அன்பில் மகேஷை அதிர வைத்த வீடியோ !

தனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், “முன்ஜாமீன் வேண்டுமானால் போடுங்களேன்” என நீதிபதி ஒருமுறைக்கு இருமுறை அழுத்தம் கொடுத்தும், அந்த இடத்துக்கே அன்பில் மகேஷ் போகவில்லையாம்.

காரணம், ஒருவேளை முன்ஜாமீன் கோரிக்கையோடு நீதிமன்றத்தை அணுகி, தரமறுத்துவிட்டால், ஜெயில் கட்டாயம் என்பதால்தான் அந்த முடிவாம். நிலைமையின் போக்கை கணித்து, முன்ஜாமீன் முடிவுக்கும் வந்திருக்கிறதாம். அதுவும் வழக்கு விசாரணைக்கு நெருங்கிவரும் நிலையில், வெளியான வீடியோ, எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றும்விதமாக பற்றியெறிகிறது.

அரசக்குமாரிடமிருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. பிறகு, மெல்ல முத்துக்குமார் பக்கம் திரும்பியது. கடைசியாக, அமைச்சர் அன்பில் மகேஷின் மனைவி ஜனனி வரையில் வந்து நின்றது.

அரசக்குமார் போலீஸ் வசம். முத்துக்குமார் தலைமறைவு. இந்நிலையில்தான், முத்துக்குமாரின் வலதுகரமான சுரேஷை தட்டித்தூக்கியிருந்தது போலீசு. இந்த பின்புலத்திலிருந்துதான், சுரேஷ் வழியாக பதிவு செய்யப்பட்ட விவகாரமான வீடியோ வைரலாகியிருக்கிறது.

“இதுல பணம் இருக்கு… மினிஸ்டர் வீட்டுக்கு போகப்போகுது” என்று சுரேஷ் பேசுவதிலிருந்து வீடியோ தொடங்குகிறது. பணம் எடுத்துச் செல்லப்படும் காரின் எண்; மஞ்சள் நிற கட்டைப்பையை வைத்து நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்ட பண்டல் என எல்லாமே வீடியோ பதிவுகளாக விரிகிறது.

போலீஸ்காரர் ஒருவர் முத்துக்குமாருக்கு கொடுக்கும் கடிதம், அதன் முகப்பில் உள்ள முகவரிகூட வீடியோவில் பதிவாகிறது. முத்துக்குமாரின் விசிட்டிங் கார்டு காட்டப்படுகிறது. ஆடியோ இல்லாத, அன்பில் மகேஷ் பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது. 420 கோடி ரூபாய் வசூலானது பற்றி, செய்தியாளர்கள் நேரலையில் விவரிப்பதை போல விலாவரியாக விவரிக்கிறார், சுரேஷ். முத்துக்குமார் உயிருக்கு ஆபத்து என்கிறார்.

அன்பில் மகேஷின் பள்ளித் தோழன் முத்துக்குமார். முத்துக்குமாரின் உதவியாளர் சுரேஷ். அந்த பழக்கத்தில், கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு குருவியாக பயணப்பட்டிருக்கிறார் சுரேஷ். இந்த பின்புலத்திலிருந்துதான், சுரேஷ் எதற்கும் ஆகட்டும் என்று இந்த வீடியோக்களை எடுத்து வைத்திருக்கிறார். அன்பில் மகேஷ் ஜனனியிடம் தனிப்பட்ட முறையில் 1.5 இலட்சம் பணம் உதவியாக கேட்டதாகவும்; அதற்கு ஜனனி கடுமையாக திட்டி விட்டதாகவும்; அந்த கோபத்தில்தான் இப்படி வீடியோ எடுத்து வைத்தார் என்பதாக ஒரு தரப்பில் சொல்கிறார்கள்.

ஆனால், கோடிகளை கையாண்ட சுரேஷுக்கு இலட்சம் பெரிய விசயமே இல்லை. அதுவும் முத்துக்குமாரிடமே கேட்டிருக்கலாம். ஜனனியிடம்தான் கேட்க வேண்டும் என்றில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் பிளாக்மெயில் விவகாரத்துக்கும் பயன்படலாம் என நினைத்து எடுத்தாரோ, என்னவோ? எதுவாயினும், இந்த வீடியோ அன்பில் மகேஷ் பொய்யாமொழி – ஜனனி தம்பதியினரின் கைது நடவடிக்கையை நோக்கிய நகர்வின் முதல் கட்டமாக வெளியாகியிருக்கிறதோ, என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியிருக்கிறது.

—        அங்குசம் புலனாய்வுக்குழு.

Comments are closed, but trackbacks and pingbacks are open.