எம்.ஜி.ஆரின் வரிபாக்கி
10.3.1972 அன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியவர் அவருடைய தீவிர ரசிகர் திண்டிவனம் இரா.ஷெரிப். 40 ஆயிரம் மதிப்புள்ள தன்னுடைய வீட்டை விற்று அந்த பணத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு கொடுப்பதாகவும் அதைக்கொண்டு எம்.ஜி.ஆருக்கு இருக்கும் வருமானவரி பாக்கியை கட்டிக்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல் பல கடிதங்கள் தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆரை நோக்கி படையெடுத்தன.
அந்த கடிதங்களை எழுதியவர்கள் ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் என ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களை எழுத்தாக்கி இருந்தனர். மேலும் ஒவ்வொரு எம்.ஜி.ஆர் மன்றமும் ரூ.500-ஐ மக்கள் திலகம் எம்ஜிஆர் பெயருக்கு அனுப்புவதாக சொன்னார்கள். எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர் படித்தார்.
பத்திரிக்கைகளில் எம்.ஜி.ஆரின் வரிபாக்கியைப்பற்றி சில செய்திகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. எம்.ஜி.ஆருக்கு எதிராக எதிரிகள் வீசிய கத்தி அவருக்கு மாலையாகி போனது. ஆம்! ரசிகர்கள் எம்ஜிஆரை தவறாக நினைப்பதற்கு பதில் அவர் மீது பரிதாபப்பட்டனர். ரசிகர்கள் கையிலிருக்கும் பணத்தை கொடுக்கவும் சொத்துக்களை விற்கவும் தயார் என்றனர்.
இதைக் கேட்ட ஒரு முஸ்லீம் தாய் தன் மகனை அழைத்து ‘அப்பா, உன் அண்ணன் எம்.ஜி.ஆர் வரி கட்டாமல் இருக்கிறாராமே. அவர் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஊருக்குத் தர்மம் செய்துவிட்டு இன்று இந்த சோதனையில் சிக்கிவிட்டார். நாம் நம் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிவிடுவோம். அவர் நம் சொத்தை விற்று வருமான வரியை கட்டி விடட்டும் என்றார்.
மகனையும் தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியாகத்தானே அந்தத் தாய் வளர்த்திருப்பார். அப்படியிருக்கும்போது மகன் மறுப்பாரா சம்மதித்துவிட்டார். உடனே பத்திரம் எம்ஜிஆர் பெயருக்கு மாற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர், அவர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து பத்திரத்தை அவர்களிடமே திருப்பி அனுப்பி வைத்து பதில் எழுதினார். சொத்துகளை மாற்றவேண்டாம் என்றும் தெரிவித்துவிட்டார். நேரில் போய் பார்த்து அந்தத்தாயாரிடம் பேசவும் விரும்பினார்.
ஒரு நாள் அந்தத் தாய் மரணப்படுக்கையில் இருப்பதால் கடைசியாக ஒருமுறை தன் மகனைப் பார்க்க விரும்புவதாக எம்.ஜிஆருக்குக் கடிதம் வந்தது. இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என்று எம்.ஜி.ஆர் புறப்பட்டுச் சென்று அந்த அன்புத்தாயை நேரில் சந்தித்தார். மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் அந்தத்தாய் தன் வாழ்வை நிறைவுசெய்தார்.
மொத்தத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தமிழக மக்களுக்கு தலைவராகி, கடவுளாகி இருந்தார்.
– ஹரிகிருஷ்ணன்