திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு? தொடர் 2
திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு?
தொடர்- 2
அனலின் கொடுமை தாளாமல் மரந்தேடிய நான் தற்போதைய திருச்சி வண்ணாரபேட்டை வழியாக நடந்து ஆறுகண் குழுமாயி அம்மன் கோயில் அருகிலுள்ள ஆலமரத்தில் இளைப்பாறி கொண்டிருந்தேன்.
சென்ற வாரம் தன் கதையை சொன்ன உய்யக்கொண்டான் வறட்சியாக என்னை பார்த்து சிரித்தான். வந்து விட்டாயா… மகிழ்ச்சி என்றான். நானும் மெலிதாய் சிரித்து வைத்தேன். உன்னிடம் போனவாரம் பேசிக்கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது… வா… உட்கார்… இந்த வாரம் இந்த திருச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்கிறேன் என தொடங்கினான்….
எங்கள் அன்னை காவிரியின் தண்ணீரெல்லாம் அதிகமாக கடலில் கலந்ததாலும், வெள்ளக்காலங்களில் நீரின் மிகுதி வீணாவதாலும் இந்த இரண்டிற்குமான தீர்வை யோசித்த எம் மன்னன் இராஜராஜசோழன் வெட்டுவாய்த்தலையில் இருந்து என்னை வெட்ட ஆரம்பித்தான்.
ஆம் இன்றைய பேட்டைவாய்த்தலையே அன்று வெட்டுவாய்த்தலை. என்னை அப்பகுதி மக்களை கொண்டு வெட்ட ஆரம்பித்த பகுதி. அதான் என் தலைப்பகுதி. கால போக்கில் அந்த ஊரின் பெயர் மருவி பெட்டவாய்த்தலையாக உள்ளது. (பல ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் மாயனூர் தடுப்பணை கட்டப்பட்ட பின்பு உய்யக்கொண்டான் நேரடியாக அதில் இணைக்கப்பட்டுவிட்டது)
தமிழகத்தில் சூழல் சார்ந்து மத்திய மண்டலத்தில் பல்வேறு வகை சிறப்பான ஊரான திருச்சி மாவட்டத்தில் நான் வாழ்வதில் பெருமையடைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், என்னையே பயன்படுத்தி வளம் கண்டவர்களெல்லாம் இன்று என் மீது ஏற்படுத்தும் காயங்கள் ஏராளம். அவர்களுடைய தொழில் நுட்ப வளர்ச்சியோ, முன்னேற்றமோ ஏதும் உருப்படியாக எனக்கு செய்யவில்லை.
வெட்டுவாய்த்தலையிலிருந்து வெட்டப்பட்ட நான் பெருகமணி, அணலை, திருப்பராய்த்துறை, கொடியாலம் வழியாக வந்து புலிவலம் எனும் இடத்தில் கொடிங்கால் என்ற என் சகோதரனை என்னில் இருந்து பிரித்து விடுகிறேன்.
பின்பு அவன் நெய்தலூர், நச்சலூர், குழுமணி, சின்னகருப்பூர், பெரிய கருப்பூர் வழியாக சோமரசம்பேட்டை அருகே உள்ள அய்யாளம்மன் படித்துறை அருகே என் அன்னை காவிரியுடனே சேர்ந்து விடுகிறான், மேலே உள்ள ஊர்களில் கழனிகளை செழிக்க வைத்த அவன் என் சோதரன் என்பதில் எனக்கு பெருமையே.
நானோ புலிவலத்தில் இருந்து அய்யாப்பேட்டை, கோப்பு, எட்டரை, முள்ளிக்கருப்பூர், அதவத்தூர், ஆதிவயலூர் (குமார வயலூர்), அல்லித்துறை, இளைய நல்லூர் வழியாக சென்று மீண்டும் ஊமச்சிகுறிச்சி(ஆறுகண்) என்னுமிடத்தில் என்னுடைய மற்றொரு சகோதரரான குடமுருட்டியை பிரித்து விடுகிறேன்.
தேராவூரில் உள்ள தென்னம்பாடி பெரிய குளத்தில் (தேரா குளம்) இருந்து ஓலையூர் வழியாக ஊமச்சிகுறிஞ்சிக்கு வந்து சேரும் கோரை எனும் சகோதரனும், புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் வழியாக வரும் மாமுண்டியையும் இணைத்து கொள்கிறான். மாமுண்டியை காட்டுப்பய என எல்லோரும் திட்டுவாங்க… ( காட்டு பகுதியினால் நிரம்பக்கூடிய குளங்களில் இருந்தோ அல்லது நேரடியாக மழைநீராகவோ வருவதினால் காட்டாறு என பெயர் பெற்றான்)
கோரையும் மாமுண்டியும், சீனிவாச நகர், கீதா நகர், உய்யங்கொண்டான் திருமலை, சோழன் பாறை, உறையூர் வழியாக கொடிங்கால் வாய்க்காலுடன் அய்யாளம்மன் படித்துறையில் என் அண்னை காவிரியுடன் சேர்ந்து விடுகிறார்கள். இவர்களாலும் பல கழனிகள் பாசனம் பெற்று, பலரின் பசியாற்றுகிறார்கள். ஊமச்சிகுறிஞ்சியில் இருந்து மீண்டும் நடக்க ஆரம்பித்த நான் புத்தூர், பீமநகர், திருவெறும்பூர், வரகனேரி வழியாக சென்று தற்போதைய தஞ்சை மாவட்டத்துக்குள் நுழைகிறேன்.
தஞ்சைக்கு வளம் சேர்க்க எவ்வளவோ பேர் என் அன்னை காவிரி உள்பட இருந்தாலும் என்னாலும் முடிந்தவரை நானும் பயன் தருகிறேன்.
பூதலூர், விண்ணனூர்பட்டி, ஐயனார்புரம் ஆகிய பகுதிகளில் நடந்து செல்கிறேன். 54 மைல் 2 பர்லாங் 40 அடி (கிட்டத்தட்ட 87 கி.மீ.) தூரத்தை உடைய நான் எனக்கு வடக்கு பகுதிகளில் உள்ள 23 ஆயிரத்து 742 ஏக்கர் கழனிகளை பாசனம் செய்ய உதவி செய்கிறேன்.
நான் ஏற்கனவே கூறியது போல, திருச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பாக இருந்தது. இதனால் பாசனத்துக்கும் கோடையில் குடிநீர் தேவையும் நிவர்த்தி செய்ய மன்னன் இராஜராஜன் மக்களின் கவலையை போக்கும் வகையில் என்னை உருவாக்கி, எனக்கு தெற்கு பகுதியில் பொழியும் மழைநீரினை என்னுடன் கலக்கும்படி வடிகால்களை வெட்டினான். அவ்வாறு வரும் மழை வெள்ளத்தில் நான் மூழ்கிடுவேனோ என்று நினைத்தவன் என் பாதையில் இரு இடங்களில் எனது இருசகோதரன்களையும் உருவாக்கி அவர்களையும் என் அன்னை காவிரியை சென்று சேரும்படி செய்தான்.
இதனால் மழை நீர் செல்வது ஒழுங்குபடுத்தப்பட்ட திருச்சி பகுதி வெள்ளத்தில் மூழ்குவது காக்கப்பட்டது. எனது வடக்கு பகுதியில் மழை நீர் செல்லாத காரணத்தால் அப்பகுதிக்கான விவசாயத்திற்கு என்னை பயன்படுத்தி நெல் மட்டுமின்றி, வெற்றிலை கொடிக்கால், வாழை பல பயிர்கள் பயிரிட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழும்படியும் செய்தான்.
அவ்வாறு நான் நன்றாக வாழ்ந்த காலத்தில் விளையும் பயிர்களை கொண்டு வணிகம் செய்து மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். என் மீது பரிசல் சவாரியில் ஒய்யாரமாக சென் றனர் திருச்சிவாசிகள்.
நீ இன்று பார்ப்பவை அனைத்தும் எத்தனை மோசம் என்று நான் சொல்லும் இந்த விசயத்தை யோசித்து பார்த்தாயானால் புரியும். உதாரணமாக ஊமச்சிகுறிச்சி (ஆறுகண்) பகுதியிலிருந்து காவிரி அய்யாளம்மன் படித்துறைக்கு என் மீது பரிசல் பயணம் செய்தனர். ஆனால், இன்று என்னை சாக்கடையாலும், கழிவுகளை கொட்டியும் என்னை நாசம் செய்கிறார்கள். என் நினைவுகளை அசைபோட வைத்த உனக்கு நன்றி… நான் யாராலெல்லாம் கஷ்டபடுகிறேன் எனும் கதையை அடுத்த வாரம் சொல்கிறேன்.
நீ சென்று ஓய்வெடுத்துக்கொண்டு வா…
மீண்டும் சந்திப்போம்…