, அவர்கள் சொல்வது தான் இறுதியான நீதி என்று ஆகிவிடாது. நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் ஒரே வழக்கில்  தீர்ப்பு வேறுபடுவதுகூட இதன் அடிப்படையில்தானே?

—   ஏழுமலை வெங்கடேஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.