ரஜினியின் செயல்கள் உகந்ததா? கசந்ததா?
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயலலிதா ஆட்சி [ 1991-1996 ] நடந்த காலம். அப்போது நடிகை மனோரமா ஆச்சி, அதிமுக மேடையில், கருப்பு—வெள்ளை—சிவப்பு பார்டர் போட்ட சேலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தாறுமாறாக மட்டுமல்ல, படுகேவலமாகவும் விமர்சித்தார். அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஏன் வட்டச் செயலாளர் வண்டுமுருகன் ரேஞ்சில் இருந்தவர்கள் கூட ரஜினியை கேவலமாக அர்ச்சனை செய்தார்கள். 1996 மே மாதம் அராஜக ஜெயாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1997—ல் ‘அருணாச்சலம்’ படத்தை தனது சொந்த பேனரில் தயாரித்தார் ரஜினி. அதில் தன்னை அதிமுக மேடைகளில் காய்ச்சி எடுத்த ஆச்சி மனோரமாவிற்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்தார். ரஜினியின் பெரிய மனசு, ஆச்சியை நெகிழ வைத்தது. ஆனால் ரஜினி ரசிகர்களை கூனிக்குறுக வைத்தது.
அதன் பின் 2001-ல் மீண்டும் ஜெயா ஆட்சி. தனது கட்சிக்காரர்களை ஏவிவிட்டு, ரஜினியை நோக்கி குரைக்கச் சொன்ன [ 91-96-ல்] ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் நடந்த ‘ஜால்ரா’ அடிக்கும் விழாவில், “தைரியலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, வீரலட்சுமி, விவேக லட்சுமி” என ஜெயாவுக்கே கூச்சநாச்சம் கூடும் அளவுக்கு பஜனை பாடினார் ரஜினி.
அதன் பின் பல வருடங்களாக “இதோ வரப்போறேன்.. வந்துக்கிட்டிருக்கேன், வந்துட்டேன்” என அரசியல் களத்தை நோக்கி கபடி ஆட ஆரம்பித்தார் ரஜினி. ‘சிஸ்டம் சரியில்ல, வைரஸ் அட்டாக், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போச்சு”ங்கிற ரேஞ்சில் பொங்கித் தீர்த்தார். கபடி வீரனுக்கு முழங்கால் முக்கியம். ஆனால் ரஜினிக்கோ, சேர்த்து வைத்துள்ள சில ஆயிரம் கோடிகள் சொத்து முக்கியம். குறிப்பாக ரஜினியின் மனைவி லதா வகையறாக்களைப் பொறுத்த வரை, அவர்களின் சேஃப்டி லாக்கரில் ’பணம் ஒன்லி இன்கமிங்’ மட்டும் தான். அங்கிருந்து ‘நோ அவுட் கோயிங்’.
அதனால் கொரோனா என்ற குறளி வித்தையக் காட்டி, முழங்கால் செத்த கபடி வீரன் களத்திலிருந்து ஒதுங்குவது போல, அரசியல் கபடி மைதானத்திலிருந்து ஓடினார் ரஜினி. திமுகவுக்கு எதிராக ரஜினியை வைத்து ‘சர்க்கஸ்’ காட்டலாம் என நினைத்த அரசியல் கோமாளிகளின் நினைப்பில் மண் விழுந்து, குப்புறப்படுத்து குமுறிக்குமுறி அழுதார்கள். ஜெயாவும் செத்துப் போனார்.
அதன் பின் அகில உலக ஆமைக்கறி ஃபேமஸ் சீமான் வந்தார். ரஜினியை கடுமையாக, மிகக் கேவலமாக விமர்சித்தார். “தமிழ் மண்ணை தமிழன் தான் ஆளணும். கன்னடத்துக்காரனுக்கு இங்கே என்ன வேலை?” என இடைவிடாமல் ரஜினியைப் பார்த்து குரைத்தார்… குரைத்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் தான் சீமானை சிதறவிட விஜய் வந்தார், கட்சி ஆரம்பித்தார். ‘திராவிடம்—தமிழ் தேசியம், பகவத்கீதை, குரான், பைபிள், அரசியலமைப்பு புத்தகம் என பைத்தியம் போல பல டிசைன்களில் உருட்டினார் விஜய். இதனால் மேலும் உக்கிரமான பைத்தியமான சீமான், “லாரியில அடிபட்டுச் செத்துருவ தம்பி” என சாபம் விட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்படியே போனா நம்மள ஃபுல்டைம் மெண்டலாக்கிருவாய்ங்கன்னு பயந்த சீமான், தனது பிறந்த நாளை காரணமாக வைத்து ரஜினியைச் சந்திக்க பெரும் முயற்சி செய்து, ஒரு வழியாக சந்தித்து ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டார். ஆமைக்கறியும் சாம்பார் சாதமும் சேர்ந்திருக்கும் போட்டோக்களைப் பார்த்ததும் இப்போதும் உண்மையான ரஜினி ரசிகர்கள் கதறித்துடித்தனர்.
ரஜினியுடன் எடுத்த ஃபோட்டோக்கள் மீடியாக்களில் ரிலீஸ் ஆனதும், “சினிமாவில் அவர் தான் சூப்பர் ஸ்டார். அரசியலில் நான் தான் சூப்பர் ஸ்டார்” என நா.த.க.வின் மேடைகளில் நாக்குத் தள்ள கத்திக் கொண்டிருக்கிறார் ஆமைக்கறி சீமான்.
இதோ…இப்போது… அதாவது டிசம்பர் 10—ஆம் தேதி… பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேத்தி, டாக்டர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து ஆசி பெற்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
‘அலங்கு’ என்ற படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் சங்கமித்ராவம் படக்குழுவும் சந்தித்து, படத்தின் போஸ்டரை ரஜினியை வைத்தே ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள்.
‘பாபா’ பட ரிலீஸின் போது, வடமாவட்டங்களில் பா.ம.க.வின் ரவுடிக் கும்பலால்
அந்தப் படத்தின் ரீல் பெட்டி கொளுத்தப்பட்டது. ரஜினி ரசிகர்கள் வேட்டையாடப்பட்டனர். அவர்கள் உயிர் பிழைத்ததே பெரிய விசயம். அப்படிப்பட்ட அராஜக கும்பலின் தலைமைப் பேத்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் ரஜினி என்றால், இவரின் செயல்கள் எல்லாம் உகந்ததா? கசந்ததா?
தீபாவளி மற்றும் ரஜினி பிறந்த நாள், பொங்கல் நாள், புத்தாண்டு பிறக்கும் நாளில் போயஸ்கார்டனில் ரஜினியின் வீட்டு கேட்டுக்கு வெளியே நின்று, “தலைவா…தலைவா… நீங்க நூறு வயசுக்கும் மேல ஆரோக்கியமா வாழணும் தலைவா”ன்னு தொண்டை கிழியக் கத்தும் அப்பாவி ரசிகனுக்கு ஒரு வாய் தண்ணியாவது கொடுத்திருப்பாரா ரஜினி?
ரஜினியை கேவலமாக விமர்சித்தவர்கள், விமர்சிப்பவர்களெல்லாம் அவரின் வீட்டு நடு ஹாலில் ஹாயாக சிரிக்கிறார்கள்.
45 ஆண்டுகளாக அவரை தங்களின் உயிரைவிட மேலாக நினைத்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களோ.. போயஸ்கார்டனின் ராகவவீரா அவென்யூவில் நாயாக…..?
— கரிகாலன்.