தொடரும் கோவில் திருட்டுகள்! மர்ம நபர்கள் கைவரிசை ! போலீஸ் தீவிர விசாரணை!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டி மற்றும் தெற்கியூர் பகுதிகளில் உள்ள அடுத்தடுத்த மாரியம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காளிப்பட்டி பகுதியில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கோவிலின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 3 சவரன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள தெற்கியூர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 5 சவரன் தாலிக்கொடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் உண்டியலில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்களை விட்டுவிட்டு, ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளை மட்டும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து கோவில்களில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன் காளிப்பட்டியில் இதே கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.