அங்குசம் பார்வையில் ‘சிங்காரம்’
தயாரிப்பு: ‘ராக் புரொடக்சன்ஸ்’ ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி, டைரக்டர்: கே.வி.கதிர்வேலு. ஆர்டிஸ்ட்: யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மரியா வின்செண்ட், இளவரசு, மனோபாலா, தீபா சங்கர், மாரிமுத்து, ஜாவா சுந்தரேசன், கல்கி, படவா கோபி, சென்ராயன், ஹலோ கந்தசாமி ஒளிப்பதிவு: பிரசன்ன குமார், இசை: சாம் சி.எஸ்., எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர், பிஆர்ஓ: ரியாஸ் அகமது & பாரஸ் ரியாஸ்.
”மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் படை வீரர்களாக இருந்தவர்கள் தான் இப்போது நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” என்ற கதையைச் சொல்லி, 1990-களில் பொள்ளாச்சியில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது என்ற டைட்டில் கார்டுடன் படத்தை ஆரம்பிக்கிறார்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், இவரது மகன் சிங்காரம்[யோகிபாபு] மற்றும் மனோபாலா, தீபா சங்கர், ஜாவா சுந்தரேசன், கல்கி மற்றும் பலர் பொள்ளாச்சியின் ஆற்றங்கரையில் டெண்ட் அடித்துத் தங்கி, ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களுக்கு அந்த ஊரின் காமராஜர் காலத்து எம்.பி.யான நல்லசிவம் [வேலராமமூர்த்தி] பெரும் உதவி செய்கிறார்.
அப்புறம் அதே ஊரில் எம்.எல்.ஏ.வாக படவா கோபி, மாஜி எம்.எல்.ஏவாக மாரிமுத்து, இவரின் கைத்தடியாக சென்ராயன் இப்படி ஒரு கோஷ்டி. தனது இன மக்கள் படும் துயரம் ஒருபுறம், தனது காலில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தால், தனது மகள்களின் மானம் விற்கப்பட்ட வேதனை ஒருபுறம் இவற்றால் நொந்து போய் மரத்தில் தூக்கு மாட்டி செத்துப் போகிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவர் வாங்கிய லாட்டரியில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் அடிக்கிறது. இதனால் அவரது மகன் சிங்காரத்தின் வாழ்க்கையும் அந்த இன மக்களின் வாழ்க்கையும் ரொம்பவே முன்னேற்றம் அடைகிறது.
இந்த நிலையில் பொதுத்தேர்தல் வருகிறது. அதில் படவா கோபி, மாரிமுத்து ஆகியோரை எதிர்த்து எம்.எல்.ஏ.பதவிக்குப் போட்டியிடுகிறார் யோகிபாபு. தேர்தலில் யோகிபாபு ஜெயித்து முதல்வரானாரா? இதான் இந்த சிங்காரத்தின் கதை.
மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யோகிபாபுவிடம் ஐந்து நாட்கள் கால்ஷீட் வாங்கி படத்தை ஆரம்பித்திருப்பார்கள் போல. ஏன்னா இதில் நடித்த மாரிமுத்துவும் மனோபாலாவும் செத்தே மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
“அண்ணே நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த நீங்க எம்.எல்.ஏ.வா ஜெயிச்சு கோட்டைக்குப் போறீக. அப்ப “அண்ணாதுரை என்னும் நான்”, ”கருணாநிதி என்னும் நான்”, “ஜெ.ஜெயலலிதா என்னும் நான்” இந்த மூணு பேரும் முதல்வராகப் பதவி ஏற்கும் வாய்ஸ் ஓவரைப் போடுறோம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் காட்றோம், நீங்க அதை நோக்கி காரில் போறீங்க” இப்படி கதையை ரிவர்ஸில் சொல்லி யோகிபாபுவிடம் கால்ஷீட் வாங்கிருப்பார் போல டைரக்டர். முதல்வர் கனவில் மிதந்த யோகிபாபுவும் மனம் பூரித்துப் போய் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல.
அதனால் அங்கங்கே சீன்களை பிட்டு பிட்டு ஜாயிண்ட் பண்ணி சிங்காரத்திற்கு அலங்காரம் பண்ணப் பார்த்திருக்காரு டைரக்டர் கதிர்வேலு. ஆனால் அலங்காரம் அலங்கோலம் ஆகிப்போனது தான் மிச்சம். யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஜாவா சுந்தரேசன் கூட்டணி காமெடிங்கிற பேர்ல என்னன்னம்மோ பண்ணிப்பார்த்தும் படம் முடியும் வரை நம்மால் சிரிக்கவே முடியலை. இதுல ஹீரோயின் மரிய வின்செண்ட் வேற அப்பப்ப குறுக்க மறுக்க வந்து போய், க்ளைமாக்ஸ்ல யோகிபாபுவிடம் ‘ஐ லவ் யூ” சொல்லி நம்மை குலை நடுங்க வைக்கிறார்.
படத்துல கொஞ்சமே கொஞ்சமேனும் ஆறுதல்னா வேலராமமூர்த்தியும் இளவரசும் தான். படவா கோபியும் மாரிமுத்துவும் எரிச்சலின் உச்சம்.
அட போங்கய்யா….நீங்களும் உங்க சிங்காரமும்…
அங்குசம் பார்வையில் ‘சிங்காரம்’ 27/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.