பாம்புக் கடி 360°
வருடத்தின் மாதங்களில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 80% பாம்புக்கடி நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இதில் பெரும்பான்மை நிகழ்வுகள் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களிலேயே நிகழ்கின்றன. கடிபட்டவர்களில் 14% பேருக்கு கடித்தது இன்னதென தெரியாது.
இந்தியாவைப் பொருத்தவரை “பிக் ஃபோர்” ( பெரிய நான்கு ) என்று – நாகப்பாம்பு (Indian Cobra) – சுருட்டை விரியன் ( Saw scaled viper) – கட்டு விரியன் ( Common Krait) – கண்ணாடி விரியன் ( Russell’s viper ) மேற்சொன்ன நான்கும் அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகள். நிகழும் பாம்புகடி சார்ந்த மரணங்களும் பெரும்பான்மை மேற்சொன்ன நான்கினால் தான் நடக்கின்றன. பாம்புக்கடியைப் பொருத்தவரை 3.8% பேருக்கு பாம்பு கடித்த தடம் தெரியாது. எனவே, பாம்பு கடி என்றாலே இரண்டு பல் தடம் இருக்கும் என்று எண்ணக் கூடாது. தடமே இல்லாமலும் இருக்கலாம்.
பெரும்பாலும் கட்டுவிரியன் இரவில் தரையில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை வலியின்றிக் கடித்து விடும். காலை எழும் போது பக்கவாதம் ஏற்பட்டு எழுந்திருப்பார்கள் அல்லது உறக்கத்திலேயே இறந்திருப்பார்கள்.
வீட்டுக்கு வெளியே கழிப்பறை இருப்பவர்கள், கழிப்பறை செல்லும் பாதையில் ஒளி விளக்கு எரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் உணவு சேமித்து வைக்கும் அறைக்கும் உறங்கும் அறைக்கும் இடையே தூரம் இருக்குமாறு அமைக்க வேண்டும். உணவை உண்ண வரும் எலிகளை வேட்டையாட பாம்புகள் உள்ளே வரும்.
நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் கொண்டவை. சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவை ரத்த உறைதலை தடுத்து உதிரப்போக்கை ஏற்படுத்தும் விஷம் கொண்டவை. ஒரு போதும் பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுதல் கூடாது.
ஒருபோதும் பாம்பு கடித்த இடத்தில், இறுக்கமான கயிறு / துணி வைத்து கட்டுதல் கூடாது. பல நேரங்களில் கடித்தது விஷமற்ற பாம்பாக இருக்கும். ஆனால், கட்டப்பட்ட இந்த துணியால் ரத்த ஓட்டம் பாதித்து கை அல்லது கால் கருப்பாகி திசுக்கள் இறந்து, கை அல்லது காலை முழுவதுமாக நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வாய்வழியாகவோ கண் வழியாகவோ காது வழியாகவோ மருந்துகளை ஊற்றக்கூடாது. கடி பட்ட இடத்தை கீறவோ ஊசி வைத்துக் குத்தவோ கூடாது. கடிபட்டவரை பதட்டப்படுத்தக்கூடாது. அவரை நிதானமாக வைத்திருந்தால் அவரது இதயத்துடிப்பு நார்மலாக இருக்கும். இதனால் விஷம் மேலும் பரவும் வாய்ப்பு குறையும். எத்தனை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமோ அவ்வளவு நல்லது.
எந்தப் பாம்பும் தான் வைத்திருக்கும் மொத்த விஷத்தையும் ஒரே கடியில் செலுத்தாது. சில நேரங்களில் பல் தடம் இருக்கும் ஆனால் விஷம் ஏறியிருக்காது. இந்த சூழ்நிலை கடிபட்டவருக்கு சாதமாக அமையும். எனவே, பதட்டத்தை இயன்ற அளவு தணிக்க வேண்டும். கடிபட்ட காலோ கையோ அதை இயன்ற அளவு அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். அசைத்தால் விஷம் சீக்கிரம் ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு உண்டு.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா , பொது நல மருத்துவர், சிவகங்கை.







Comments are closed, but trackbacks and pingbacks are open.