பக்கவாத நோய்க்கான முதல் 6 மணி நேர சிகிச்சை

0

சென்றவாரம் நாம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 4½ மணி நேரத்தில் நோயாளி மருத்துவமனைக்கு வந்துவிட்டால் செய்யும் வைத்திய முறை பற்றி பார்த்தோம். 6 மணி நேரத்திற்குள்ளாக வந்தால் என்ன வைத்தியமுறை செய்யப்படும் என்பதை இந்த வாரம் பார்ப்போம்.

6 மணி நேரத்திற்குள்ளாக வந்தால் சென்ற வாரம் நான் கூறிய அத்தனை கேள்விகளையும் கேட்டுவிட்டு, இரத்த அழுத்தத்தின் அளவு, இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு மற்றும் சர்க்கரையின் அளவு போன்றவற்றை பரிசோதித்து விட்டு, CT/MRI எடுத்து இரத்த குழாய் அடைப்பினால் வந்த பக்கவாத நோயா? அல்லது இரத்தக் கசிவினால் வந்த பக்கவாத நோயா? என்று உறுதி செய்து விட்டு, வைத்தியம் ஆரம்பிக்கப்படுகிறது.

இதில் அடைப்பினால் வரும் பக்கவாத நோய்க்கு rTPA (RECOMBINANT TISSUE PLASMINOGEN ACTIVATOR) என்ற மருந்து செலுத்தப்படுகிறது. செலுத்தப்படும் முறையில் மட்டும் சில மாற்றம் செய்யப்படுகிறது. 4½ மணி நேரத்திற்கு முன்னதாக வந்தால் இரத்தக் குழாய்களில் (சிரைகளில்) நேரடியாக செலுத்துகிறோம்.

4½ மணி நேரம் கழித்து வந்தால் இதே மருந்தை இரத்தகட்டு எங்கு உள்ளதோ அங்கு சென்று செலுத்துகிறோம். அதாவது தமனியில் செலுத்துகிறோம். என்ன நேயர்களே புரிந்து கொள்ள சிரமமாக உள்ளதா? கீழே உள்ளவைகளை படியுங்கள் உங்களுக்கு நன்றாக புரியும். நமக்கு இரண்டு வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. ஒன்று சிரை மற்றொன்று தமனி. சிரை என்பது அசுத்த இரத்தத்தை உடலில் எல்லா பகுதியில் இருந்து, இதயத்தின் வழியாக நுரையீரலைச் சென்றடையச் செய்கிறது. நமது நுரையீரலில் இந்த அசுத்த இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இதயத்தை சென்றடைகிறது. இதயத்திலிருந்து சுத்தமான இரத்தம் தமனி வழியாக மூளைக்கும் மற்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் செலுத்துப்படுகிறது.

இப்படி சுத்திகரிக்கபட்ட இரத்தம் மூளைக்கு மகாதமனியின் கிளை இரத்தக் குழாயான கரோடிட் மற்றும் வெர்டிபிரல் எனப்படும் தமனிகளின் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. கரோடிட் மற்றும் வெர்டிபிரல் தமனிகள் சிறுசிறு கிளைகளாக பிரிந்து மூளை முழுவதற்கும் இரத்த ஓட்டத்தை கொண்டு செல்கின்றன.

இப்படி எடுத்து செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் வருவதே பக்கவாத நோய். ஏதேனும் ஒரு இரத்தக் குழாயில், இரத்தக் கட்டு மூலமாகவோ, கொழுப்பு அடைப்பதாலோ தான் இரத்தம் இதயத்திலிருந்து மூளையின் ஒரு சில இடங்களுக்கு செல்ல முடியாமல் போகிறது. இந்த அடைப்பை Scan மூலம் கண்டறிந்து அடைப்பு உள்ள இடத்திற்கு சில நுண்ணிய கருவிகளை கொண்டு rTPA மருந்தை அந்த இடத்திற்கே எடுத்து சென்று செலுத்துவதே புதிய முறையான வைத்தியமாகும்.

இதனால் அந்த இரத்தக் கட்டு கரைந்து இரத்த ஓட்டம் சீராகும் வாய்ப்பு உள்ளது. இந்த வைத்தியமுறை, முதல் 6 மணி நேரத்திற்குள் நோயாளியானவர் மருத்துவமனைக்கு வந்து விட்டால் செய்யப்படுகிறது.
சிறிய இரத்தக் குழாய்கள் அடைத்தால் சிரை வழியாக rTPA மருந்தை செலுத்துகிறோம், அதே பெரிய இரத்தக் குழாய் அடைத்தால் அதே மருந்தை தமனி வழியாக சென்று இரத்க்கட்டு உள்ள இடத்திலே கொடுக்கிறோம். இது தவிர Mechanical Thrombectomy என்னும் சிகிச்சை முறையும் உள்ளது. இதில் நுண்கருவிகளைக் கொண்டு இரத்தக் கட்டை அப்படியே வெளியே எடுத்து வந்து விடுகிறோம்.

இப்படி நாம் இரத்தக் கட்டை கரைத்து விடுவதாலோ அல்லது வெளியே எடுத்து விடுவதாலோ மூளைக்கு மறுபடியும் சீரான இரத்த ஓட்டம் செல்லுமாறு செய்கிறோம். இதனால் பக்கவாத நோயின் தாக்கம் குறைகிறது.

எனவே நோயாளியானவர் தனக்கு ஏற்பட்ட அறிகுறியிலிருந்து முதல் 3 மாதத்தில் நன்முறையில் தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கும், இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

6 மணி நேரத்திற்கு பிறகு வந்தால் செய்யும் வைத்தியமுறை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.