திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2024 !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2024 !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2024 நுண்கலை விழா நடைபெற்று வருகிறது. கல்லூரி துணை முதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் வரவேற்புரையாற்றினார். இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், அலுவலகர்கள் சங்கத் தலைவர் இளங்கோ சேவியர் ஜோதி, மாணவர் பேரவை குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் வாழ்த்துரையாற்றினார். வாழ்த்துரையில், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கல்லூரியில் தமிழரின் கலை, பண்பாட்டு விழுமியங்களை மாணவச் சமுதாயம் உணர்ந்து, தங்களது திறமையை வெளிப்படுத்தவே இன்டெப் 2023 என்கிற இந்தக்களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவதே இந்நிகழ்வின் வெற்றியாக அமையும் எனக்கூறி, வாழ்த்துரையாற்றினார்.
தொடா்ந்து, கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தம் வாழ்த்துரையில், கல்வி மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக வளாகம் முழுவதிலும் சிறப்பான பயிற்சி எடுத்து இன்று அரங்கிற்கு வந்துள்ள மாணவர்களுக்கும், உற்சாகப்படுத்த வருகை தந்துள்ள மாணவர்களுக்கும் தம்முடைய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகப் பதிவு செய்தார்.
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கிள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவா் தம் உரையில், சேசசபையின் நோக்கம் கல்வி முழுமை பெற வேண்டும் என்பதே. மாணவா்கள் நுண்கலைகளிலும் தோ்ச்சி பெறும்போதுதான் கல்வி முழுமை பெறுகிறது. அதுவே நமது நிரிவாகம் முன்னிறுத்தும் கல்வி முறையாகும். சிறு சிறு கோடுகளே பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தக் கலைத்திருவிழா மாணவா்களிடையே நுண்கலைகளால் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தட்டும் என்று வாழ்த்தி, தம் உரையை நிறைவு செய்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிந்தாமணிக் கிளையின் தழலமை மேலாளா் துளசிராமன் விழாவில் பங்கேற்று, கல்விக்கடன் பெற விண்ணப்பித்து இருந்த மாணவா்களுக்கு கல்விக்கடன் ஆணையை வழங்கினார். தொடக்க விழாவின் நிறைவில் மாணவர் பேரவைத் தலைவா் ஜோ.மோவின் ஜீவசுதன் மற்றும் நன்றியுரையாற்றினார். பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள், விளம்பர உருவாக்கம் உள்ளிட்ட பல போட்டிகள் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகின்றன.
இரண்டு நாள்களாக நடைபெறும் இவ்விழாவின் நிறைவு விழாவில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார். இன்டெப் 2024 நிகழ்வை கல்லூரி நுண்கலைக்குழு ஆலோசகர் அருள்முனைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிமி, மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்டு, முனைவா் வெர்ஜின் பிரேகா, முனைவர் அருள் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றனர்.
– யுகன் ஆதன்