பக்கவாதத்திற்கு பின் வரும் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை
இரத்தக் குழாய் அடைப்பினால் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டவர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு வந்தால், செய்யப்படும் சிகிச்சை முறைப் பற்றி பார்ப்போம்.
பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறோம்.
1.அடைபட்ட இரத்தக் குழாயில் உள்ள இரத்தக்கட்டை கரைப்பதற்கான சிகிச்சை முறை (முதல் 6 மணி நேரத்திற்கான சிகிச்சை).
2. பக்கவாதத்திற்கு பின் வரும் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை
3. இயற்பியல் சிகிச்சை முறை.
4. அடுத்து பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை.
நாம் கடந்த இரண்டு வாரமாக முதல் 6 மணி நேரத்திற்குள் வந்தால் செய்யப்படும் சிகிச்சை முறை பற்றி பார்த்தோம் அல்லவா! அதுவே அடைபட்ட இரத்தக் குழாயில் உள்ள இரத்தக் கட்டை கரைப்பதற்கான சிகிச்சை முறை.
6 மணி நேரத்திற்கு பிறகு வரும் போது, இரத்தக் கட்டை கரைப்பதற்கான rTPA (RECOMBINANT TISSUE PLASMINOGEN ACTIVATOR) என்னும் மருந்தை அளிக்க முடிவதில்லை. ஏனென்றால் 6 மணி நேரத்திற்கு பிறகு இந்த மருந்தைக் கொடுப்பதினால் பலன் கிடைப்பதில்லை மாறாக பாதிப்புகளே அதிகம். அதாவது மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
6 மணி நேரத்திற்கு பிறகு நோயாளியானவர் மருந்துவமனையை அடையும் போது அவருக்கு CT/MRI Brain Scan எடுத்து என்ன விதமான பக்கவாத நோய் என்று உறுதி செய்து விட்டு, எதனால் பக்கவாத நோய் வந்தது, இந்த பக்கவாத நோயிலிருந்து அவரை விடுவிக்க என்ன செய்ய வேண்டும்.
அடுத்த பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், என்பதைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. அடைத்த இரத்தக் குழாயின் அளவைப் பொறுத்தும், நோயாளியின் செயல் திறனைப் பொறுத்தும், சுயநினைவைப் பொறுத்தும், சிகிச்சை முறைகள் மூளை நரம்பியல் நிபுணரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
நோயாளியின் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அதை குறைப்பது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பது, இதயத் துடிப்பை கண்காணிப்பது, வலிப்பு வருகிறதா? என்பதை கண்காணிப்பது, சிறுநீர் வெளியேறுவதற்கு உதவி செய்வது ஆகிய சிகிச்சை முறைகள் செய்யப்படுகிறது.
நோயாளி உயிர் வாழ தேவையான உயிர்ச்சத்துகள் உணவு மூலமாகவோ அல்லது மருந்துகள் மூலமாகவோ இரத்தக் குழாய்களில் செலுத்தப்படுகிறது. அவர் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு உள்ளதா என பார்த்து, நீர்ச்சத்து குறையும் போது இரத்தக் குழாய்களில் செலுத்தப்படுகிறது.
பெரிய இரத்தக் குழாய்கள் அடைக்கும் போது மூளையின் பெரும்பாலான பகுதி பாதிக்கப்பட்டுவிடுகிறது. எனவே மூளையின் அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மூளையானது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் மூளையை அழுத்தத் தொடங்குகிறது. எனவே அந்த மூளை செயல் திறனை இழக்க தொடங்குகிறது. அதனால் நோயாளியானவர் தன் சுயநினைவை இழக்கிறார்.
இது போன்ற சமயங்களில் நோயாளியால் சீராக சுவாசிக்க முடியாமல் போகிறது. ஆகையால் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவதால் செயற்கை சுவாசம் பொருத்தும் நிலை ஒரு சில நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
இரத்தக் கட்டு அதிகமாகாமல் தடுக்கவும் இரத்தக் குழாய்க்குள் மேலும் இரத்தக் கட்டு உருவாகாமல் தடுக்கவும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்.