வன்முறையா? மக்கள் கிளர்ச்சியா? பதட்டத்தில் ஐரோப்பிய நாடுகள்
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட 9 ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஒருபுறம், உக்ரைன் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. மறுபுறம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. உயிர்வாழ்வதற்கே வழியில்லாத நிலையில்தான், உயிர்வாழும் உரிமைக்கான போராட்டமாக, கிளர்ச்சியாக வீதியெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்பியது.
பிரான்ஸின் லிமோஜஸ் (Limoges) நகரில் அமைந்துள்ள 140 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்ட பழைமையான நகராட்சி அலுவலகம் தீக்கிரையாகின. ஆப்பிள், லூயி விட்டான் (Louis Vuitton), ஹெர்மேஸ் (Hermès) போன்ற பன்னாட்டு ஆடம்பர வணிக நிறுவனங்களின் ஷோரூம்கள் குறிவைத்து தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன.
இந்நிகழ்வுகளை கலவரம் என்பதா? இல்லை, மக்களின் எழுச்சி, மக்களின் புரட்சி என்பதா? ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் கோபமாக வீதியில் எதிரொலிப்பதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கான விடையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், முதலில் போராடும் மக்கள் பிரிவினர் யார்? அரசின் செயல்பாடுகள் ஏன் மக்களை ஆத்திரமூட்டுகிறது? பெருந்திரள் மக்களின் கோபத்திற்கு ஆளாவோர் யார்? வன்முறைக்கு இலக்காவது எது? என்பதை கவனமாக பரிசீலித்தால் மட்டுமே அந்த சிக்கலான உண்மையை நம்மால் கண்டுணர முடியும்.
இல்லையேல், ஆளும் தரப்பு சொல்வதைப்போல மக்கள் வன்முறை என்பதாக ஒற்றை வரியில் எல்லாவற்றையும் தட்டையாக புரிந்துகொள்ளும் பரிதாபத்திற்கு பலியாகிவிடுவோம்.

பிரான்சின் தேசிய புள்ளிவிவர அமைப்பு (INSEE) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, பிரான்சின் அரசுக் கடன் 2024ஆம் ஆண்டின் GDP-யில் 112.6% என்ற அளவிலிருந்து 2025இல் 115.6% ஆக உயர்ந்தது. அதேவேளை, நிதிப் பற்றாக்குறை 2024இல் 5.8% ஆக இருந்த நிலையில் 2025இல் 5.1% ஆகக் குறைந்தது.
பிரான்சின் கடன் சுமை அதிகரிக்கிறது. இதுவரை வாங்கிய கடனுக்காக திரும்பச் செலுத்தும் வட்டிக்கான செலவுகள் எதிர்கால நிதிநிலையை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஆண்டு வரவு – செலவு நிதிநிலை திட்டங்களில் இந்த பற்றாக்குறை எதிரொலிக்கிறது. இது நேரடியாக மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவினங்களை படிப்படியாக குறைப்பதில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.
குறிப்பாக, பிரான்சில் பள்ளிகளின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய கல்வி வளங்கள் இல்லாமைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களிடம் 3000 தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசு, அதற்கு நேர் மாறாக 141 பள்ளிகளை மூடுகிறது என்றால் மக்களின் கோபம் வீதிகளில் எதிரொலிக்காமல் எங்கே எதிரொலிக்கும்?
1848 ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் ஒரே நேரத்தில் வெடித்த புரட்சிகளை தற்போதைய நெருக்கடி நினைவுபடுத்துகிறது. அன்றைய காலகட்டத்தில், தொழில்துறை புரட்சியின் காரணமாக உருவான புதிய தொழிலாளி வர்க்கம் (Proletariat) மிகவும் மோசமான சூழலில், குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான கொடுமையை கண்முன் நிறுத்துகிறது.
தனிமனித சுதந்திரம், சமத்துவம் மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியம் போன்ற சிந்தனைகள் முளைவிடத் தொடங்கிய, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க கால அரசியல் சூழலை எதிரொலிக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், ஒருபுறம் பொருளாதார நெருக்கடி எனும் பெயரில் வாழவே தகுதியற்ற நிலைக்கு பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் ஆளாக்கப்படுவதும்; மறுபுறம், பன்னாட்டு வணிக நிறுவனங்களின் வரைமுறையற்ற வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாட்டைத்தான் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் எழுச்சி பட்டவர்த்தனமாக்கியிருக்கின்றன.
— தேவராஜ் தனசேகர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.