பிரபல ஹோட்டல் பணியாளர் – மீட்கப்பட்ட ஐந்து மாத கர்ப்பிணி சிறுமி !
பிரபல ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து மாத கர்ப்பிணியான வடமாநிலச் சிறுமி
ஐந்து மாத கர்ப்பத்துடன், சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடமளிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணையை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் பகீரூட்டுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாரம்பரியமாக இயங்கி வரும் சைவ உணவுக்கு பெயர் போன கீதா உணவகத்தில் , 25-க்கும் அதிகமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கென்று பெரம்பலூரில் நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் அறைகளை ஹோட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, ஏற்கெனவே இங்கு தங்கி வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களின் சிபாரிசின் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இருவருக்கு வேலை வழங்கியிருக்கின்றனர். தனிப்பட்ட முறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க முடியாத நிலையில், ஹோட்டல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறைகளுள் ஒன்றிலேயே அவர்கள் இருவரும் தங்க வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
அதாவது, பணியாட்கள் 5 பேர் சேர்ந்து ஒன்றாக தங்கும் அறைகளுள் ஒன்றில், இந்த இளம் தம்பதியினரையும் தங்க வைத்தனர் என்கிறார்கள். வேலைக்கு வரும்பொழுதே, நான்கு மாத கர்ப்பத்துடன்தான் வந்திருக்கிறார் அந்த இளம்பெண். ஆனாலும், மற்ற ஆண்கள் தங்கியிருக்கும் அந்த அறையில்தான் தனது துணையுடன் தங்கியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் ஒரு மாதத்தை ஓட்டியிருக்கிறார். கூடவே, மொழி பிரச்சினை காரணமாக வேலைகளை சரியாக செய்ய முடியாத சிக்கலையும் எதிர்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஐந்து மாத கர்ப்பத்துடன் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது துணையுடன், வடமாநில இளைஞர்கள் தங்கியிருக்கும் அறையைப் பகிர்ந்து தங்கிவரும் தகவல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அவர்களும் அந்த பெண்ணை மீட்டு விசாரணையை நடத்திவருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக, பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டு பேசினோம். “விசயம் எங்களது கவனத்திற்கு வந்த உடனே அந்த பெண்ணை மீட்டு விசாரணையைத் தொடங்கிவிட்டோம். அந்த பெண் எங்களது பாதுகாப்பில்தான் இருந்து வருகிறார். மொழி பிரச்சினை காரணமாக மொழிபெயர்ப்பாளர் ஒருவரை உடன்வைத்துதான் அவரிடமிருந்து தகவல்களை சேகரித்து வருகிறோம். அவரது வயதை உறுதி செய்வதில் சிக்கல் இருந்தது.
அவர்கள் கைவசம் வைத்திருக்கும் வங்கி கணக்குப்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களின்படி 18 வயதை நிறைவடைந்தவர் என்பதாக இருக்கிறது. ஆனாலும், எங்களது முயற்சியில் அவரது பிறப்புச்சான்றை வாங்கி சரிபார்த்த பிறகே, அவர் 18 வயதுக்குக் கீழான சிறுமி என்பதை உறுதிபடுத்தியிருக்கிறோம். இது, சீரியசான பிரச்சினைதான். உரிய அக்கறை எடுத்தே இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறோம்.” என்கிறார்கள்.
சர்ச்சைக்குள்ளான ஹோட்டல் உரிமையாளரை தொடர்புகொண்டோம், “ஏஜென்சி வழியாகத்தான் அந்த இருவரையும் வேலைக்கு அமர்த்தினோம். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களின்படி 18 வயதை நிறைவு செய்தவர்கள் என்பதால் வேலைக்கு அமர்த்தினோம். அடுத்தடுத்து இருந்த மூன்று அறைகளில் அவர்களைப்போல வடமாநிலத் தொழிலாளர்கள்தான் தங்கியிருக்கின்றனர்.
அதில் அறை ஒன்றில் அவர்களைத் தங்க வைத்திருந்தோம். தற்போது, பிரச்சினையானதைத் தொடர்ந்து வேலையைவிட்டு நீக்கிவிட்டோம்.” என்றார்.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய அந்த பெண் 18 வயதை பூர்த்தி செய்தவரா? என்பதை தகுந்த ஆதாரங்களிலிருந்து உறுதிபடுத்தாமலேயே, எப்படி வேலைக்கு அமர்த்தினார்கள்? வரும்பொழுதே நான்கு மாத கர்ப்பிணி. உடன் அழைத்து வந்தவர் அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்தானா? என்பதை உறுதிப்படுத்தாமலேயே எப்படி வேலைக்கு அமர்த்தினார்கள்? அடுத்த விசயம், வடமாநிலத்தவர்கள் தங்கியிருக்கும் இடமாக இருந்தாலும், இளைஞர்கள் தங்கும் இடத்தில், இந்த இளம் தம்பதியினரையும் அவர்களுடன் ஒன்றாக எப்படி தங்க வைத்தார்கள்? என்பவையெல்லாம், அந்தக் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிரான குறிப்பான குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன.
பொதுவில் பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துவது அந்தந்த நிறுவனத்தின் பொறுப்பு என்ற நிலையில், அதிலும் குறிப்பாக வடமாநிலத்திலிருந்து வரவழைக்கப்படும் இளம்பெண்கள் விசயத்தில் இன்னும் கூடுதலான அக்கறைதான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக, ஆண்கள் தங்கியிருக்கும் ஒரே வீட்டின் அடுத்தடுத்த அறைகளுள் ஒன்றில் சிறுமியைத் தங்க வைக்கப்பட்டதை இயல்பான ஒன்றாக கடந்து போக முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமுறை கடந்து பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஹோட்டல் என்பதும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டு அரசுத்துறை உயர் அதிகாரிகள், போலீசு உயர் அதிகாரிகள் பலரும் இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள் என்பதும் இந்த விவகாரம் தெரிந்தும் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி சரிசெய்துவிடலாம் என்ற தைரியத்தில் இப்பிரச்சினையை அவர் அணுகிவருவதாகவும் சொல்கிறார்கள்.
வயிற்றுப்பிழைப்புக்காக வடமாநிலத்தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வந்ததை நாம் குறைசொல்வதிற்கில்லை. குறிப்பாக, தமிழகத்தில் ”தூணிலும் இருப்பார்கள் துரும்பிலும் இருப்பார்கள்” என்று சொல்லுமளவுக்கு வடமாநிலத் தொழிலாளர்களை அனைத்து துறைகளிலுமே காண முடிகிறது. அங்கிருந்து இங்கு வந்து கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி செய்துவிட்டு தப்பிவிடுகிறார்கள் என்று இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் அவ்வப்பொழுது எழத்தான் செய்கிறது.
இந்தப் பின்னணியிலிருந்து, வடமாநிலத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் அந்தந்த நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களைக்கூட சேகரித்து வைக்காமல் அவர்களை பணிக்கு அமர்த்துவதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்வதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள் எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக சொல்கிறார்கள்.
குறிப்பாக, வடமாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த இளம்பெண்கள் எங்கெல்லாம் பணியாற்றிவருகிறார்கள் என்பதை கண்டறிந்து, அங்கெல்லாம் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் என்றில்லை, தமிழகம் முழுவதிலுமே வடமாநிலத் தொழிலாளர்களை கையாளுவது குறித்து ஒருங்கிணைந்த முறையிலான புரிதல் – வழிகாட்டுதலும் தொடர்ச்சியான கண்காணிப்பு முறைகளும் அவசியமான ஒன்று என்பதையே இந்தக் குறிப்பான சம்பவம் சுட்டுகிறது.
– அங்குசம் புலனாய்வு குழு.