டெல்டா மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா தென்னக ரயில்வே !
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், தற்போதைய இரயில் சேவையில் சில மாற்றங்களை செய்யக்கோரி, காவிரி டெல்டா ரயில் பயணிகள் உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் திருச்சி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில், தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகனிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
* மயிலாடுதுறையிலிருந்து சேலம் வரை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண் 16811, மற்றும் 16812 ) தற்போது 8 பெட்டிகளை கொண்ட ரயிலாக தினசரி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரயிலின் பெட்டிகளை 12 ஆக உயர்த்த வேண்டும்.
* தஞ்சாவூர் இரயில் நிலையத்தில், நடைமேடை 1, 2 ஆகியவைதான் 24 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் வசதிகளை கொண்டதாக இருக்கிறது. இதன் காரணமாக, 24 பெட்டிகளை கொண்ட தொலைதூர ரயில்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பயணிகளுக்கும் காலதாமதம் ஆகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில், தற்போது 18 பெட்டிகள் கொண்ட இரயில் நிற்கும் அளவுக்கு அமைந்துள்ள 4 மற்றும் 5 வது நடைமேடைகளை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
* தஞ்சாவூர் – விழுப்புரம் வரையிலான இரயில் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவதற்கான திட்டம், நிதி ஒதுக்கீடு இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மகாமகம் நடைபெறுவதற்கு முன்பாக, இத்திட்டத்தை விரைந்து அமல்படுத்தினால் இலட்சக்கணக்கான ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் அமையும்.
* தமிழகத்தில் வேளாங்கண்ணி ஒரு முக்கியமான ஆன்மீகத்தலமாக விளங்கிவருகிறது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து செல்கிறார்கள். விஷேச நாட்களில் கட்டுங்கடங்காத கூட்டத்தை காணமுடிகிறது. இதுபோல, பல்வேறு மாநிலங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில், தற்போது திருச்சி – ஹவுரா வரையில் இயங்கிவரும் வாராந்திர விரைவு ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
* காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துபோன நிலையில், பலரும் பஞ்சம் பிழைக்க கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களுக்குத்தான் படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக, பூதலூரை சுற்றி அமைந்துள்ள சுமார் 200-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கோவை, ஈரோடு திருப்பூர் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்திற்கொண்டு, மயிலாடுதுறை – கோயமுத்தூர் சதாப்தி அதிவேக விரைவு ரயிலை பூதலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வகை செய்ய வேண்டும்.
* திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு அலுவலக நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் பயன்பெறும் வகையில், திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னை செல்லும் சோழன் அதிவேக ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வகை செய்ய வேண்டும்.” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
— தஞ்சை க.நடராஜன்.