சமஸ்கிருத – இந்துத்துவாவுக்கு எதிராக தமிழர் ஆன்மிகம் என்ற ஆயுதத்தை அரசு எடுக்க வேண்டும் ! தமிழ் ராஜேந்திரன் கோரிக்கை !
”கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் எதிர்வரும் பிப்-10 அன்று கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், தமிழ் பற்றாளர்களின் வேண்டுகோள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரியும்; தற்போது இந்துத்துவாவுக்கு சமஸ்கிருத மதவெறிக்கு எதிராக தமிழர் ஆன்மிகம் என்ற ஆயுதத்தை எடுப்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்” என்ற வேண்டுகோளை விடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், தமிழர் ஆன்மீக இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞரும் தமிழ் ஆர்வலருமான தமிழ் ராஜேந்திரன்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்துத்துவா என்கிற சனாதன நால் வருண மனித குலத்திற்கு எதிரான கொள்கையுடைய பிஜேபி கட்சியினரின் போலி ஆன்மீக வேடத்தை தோல் உரித்துக் காட்ட தந்தை பெரியாரின் கண்ணோட்டத்துடன் வடலூர் வள்ளலார் திருவள்ளுவர் மற்றும் சித்தர்கள் வலியுறுத்தும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் சாதிகள் இல்லையடி பாப்பா யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சிறந்த தமிழ் ஆன்மீக தத்துவத்தை புரிந்து கொண்டு ஏற்ற அறிஞர் அண்ணாவின் வழியில் செயல்படும் தமிழர் ஆன்மீகவாதிகளை ஆதரித்து தமிழர் ஆன்மீக சித்தாந்தத்தை இந்துத்துவா மதவெறி சித்தாந்தத்துக்கு மாற்றாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியது இந்த காலத்தின் கட்டாயமாகும் என்பதை உணர்ந்து செயல்படுமாறு தி.மு.க.வினருக்கு அறிவுறுத்துங்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தந்தை பெரியார் அவருடைய காலத்துக்கு ஏற்ற சூழ்நிலையில் கடவுள் இல்லை என்று ஆயுதத்தை எடுத்தார். ஆனால், தற்போது இந்துத்துவாவுக்கு சமஸ்கிருத மதவெறிக்கு எதிராக தமிழர் ஆன்மிகம் என்ற ஆயுதத்தை எடுப்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை தாங்கள் கவனித்து செயல்படுத்துமாறு மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய கச்சேரி வீதியில் தற்போதைய திருமகன் ஈவேரா வீதியில் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்துடன் இந்த ஆலோசனையை வழங்குகிறேன்.
நான் 2002 ஆம் ஆண்டில் கரூர் திருமுக்கூடலூர் மணிமுத்து ஈஸ்வரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவன். மேலும், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கில் தமிழ் பயன்படுத்தப்பட மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவன்.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தமிழர்கள் ஏறி தேவாரம் திருவாசகம் உட்பட்ட தமிழ் பாடல்களைப் பாட போராடி உரிமை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒருவன். கரூர் பசுபதீஸ்வரர் ஆலய குடமுழுக்கில் தமிழ் பயன்படுத்தப்பட போராடியவர்களில் ஒருவன். பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் குடமுழுக்கில் தமிழை பயன்படுத்த வழக்கு தொடுத்தவர் நான் என்ற வகையில் தமிழர் ஆன்மீகம் தழைக்க பாடுபடும் தமிழ் ராஜேந்திரன் என்ற உரிமையில் தங்களிடம் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
தற்போது, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி தமிழ் பற்றாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்களும் தமிழ் முறை குடமுழுக்கு நடத்த ஆதரவாக உள்ளன. எனவே 10.02.2025 தேதியில் நடைபெற உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட உத்திர விடுங்கள்.” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார், வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன்.
— அங்குசம் செய்திப்பிரிவு.