அங்குசம் பிளாஸ்ட் 31.10.2026
கஞ்சா – கல்லா கட்டும் கலால் போலீசு !
நெருப்புக் கடவுளுக்கு பெயர் போன மலை-யான மாவட்டத்தில், பாலாற்றின் துணை ஆற்றின் பெயரை கொண்ட ஊரில் கஞ்சா சப்ளை களை கட்டுகிறதாம். கிராமப்புற பின்னணியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வியாபாரிகள் நெட்வொர்க்கை பலப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். யாருக்கு சப்ளை செய்ய வேண்டுமோ, அதற்கேற்ப அதிகபட்சம் 5 பொட்டலங்களோடு டெலிவரி நடக்குதாம். ஒரு கட்டத்தில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, நுகர்வோரான கல்லூரி மாணவர்களே சப்ளையர்களாகவும் மாறிவிடுகிறார்களாம். போலீசில் பிடிபட்டாலும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து, பணத்தை கறந்துவிட்டு அனுப்பி வைக்கிறார்களாம். கஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டிய கலால் போலீஸ் நல்லாவே கல்லா கட்டுதாம். பிடித்த சரக்கில் பெயருக்கு கணக்கு காட்டிவிட்டு, மிச்சத்தை மற்ற கும்பல்களுக்கு போலீசே சப்ளை செய்யும் வேலையும் நடக்குதாம்.
குரூப்புல டூப்பு … சர்ச்சையில் சபா !
மாமல்லபுரத்தில் தேர்ந்தெடுத்த 30 சட்ட நாயகர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில், 31-வதாக இடம்பெற்றிருக்கும் அந்த நபர் யார்? என்ற கேள்வி விவாதமாகியிருக்கிறது. அவர் கழுத்தில் அணிந்திருந்த கழுத்துப்பட்டையின் கலரே காட்டிக் கொடுத்துவிட்டதாம். உறுப்பினராகவே இல்லாத இவருக்கு இங்கே என்ன வேலை? என கேள்வி எழுப்பிவருகிறார்கள் நெட்டிசன்கள். அவர் வேறு யாருமல்ல; சபையை நடத்தும் அமைதிக்கு பெயர்போன நடுநாயகமானவரின் அன்பு புதல்வன் தானாம். அப்படியே இருந்தாலும், சபை உறுப்பினர்கள் பயிற்சி பெறும் இடத்தில் அவர் எப்படி? என மடக்கினால், அடுத்த அதிர்ச்சியாக நடுநாயகமானவரின் மக்கள் தொடர்பு அதிகாரியே அந்த புதல்வன்தான் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்.
அவரா, இவர் ?
தனியார் பள்ளிக்கூட விவகாரமான விவகாரத்தில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சரின் கைது நடவடிக்கையை தொடர்ந்து, போலீசாரின் விசாரணை படலம் நாலா புறமும் விரிவடைகிறதாம். கொங்கு மண்டலத்தில் தொழிலதிபரான சண்முகமான பெண்மணி வீட்டில் போலீசார் ரெய்டு நடத்திய விவகாரம் இது என்ன புது ரூட்டா இருக்கே?னு எல்லோரையும் யோசிக்க வைத்திருக்காம். அவங்க டாக்டரா? தொழிலதிபரா? அமைச்சருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்னு? அந்த சண்முகமான பெண்மணி பற்றி எல்லோரும் கூகுள் பன்னி வருகிறார்களாம். விவகாரத்தின் சூத்திரதாரியான அரச பெயரை கொண்டவரின் மகளின் பெயரும் அந்த பெண் தொழிலதிபரின் பெயரும் ஒன்றாக இருப்பதால், போலீசுக்கு புது தலைவலியாக போய்விட்டதாம்.
எந்த அம்மா-வ பத்தி கேக்குறீங்க ?
நெருக்கடி சட்டத்தில் கைதாகி சித்திரவதைக்கு ஆளான கட்சித் தலைவரை அவமதிக்கும் விதமாக செய்கை காட்டிய மன்னணின் செயலை கண்டித்து, சம்பந்தபட்ட கட்சி சார்பில் நடைபெற்ற. போராட்டத்தில் பங்கேற்று பேசிய, பேச்சுக்கு பெயர்போன இரண்டு எழுத்தில் பெயர் கொண்ட அரசியல்வாதிக்கு எதிராக வழக்கு போட்டு விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். அவரும் ஜாலியாக வந்திருக்கிறார். எஃப்.ஐ.ஆர். கேட்டிருக்கிறார். இல்லை என்றிருக்கிறார்கள். பிறகு, போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு கேள்வி அம்மாவை பத்தி தப்பா பேசினீங்களானு அதிகாரிகள் கேட்க. எந்த அம்மாவை என இவர் திருப்பி கேட்க. அவரும் ஒன்னும் புரியாமல், யாருக்கோ போன் போட்டு கேட்க. பிறகு, போய் வாருங்கள் என அனுப்பி விட்டார்களாம்.
ஸ்வீட் எடு கொண்டாடு !
அரசியல் கட்சி வரலாற்றில் பட்டாசு போட்டு தெறிக்கவிடுவதெல்லாம் சகஜம்தான். கட்சிக்காரன் ஜெயிலுக்கு போறதுக்குகூடவா, வெடிய போடுவாங்கனு? கேட்குற மாதிரி ஆகிடுச்சு, அந்த முன்னாள் அமைச்சரின் கைது விவகாரம். “நானே என் பொண்டாட்டி டிரான்ஸ்பருக்கு இவ்ளோ கொடுத்திருக்கேன். எங்கே வேணுனாலும் சொல்லுவேன். எல்லோரும் வெடி வச்சி கொண்டாடனும். அவரு ஜெயிலுக்கு போக வேண்டியவருதான்”னு கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே பேசிய ஆடியோதான் இப்போ வைரலாகியிருக்கு. சில இடங்களில் அப்படியும் வெளிப்படையாகவே கொண்டாடியும் தீர்த்திருக்கிறார்களாம். தலைமைக்கு காதில் புகை வராத குறைதானாம். அனுமதி என்றில்லை, துறையில் எந்த மாற்றம் என்றாலும் இத்தனை எல். என்று பக்காவா சார்ட் போட்டு வசூலிச்சதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள், இப்போது.
அடித்து ஆடும் ஆளும் தரப்பு !
100 கோடி விவகாரத்தில் தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று அன்பானவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையாம். ஆளும் தரப்பில் அவரே பேசி பார்த்தாராம். அந்த விவகாரம் தலைமை வரை கசிந்துவிட, பிறகு வீட்டம்மாவை வைத்து பேசினாராம். புகார்களே செஞ்சுரி அடிச்சிருச்சு. வசூலிலும் செஞ்சுரிதான். சத்தம்போடாம, வாங்குனத திருப்பிக் கொடுத்துடுங்க. பேசி பார்ப்போம்னு சொல்லி அனுப்பினாங்களாம். ரீஃபண்ட் பற்றி என்ன முடிவெடுப்பதுனு யோசிச்சிட்டு இருக்கும்போதே இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கலையாம். குண்டாஸையும் உடைச்சிட்டு ஏ1-ஏ வெளிய வந்த நிலையில் இப்படி ஒரு அதிரடிக்கு காரணமே கட்சியின் போராட்ட அறிவிப்புதானாம். செம செக்-ல!
தலை போல வருமா?
மாவட்டத்தில் எதிரும் புதிருமான அரசியல் செய்வோரையும் அரவணைத்து செல்வதில் கெட்டிக்காரர் அந்த மீசைக்கார அமைச்சர். சொந்தக் கட்சிக்காரனையும், அதிகாரியையும் அலறவிடுவார். அப்புறம் அரவணைப்பார். அவர் பார்க்காத கேசு இல்லை. எல்லாத்தையும் அவர் டீல் பன்ற ஸ்டைலே தனிதான். எவ்வளவு பெரிய இ.டி.யே இறங்கினாலும், கோர்ட்ல பார்த்துக்கலாம்னு கூலா சொல்லிட்டு போவாரு. ஏன்னா, இதெல்லாம் பூச்சாண்டி, கேசு நிக்காதுன்னு நல்லாவே தெரியும். ஜெட் வேகத்துல வழக்கை சுப்ரீம் கோர்ட் வரைக்கும் எடுத்துப்போவாரு.
ஆனா, அன்பானவரோ எடுத்த உடனே மேலிட டீலிங் … என்னனு யோசிக்கிறதுக்கு முன்னாடியே கோர்ட்ல கேஸ் … தேவையே இல்லாமல் முன்ஜாமீன் கேட்டதுன்னு சூதானம் இல்லாம வலிய போய் மாட்டிகினாரேனு சொந்தக்கட்சி காரங்களே சோகத்துல இருக்காங்களாம்.
ஜாலி மூடு ஜாலி டூர் நோ டென்சன் !
எதிர்த்த வீட்டுக்காரனோட சண்டையில ஒரு வார்த்தை கூட பேசிட்டாகூட எங்கே போலீஸ் கேஸாகிடுமோனு பயந்து போறதெல்லாம் சாமானியனோட கவலை. வைரமான தொழிலதிபரின் விவகாரமான விவகாரத்தில், பணம் கைமாறியதில் முக்கியமான ஆளுனு சொல்ற, ரயில் சங்கத்துக்காரரின் பிரகாசமான வாரிசு இப்போ இந்தியாவிலேயே இல்லையாம். எப்படியும் போலீசு பிடிக்கிறதுக்குள்ள பறந்துடனும்னு முடிவு பண்ணி கடல் கடந்துட்டாராம். லுக்-அவுட் நோட்டீஸ் கொடுத்துட்டு ஏர்போர்ட்ல தேவுடு காத்துட்டிருக்காம் காக்கி டீம். போறதுதான் போறோம் எண்டெர்டெயிண்மென்ட்டுக்கு ஆளு இல்லாம எப்படின்னு ஜோடியா கண்டம் விட்டு கண்டம் பாய்ஞ்சிட்டிருக்காராம் அந்த பிரகாசமான தொழிலதிபர்.
வாயை திறக்காமல் இருந்தால் சரிதான் !
வைரமான தொழிலதிபர் விவகாரத்தில் கோடிகள் கைமாறிய விவகாரத்தில் அடுத்தடுத்து பலரும் சிக்கிவரும் நிலையில், மூன்று முக்கிய பேனாக்காரர்களும் சிக்கியிருக்கிறார்கள். சக பேனாக்காரர் ஒருவரே கொடுத்த புகாரில்தான் இப்படி ஒரு நிலை இவர்களுக்கு. கொஞ்சம் ஓவராத்தான் கூவிட்டோம் போல ரகமாகத்தான் இவர்களும் டிஜிட்டல் ஆதாரங்களோடு சிக்கியிருக்கிறார்களாம். காக்கி டீமும் கௌரவமான முறையில் அழைத்து எல்லாத்தையும் ஓப்பன் பண்ணி பார்த்துவிட்டே அனுப்பி வைத்தார்களாம். விசாரணைக்கு வந்து போனவர்களை இப்போது வரையில் யாரும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம். நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் என்று நரம்பு புடைக்கும் அந்த பிரகாசமான பேனாக்காரரையெல்லாம் கம்பிக்குள்ள போட்டாலும் மூனு நாளுல வந்துடுவாரு. இப்படியே இருக்கட்டும். வீடியோ வராத வரைக்கும் நல்லதுதான்னு பேசிக்கிறாங்களாம்.
என்ன சிம்ரன் இதெல்லாம் ?
அன்பான அமைச்சரின் அட்ராசிட்டியால் அதிர்ந்து கிடக்கிறதாம் அறிவாலய வட்டாரம். அமைச்சராக வலம் வந்த காலத்திலேயே, அவர் துறையை சார்ந்து பல்வேறு சர்ச்சைகளும் கூடவே வலம் வந்ததாம். அதெல்லாம், ஆகாதவர்கள் செய்யும் வேலைனு, துறை ரீதியான நடவடிக்கையில் பெர்ஃபாமன்ஸ் காட்டி ஃஸ்கோர் செய்துட்டு போயிட்டாராம். இப்போ, டிஜிட்டல் ஆதாரங்களோட வகையா சிக்கியதும் எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம உழட்டிவருகிறாராம். மேலிடத்தோட டீலிங் பேசியதும் சர்ச்சையானது. போதாக்குறைக்கு அந்த இளையவர்-தான் எங்க டார்கெட்னு போலீஸ் நெருக்குனாங்கனு ஒப்பன் டாக் விட. சம்பந்தபட்ட காக்கி டீமிடம் கிராஸ் செக் செய்ததாம் தலைமை. அப்படியெல்லாம் இல்லையேனு சொல்ல, படுஅப்செட்டாம். இந்த பின்னணியில்தான் முதல் ஆளாய் சிறைக்கு சென்று பார்த்து வந்தாராம் இளையவர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.