எதிர்மறை முடிவுகள் ஹிட் அடிக்கும் பாலாவுக்கு பாராட்டு – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் டிசம்பர் 18-ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த ‘வணங்கான்’ இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவின் தொடா்ச்சியாக நடிகா்களின் பாராட்டு வரிசையில்,
நடிகர் சிவகார்த்திகேயன்
“சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள்.
ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள்.. அதே போல தான் நடந்தது. அவருடைய அவன் இவன் பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் என் நினைவிருக்கிறது.
அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்”.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார்
“நான் சினிமாவிற்கு வருவதற்கு மிக முக்கிய தூண்டுதலாக இருந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் பாலா. அவருடைய 25வது வருட விழா என்பது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் அவரது பல படங்களில் நான் இசையமைத்திருக்கிறேன். அவரது டைரக்ஷனில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் எனக்கு நடிப்பில் அவர்தான் குரு. ‘வணங்கான் படத்திற்கு’ நான் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்”.
இயக்குநர் விக்ரமன்
“தமிழ் சினிமா எவ்வளவோ மாறி இருக்கிறது. டெக்னாலஜி மாறி இருக்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டோம். ஆனால் மாறாத ஒன்று என்றால் அது இயக்குனர் பாலாவும் அவரது எளிமையும் மட்டும் தான்”.
இயக்குனர் மிஷ்கின்
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் அப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன் அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார்.
அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் பிசாசு. தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான். இந்த விழாவுக்கு நான் மதியமே வந்து விட்டேன் ஏனென்றால் இது என்னுடைய வீட்டு விழா போல”.
நடிகை வரலட்சுமி
“இயக்குநர் பாலாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் என்னுடைய குரு அவர்தான். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன். என்னுடைய அம்மா இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இரட்டிப்பு சந்தோஷத்துடன் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
நடிகர் கருணாஸ்
“இன்று நான் உங்கள் முன்னால் ஒரு நடிகனாக நிற்கிறேன் என்றால் இதற்கான அடையாளத்தை கொடுத்தது எனது குருநாதர் அண்ணன் பாலா தான். அவருடைய இந்த 25 ஆவது வருட விழாவிலும் அவர் இயக்கியுள்ள இந்த வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்”என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
“என் தம்பி பாலா இந்த தேதியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது”.
நடிகை வேதிகா
“பாலா சாரின் ஒரு மாணவியாகத்தான் நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். அவர் ஒரு இயக்குநர் மட்டுமல்ல.. அற்புதமான கதை சொல்லியும் கூட” என்று கூறினார்.
நடிகர் மன்சூர் அலிகான்
“இயக்குனர் பாலா ஒரு ஒப்பீடற்ற உலகத்தரம் வாய்ந்த இயக்குநர். ஜாதி, மதம், இனம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கொரியன், அமெரிக்கன் போன்ற படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் மக்களுடைய வாழ்வியலை சரியாக படம் பிடித்து தன்னுடைய படங்களில் காட்டியவர். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது” என்று கூறினார்.
இயக்குநர் சீனு ராமசாமி
“எங்கள் பாலு மகேந்திரா சார் பட்டறையிலிருந்து முதன்முதலாக இயக்குநராகி அந்த நம்பிக்கை ஒளியை ஏற்றியவர் அண்ணன் பாலா தான். பாலு மகேந்திரா பட்டறையின் தலை மகன் என்று அவரை சொல்லலாம். அவருடைய ஒவ்வொரு பல தலைப்புகளும் அவரின் சுபாவத்தை, அவரது நம்பிக்கையை, கருணையை கேள்வியை வெளிக்காட்டுவது போலவே இருக்கும்”.
நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ஸ்டண்ட் சில்வா
“ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு இயக்குனர்கள் தங்களது படங்களால் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள் அந்த வகையில் இயக்குனர் பாலாவும தன் பங்களிப்பை அதில் கொடுத்திருக்கிறார். அவரது படங்களை பார்த்து ரசித்து வளர்ந்த எனக்கு தற்போது வணங்கான் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு முதன் முறையாக கிடைத்துள்ளது. பாலா ஒரு டெரரான மனிதர் என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் அவருடன் பழகும் போது தான் தெரிந்தது அவர் ஒரு குழந்தை என்று” என்றார்.
— மதுரை மாறன்.