இடத்தகராறில் மிளகாய்பொடி வீச்சு ! ஒத்தை குடும்பம் ஊரையே எதிர்த்துகிட்டு நிக்கிது ! ஊட்டத்தூரில் ஓயாத சர்ச்சை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இடத்தகராறு தொடர்பாக எழுந்த வாய்வார்த்தைகள் முற்றி, கை கலப்பாகி மிளகாய்ப்பொடி தூவியதால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

”ஒத்தை குடும்பம் ஊரையே எதிர்த்துகிட்டு நிக்கிது. ஊரா சேர்ந்து கட்டுன கோயில் பணியை பாதியோட நிப்பாட்டிட்டாங்க. அந்த வழியா நடந்துகூட போக கூடாதுனு அடாவடி பன்றாங்க. இதுதான்னு இல்ல, வாயில வந்தத பேசிகிட்டு இருக்காங்க. வருஷா வருசம் கோயிலுக்கு மாலை போடுறதுக்கு, ஊருக்குள்ள இருக்கிற கோயிலுக்குத்தான் போயிட்டு வந்திட்டிருந்தோம். எங்க ஆளுங்களுக்கும் அவங்களுக்கும் அதுல தகராறு வந்துட்டதால, இப்போ அங்கே போறது இல்ல.

இனிய ரமலான் வாழ்த்துகள்

சர்ச்சைக்குரிய இடம்
சர்ச்சைக்குரிய இடம்

எங்களுக்குனு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோம்னுதான் இத முன்னெடுத்தோம். இப்ப, மாலை போடுறதுக்கு பூஜைக்கு ரெடி பன்னிட்டு இருந்தோம். இது எங்க இடம். உங்களுக்கு இங்க என்ன வேலைனு சொல்லி பேசாத பேச்சு பேசி,  கலியன் மனைவி காசியம்மாள் மிளகாய்ப்பொடிய வீசிட்டாங்க. அழகம்மாளுக்கு கண்ணுல பட்டு இப்போ, 108-க்கு சொல்லி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க…” என்கிறார், ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த பூமாரி.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுகா, ஊட்டத்தூர் கிராமத்தில்தான் இந்த பஞ்சாயத்து. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஊர் பொது இடத்தில் ”ஸ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோயில்” என்ற கோயில் கட்டுமானத்தை எழுப்பியிருக்கின்றனர்.

ஊர் பொதுமக்கள்
பூமாரி

அதே ஊர், அதே சாதியைச் சேர்ந்த கலியன் என்பவர், தற்போது கோயில் கட்டியிருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோருகிறார். இதுதான் பிரச்சினை. ஒன்று இரண்டு அல்ல, குறைந்தது பத்தாண்டுகளாகவே நீடித்து வரும் பிரச்சினையாக இருந்துவதுதான் கொடுமையானது.

“எங்க ஊரை சேரந்த கலியன்ங்கிறவர, ரெண்டு கைக்குழந்தைகள வச்சிகிட்டு வீடு கட்டிகிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தாரு. நாங்கதான் அவங்க மேல இரக்கப்பட்டு, வீடு கட்டுமானம் முடியற வரைக்கும் கிராமத்துக்கு பொதுவா இருக்கிற இடத்துல தற்காலிகமாக கொட்டாய் போட்டுக்கோனு சொன்னோம். இப்ப என்னடானா, அவரு மாற்றுத்திறனாளிங்கிறதால, கொட்டாய் போட்ட எடத்தையும் எப்படியோ பட்டா வாங்கிட்டாரு. அத வச்சிகிட்டு மொத்த இடத்துக்கும் உரிமை கோருராறு.

அந்த வழியா யாரும் நடந்துகூட போகக்கூடாதுனு தகராறு பன்றாரு. நாங்களும் எவ்வளவோ ஸ்டெப் எடுத்து பார்த்துட்டோம். மதுரை வரைக்கும் போராரு. எதையாவது எங்கையாவது எழுதி கொடுத்திட்டு பிரச்சினைக்கு மேல பிரச்சினை பன்னிகிட்டு இருக்காரு. போன வாரத்துலகூட, போலீஸ்ல கம்ப்ளையின்ட் கொடுத்திட்டாரு.

50 பேரு பக்கமா ஊரு சனம் ஆட்டோவ பிடிச்சு போயிட்டு வந்தோம். இப்ப இந்தமாதிரி  பன்னிட்டாரு. அதிகாரிங்க சொல்றதயும் கேட்க மாட்றாரு. ஊருல யாரு பேச்சையும் கேட்க மாட்றாரு. எந்த சமாதானத்துக்கும் வரவும் மாட்றாரு.”னு புலம்புகிறார், அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ்.

மிளகாய் பொடி வீசும் காசியம்மாள்.

சர்ச்சைக்குரிய கலியனிடம் பேசினோம். “இது முப்பது வருச பிரச்சினை சார். அடுத்தடுத்து மூனு கோர்ட்ல எங்களுக்கு சாதகமாக தீர்ப்பாயிடுச்சி. அத எதிர்த்து மதுரை கோர்ட்ல அவங்க போனதும் தள்ளுபடியாச்சு. கோர்ட் உத்தரவ மீறி எங்க இடத்துல கோயில கட்டிட்டாங்க. ஊரே சேர்ந்து எங்கள வாழ விடாம பன்றாங்க.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

நான் காலு முடியாதவன். என்னால என்ன சார் பன்ன முடியும். எம் பொண்டாட்டிய பத்து பேரு சேர்ந்து அடிச்சாங்க. மொளவாப்பொடிய வீசாம என்ன சார் பன்ன முடியும். அவங்க அடிச்சதுல என் பொண்டாட்டி பேச்சு மூச்சு இல்லாம சீரங்கம் ஆஸ்பத்திரியில இருக்கா.” என்கிறார்.

“அரசுக்கு சொந்தமான இடம் என்கிறார்கள். உங்களுக்கே அதே ஊரில் மூன்று தொகுப்பு வீடு இருப்பதாக சொல்கிறார்களே” என்றதற்கு, “கவுருமெண்ட் இடம்தான். அந்த இடம் எங்களுக்கு பாத்தியப்பட்டதுதான் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். அந்த இடத்த  அடமானம் வச்சி லோனும் வாங்கியிருக்கேன். எல்லா பேப்பரும் என்கிட்ட இருக்கு. நான் மூனு வூடு வச்சிருக்கேனு ஆதாரம் காட்ட சொல்லுங்க. நான் காலு முடியாதவன்னு என்ன வாழ வுடாம ஊரே சேர்ந்து இந்த அட்டூழியம் பன்றாங்க.” என்கிறார்.

சிகிச்சையில் அழகம்மாள்

காணக்கிளியநல்லூர் இன்ஸ்பெக்டர் பெரியசாமியிடம் பேசினோம். “இந்த பிரச்சினை ரொம்ப நாளா இருக்கு. நாங்களும் முடிஞ்ச வரைக்கும் பேசி பார்த்துட்டோம். கலியன் எதுக்கும் கட்டுப்படவும் மாட்றாரு. இது உரிமையியல் தொடர்பான பிரச்சினை. நாங்க ஒரு அளவுக்கு மேல தலையிட முடியாது. இருதரப்புக்கும் பிரச்சினை வராம பொதுவான அறிவுரைதான் சொல்ல முடியும். மற்றபடி, தாசில்தார், டி.ஆர்.ஓ. கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் பேசி சரி செய்துவிடுவோம்.” என்கிறார்.

“கலியன் அவரு மாற்றுத்திறனாளிங்கிறதால, எதுக்கு எடுத்தாலும் கம்ப்ளையிண்ட் பன்றாரு. கலெக்டர், உயர் அதிகாரிகள போயி பார்த்துடறாரு. அவங்களும் இவர் மேல பரிதாபப்பட்டு என்னனு பாருங்கனு சொல்ற மாதிரி இருக்கு. கோர்ட்லயும் ஒரு உத்தரவு வாங்கியிருக்காரு. ஆனா, அது குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு மட்டும்தான். அத வச்சிகிட்ட மொத்த இடத்துக்கும் ஸ்டே வாங்கியிருக்கேனு வீம்பு பிடிக்கிறாரு.

நாங்களும் எவ்ளோ எடுத்து சொன்னாலும், எங்ககிட்டயும் ரூல்ஸ் பேசுறாரு. ஒருதலை பட்சமாக நடந்துக்கிறோம்னு, எங்க மேலயும் அதிகாரிகள் கிட்ட புகார் சொல்றாரு. அவரு ஒரு ஆளு இருந்துகிட்டு, மொத்த ஊரையும் எதிர்த்துகிட்டு இருக்காரு. ஊருல அவருக்கே, நாலு தொகுப்பு வீடு இருக்குனு ஊர்லயே சொல்றாங்க. இது பொது இடம். அதுல நடக்கக்கூட கூடாதுனு தடுக்கிறதெல்லாம் தப்புதான் சார். ” என்கிறார்கள், போலீசார் தரப்பில்.

ஊட்டத்தூர் கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் அறிவழகனிடம் பேசினோம். “அந்த இடம் அரசுக்கு சொந்தமானதுதான். மொத்த இடத்தில் ஒரு பகுதியில் கலியனுக்கு இடம் ஒதுக்கி அதில் அவர் வீடும் கட்டியிருக்கிறார். ஆனாலும், தன் வீட்டை சுற்றியுள்ள அனைத்து இடத்துக்கும் உரிமை கோருகிறார். அப்போதைய காலத்தில் குறிப்பிட்ட இடத்தை அவரது மனைவிக்கு எழுதி வைத்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு இப்படி செய்து வருகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவங்க அனுபவச்ச இடத்த விட்டுக்கொடுக்க மனசு வராம இப்படி பன்றாரு. நாங்களும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் புரிஞ்சிக்க மாட்றாரு. அவங்க பசங்க எல்லாம் சென்னையில் நல்லா செட்டிலாதான் இருக்காங்க. அவங்ககிட்டயும் பேசிட்டு இருக்கோம். ஆர்.டி.ஓ. கவனத்துக்கும் கொண்டு போயிருக்கோம். கூடிய விரைவில் சுமுகமா பேசி முடிச்சிருவோம்.” என்கிறார்.

இலால்குடி தாசில்தாரிடம் பேசினோம். மீட்டிங் ஒன்றில் இருப்பதாகவும் பிறகு பேசுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நாம் விசாரித்த வகையில் மாசத்துக்கு ஒரு தகராறு என்று இரு தரப்புக்கிடையில் மாற்றி மாற்றி பிரச்சினையாகவே நீடித்துவருகிறது. போலீசாரும் வருவாய்த்துறையினரும் கிராமத்தினரை வைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் தீர்வு காண வேண்டிய விவகாரமாகவே அமைந்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு ஓர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே ஊர் பொதுமக்களின் பொது கோரிக்கையாகவும் இருக்கிறது.

 

—     ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.