மாற்றுச்சான்றிதழில் பாரபட்சம் ! கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் முறையிட்ட மாணவர்கள் !
திருச்சி துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
அக்கல்லூரி மாற்றுச் சான்றிதழில் கல்லூரியில் உள்ள 16 துறையை சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தை மற்றும் குணம் என்ற பகுதியில் நன்று (GOOD) என்று பதியப்பட்டும் அரசியல் அறிவியல் மற்றும் சமூக பணித்துறை ஆகிய இரு துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அவர்களது கல்லூரி மாற்றுச் சான்றிதழில் நடத்தை மற்றும் குணம் என்ற இடத்தில் திருப்திகரமானது என்று பொருள் கொள்ளக்கூடிய வகையில் Satisfactory என்றும் கல்லூரியின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி மாணவர்களது தரப்பிலிருந்து நேற்று கல்லூரி முதல்வர் அவர்களிடம் முறையிடப்பட்டது. ஆனால் கல்லூரி முதல்வர் அவர்கள் இது தமிழ்நாடு அரசின் கணினி துறையின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு என்றும் திருப்திகரம் என்பதும் நன்று என்பதும் ஒன்றுதான் என்றும், இதற்கு மேல் இதை எதுவும் செய்ய முடியாது என்றும், எனவே மாணவர்கள் அவரது மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு ஒழுங்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே மாணவர்கள் தங்களுக்கு நன்று என்று மாற்றுச் சான்றிதழில் மாற்றித் தரும்படி எவ்வளவோ முறையிட்டும் முதல்வர் அவர்கள் மறுத்துவிட்ட காரணத்தால்,
மாணவர்கள் 11.07.2025 வெள்ளிக்கிழமை அன்று திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சென்று கல்லூரி இணை இயக்குனர் முனைவர். பொன் முத்துராமலிங்கம் அவர்களை சந்தித்து தங்களது குறைகளை முறையிட்டனர்.
மாணவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டறிந்த கல்லூரி கல்வி இணை இயக்குனர் துவாக்குடி அரசு கல்லூரி முதல்வர் சத்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டார்.
மாணவர்களது நலனே முக்கியம் என்றும், உடனடியாக மாற்றுச் சான்றிதழில் மாணவர்கள் கேட்டவாறு நன்று என்று மாற்றித் தருமாறு உத்தரவிட்டார்.
மேலும் காழ்ப்புணர்வுடன் இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது என்றும் இதுபோன்று இனிமேல் நடந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மாணவர் நலன் கருதி இந்திய மாணவர் சங்கத்தினை சேர்ந்த மாணவர் தலைவர்கள் வைரவளவன் மற்றும் ஆமோஸ் ஆகியோர் தலைமையில் மாற்றுச் சான்றிதழை மாற்றித் தரும்படி வழி நடத்தி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.