சினிமாவின் கவர்ச்சி என்பது இருண்ட வானில் தோன்றும் மத்தாப்பு. !
சினிமாவின் கவர்ச்சி என்பது இருண்ட வானில் தோன்றும் மத்தாப்பு. சினிமாவில் கோடிக்கணக்கில் பணத்தை விட்ட பல நண்பர்களை எனக்கு தெரியும். அதிலும் பலர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். வாழ்வின் அடிமட்டத்திலிருந்து அரும்பாடு பட்டு ஒரு இடத்திற்கு முன்னேறி வந்து சேர்த்த பணத்தை இங்கு வந்து கோட்டை விட்டுவிட்டு போய் இருக்கிறார்கள்.
அவர்கள் நெஞ்சில் ஆழத்தில் இருக்கும் சினிமா என்ற கனவை நிறைவேற்றும் ஆசையில் ஆள் தெரியாமல், பாதை தெரியாமல் உள்ளே வந்து அங்கிருக்கும் இடைநிலை ஆட்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் காட்சியை பலமுறை பார்த்து விட்டேன்.
அவர்கள் இந்த கதையை என்னிடம் சொல்த் தொடங்கும் போது அவர்களின் கடைசி ரூபாய் வரை இழந்திருப்பார்கள். இரண்டு கோடியில் ஒரு படம் பண்ணலாம் என அழைத்து போய் அவர்களை ஐந்தாறு கோடி ரூபாய் வரைக்கும் புதை குழியில் இறக்கி அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவார்கள்.
கதை என்ற பெயரில் எதையோ செய்து, நடிப்பு என்ற பெயரில் எதையோ செய்து, கடைசியில் அந்த படம் எதிலும் சேர்த்தி இல்லாமல் உருவாகி நிற்கும். எங்கும் வியாபாரம் ஆகாது. ப்ரிவியூ ஷோகள் துக்கவீடுபோல இருக்கும். வழிப்பறியில் பணத்தை பறிகொடுத்தது போல அங்கும் இங்கும் அலைமோதி கொஞ்ச நாளில் காணாமல் போய்விடுவார்கள்.
எனக்கு தனிப்பட்ட முறையில் மிக நன்றாகத் தெரிந்து பத்து பதினைந்து பேருக்கு இது நடந்திருக்கிறது. நாம் திரையில் கண்ணால் காணும் காட்சி அல்ல சினிமா. அதற்கு பின்னால் இருக்கும் ஏமாற்று வேலைகளும் மோசடிகளும் குற்றங்களும் இந்த அளவு வேறு தொழில்களில் இருக்குமா என்று தெரியவில்லை.
நான் 25 வருடங்களாக பதிப்புத்தொழில் இருக்கிறேன் யாராவது ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்ய முன் வந்தால் இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு எவ்வளவோ நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும் என்று யோசித்து இருக்கிறேன். ஆனால் அப்படி ஒருவரை நான் சந்தித்ததே இல்லை.
ஆனால் சினிமாவில் முகம் தெரியாத நபர்கள் பணம் வைத்திருப்பவர்களை எப்படியோ வலைவீசி மடக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களை தங்களது திட்டத்திற்குள் கொண்டு வருகிறார்கள். முடிந்தவரை எடுத்துக் கொண்டு அப்படியே மறைந்து விடுகிறார்கள்.
சினிமாவின் கவர்ச்சி என்பது இருண்ட வானில் தோன்றும் மத்தாப்பு.