இலங்கை:
கனவுகளின் கற்பனைகளையெல்லாம் கண்முன்னே காட்சிப்படுத்தும் தேசம். அழகின் சுவர்களுக்குள்ளே வலியின் வேதனைக் குரல்கள். இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளுக்குள் முரண்பட்டுக் கிடக்கும் கண்ணீர்த் தீவு. கண்ணீர்த்துளியின் வடிவாய் அலை கடலில் தத்தளிக்கும் இலங்கையிலிருந்து கொடிய போரும் இனக் கலவரங்களும் கொந்தளிக்க.. உயிர்காக்கக் கடல் தாண்டி ஓடிவந்த நம் இரத்த உறவுகள் இன்று தமிழ்நாட்டில் அகதிகளாய் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
அகதி முகாம்கள்
இலங்கைத் தமிழ் அகதிகள் தற்போது தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் உள்ள 102 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குற்றங்கள் தொடர்பான சிலர் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்படுவார்கள். முகாம்களுக்கு வெளியேயும் காவல்துறையில் பதிவு செய்து தங்கியுள்ளனர்.
முகாம்களில் 19500 குடும்பங்களைச் சேர்ந்த 58585 பேரும் வெளியே 13455 குடும்பங்களைச் சேர்ந்த 34,955 பேரும் உள்ளனர். ஆக மொத்தம் 32955 குடும்பங்களைச் சேர்ந்த 93540 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ளனர்.
மறுவாழ்வு உதவிகள்
முகாமில் தங்கியிருப்பவர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் உள்ளன. நீண்டகாலப் பராமரிப்பின்மை காரணமாகவும் அதிக எண்ணிக்கை காரணமாகவும் அடிப்படை வசதிகளில் பல குறைபாடுகள் உள்ளன.
சிறப்புத் திட்டங்கள்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள், அகதிகள் முகாம் என்ற பெயரை “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” என்று மாற்றம் செய்தார். மேலும், 27.08.2021 இல் ஏற்கனவே முகாம்களில் உள்ள 7469 குடியிருப்புகளைக் புதுப்பிக்க ரூபாய் 231 கோடியும் குடிநீர், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூபாய் 30 கோடியும் புதிய குடியிருப்புகளை அமைக்க ரூபாய் 108.81 கோடியும் ஆக மொத்தம்369. 81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தற்போது இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
நலத்திட்டங்கள்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள மக்களுக்கு மாதந்தோறும், குடும்பத் தலைவருக்கு ரூபாய் 1500 ம் பெரியவர்களுக்கு ரூபாய் 1000 ம் குழந்தைகளுக்கு ரூபாய் 500 ம் வழங்கப்படுகிறது. மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் ரேசன் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை உடைகளும் பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகை, கைம்பெண்கள் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
கல்வி உதவிகள்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முற்றிலும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. புத்தகங்கள், புத்தகப் பை, சைக்கிள், மடி கணினி என்பனவும் அகதி மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு படிக்கும் மாணாக்கருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
உயர்கல்வியில் இலங்கை அகதிகளுக்கெனத் தனியான இட ஒதுக்கீடு எதுவும் இல்லை. மற்றவர்களைப் போல விண்ணப்பித்து கல்லூரிகளில் சேரலாம்.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
அடிப்படைத் தேவைகள் அரசு மூலம் கிடைத்தாலும் ஒரு சுதந்திரமில்லாது வாழ்க்கையின் துயர வலிகளோடுதான் அகதி மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர். அரசு உளவுத் துறையினர் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு தடவை அடையாள அணிவகுப்பு நடத்தி அனைவரும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வார்கள்.
ஆதார், வருமானவரி அட்டை, வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். எனினும் நிரந்தரமாக வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்க அனுமதி இல்லை. அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியாது.
முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தரப்படும் பிறப்பு சான்றிதழ்களில் அவர்களது இலங்கை முகவரி குறிப்பிடப்படுகிறது.
வலுப் பெறும் குடியுரிமை கோரிக்கை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும். எனவே அனைத்து இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எனினும் இந்திய அரசு இந்த நியாயமானக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை!
உயர்நீதிமன்றத் தீர்ப்பு
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிப்பேராணை ( WRIT ) வழக்கில் குறிப்பிடத்தக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு எண்: WP(MD) No 11623/2017. பி. லோகநாதன் மற்றும் பலர் எதிர் இந்திய அரசு என்ற இந்த வழக்கில் மாண்பமை நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் 17.06.2019 இல் தீர்ப்பு வழங்கினார்.
இலங்கை அகதிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய உள்துறை அமைச்சகம் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதைப் பரிசீலிக்க வேண்டும். என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சமாகும்.
இதனடிப்படையில் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவ்வாறு விண்ணப்பித்த அனைவருக்கும் “நீங்கள் சட்டவிரோதக் குடியேறிகள்( Illigel Migarnts) எனவே உங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இயலாது” என்ற பதில் இந்திய அரசினால் அனுப்பப்பட்டது.
குடியுரிமைத் திருத்த சட்டம் 2019
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்பவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இச்சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டு மேற்குறித்த நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வருவோர் சட்டப் பூர்வ இடம் பெயர்வோராக ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ளது. எனவே இவர்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் குறித்து இச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே சட்ட ரீதியாகவே இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை இந்திய அரசு தடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
குடியுரிமை வழங்குவதில் உள்ளத் தடைகள்
தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் செயல்பட்டு வரும் OFFER என்ற தொண்டு நிறுவனம் இலங்கையரால் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் ஒன்றிய அரசுடன் தொடர்பில் உள்ளது. இந்த நிறுவனமும் இலங்கைத் தூதரகமும் அகதிகளுக்கான ஐநா ஆணையமும் இணைந்து அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்தியரை திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கும் இலங்கைக் குடியுரிமையும் இலங்கை பிறப்பு சான்றிதழும் பெற்றுக் கொடுப்பது அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதற்குத் தடையாக உள்ளது.
ஐநா ஆணையமும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவதையே விரும்புகிறது.
இலங்கை நாடாளுமன்றக் குழு
விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை அகதி முகாமில் தங்கியிருந்த காலஞ்சென்ற அந்தோணி என்பவரின் முயற்சியால் இலங்கை நாடாளுமன்றக் குழு ஒன்று தமிழ்நாடு வந்து அகதி முகாம்களில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் பின்னர் இலங்கைக் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி முகாம்களில் உள்ள நாடற்றவர்கள் இலங்கை வந்தால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்க இச்சட்டத்தின் திருத்தம் வழிவகை செய்கிறது.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர். இவர்கள் தொடர்பாக 1964ல் இரு நாட்டுப் பிரதமர்களாலும் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம். 1974 இல் இந்திரா சிறிமா ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தங்களில் ஏற்றுக் கொண்டபடி சுமார் ஆறு லட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். எனினும் சுமார் 4,60,000 பேருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு அனைவருக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கியது. இதனடிப்படையில் இந்திய அரசு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி முகாம்களிலுள்ள சுமார் 45000 நாடற்றவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். முகாம்களில் உள்ளவர்களில் 90 சதவீதமானோர் நாடற்றவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.
சில முயற்சிகள்
இலங்கை அகதிகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேர்ந்தப் பூர்வீக இலங்கைத் தமிழர்.
2.இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள்.
3.இந்திய அரசிடம் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை பெற்று, இந்திய அரசின் சிவப்ப நிறக கடவுச் சீட்டு பெற்றவர்கள்.
4.இந்திய வம்சாவளித் தமிழர்கள், இழக்க கலவரங்கள் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறி, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள்.
இவர்களில் வடக்கு- கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் இல்லாத நாடற்றவர்களாக உள்ளனர்.

வாக்களிப்பு
சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம் 1964 இன்படி இந்தியக் குடியுரிமை பெற்று, அதற்கு ஆதாரமாக சிவப்பு நிற இந்தியக் கடவுச் சீட்டு பெற்ற சட்டப்படியான இந்தியர்களும் அகதிகளாக இருப்பதுதான் வேதனையும் வியப்பும் ஆகும். இவ்வாறு முறையான இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் முறையான வகையில் வராததால் அவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.
சமூக அக்கறையுடைய வழக்கறிஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்ததன் மூலம் முறையான இந்தியக் குடியுரிமை பெற்று வந்த 15 பேருக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது ஒரு சாதனை என்றால் அது மிகையாகாது.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரோமியோ ராய் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு ந. சரவணன் உள்ளிட்டோர் இதற்கான முன் முயற்சிகளை எடுத்து அகதிகளுக்கு இந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நீதி வேண்டும்…!
சுமார் அரை நூற்றாண்டு காலம் ஒரு லட்சம் பேரை அகதிகளாகவே வைத்திருப்பது கொடிய மனித உரிமை மீறல் அன்றி வேறென்ன? இந்தியர்களையே அவர்கள் இன்னொரு நாட்டுக்குப் போய் திரும்பி வந்த நிலையில் அகதிகளாகவே வைத்திருப்பது என்ன நியாயம்! இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்திய மண்ணில் பிறந்தவர்களையே 40 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வைத்திருக்கின்ற மனித குல விரோதச் செயலை இந்திய அரசு செய்து வருவதுதான். இது மட்டுமா.. சட்டப்படியும் ஒப்பந்தப்படியும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு, அதற்கு ஆதாரமாக இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர் களையும் இந்திய அரசு மிக நீண்ட காலமாக அகதி நிலையிலேயே வைத்திருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நோர்வே, ஆஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்று அனைத்து உரிமைகளோடு வாழ்கின்றனர். இந்திய நாட்டில் மட்டுமே இந்த அநீதி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம்.
அனைத்து ஜனநாயக சக்திகளும் மாநில மற்றும் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இனியும் காலம் கடத்தாது இக் கடமையை முன்னெடுக்க வேண்டும். நமது தொப்புள்கொடி இரத்த உறவுகள் என்ற உணர்வோடு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இப்பணியை உடனடியாகத் தொடங்க வேண்டியது அவசியம்.
— வழக்கறிஞர் தமிழகன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.