தெற்காசிய கண்டத்தில் முதல் மிகப்பெரிய நூலகம்… மதுரையில்
தெற்காசிய கண்டத்தில் முதல் மிகப்பெரிய நூலகம்… மதுரையில் அமைகிறது
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்து 2.50 லட்சம் புத்தகங்கள் கலைஞர் நூலகத்தில் இடம் பெறுகிறது. இந்த நூலகம் 8 மாடி கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஆசியா கண்டத்தில் இந்த நூலகம் இரண்டாவது மிகப்பெரியது. தெற்கு ஆசியாவில் முதல் பெரிய நூலகம் என்ற பெருமை உடையது. தென் மாவட்டங் களில் இதுபோன்ற பெரிய நூலகம் இல்லாதது பொதுமக்களிடம் குறையாகவே இருந்து வந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலகமாக அமைக்க கடந்த 2021 ஆண்டு ஜூன் மாதம் 3ம்தேதி உத்தரவிட்டார்.
மதுரை பாண்டியன் ஓட்டல் பின்புறம் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியினை மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள், அதிகாரிகள் என அவ்வப்போதுஆய்வு செய்து வருகின்றனர். இந்த நூலகத்திற்கு தேவையான நூல்கள் மின்னூல்கள், இணைய வழி, பருவஇதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக ரூ. 10 கோடியும்தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ 5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் மொத்தம் அடித்தளம் மற்றும் 8 மாடிகள் உடையது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நூலகத்தில் முதல் மூன்று மாடிகள் கண்ணாடி முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலக கட்டிடத்தில் இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் மற்றும் மாடித்தோட்டம் ஆகியவை தயாராகி வருகின்றது. மேலும் சிற்றுண்டி, மாநாட்டுக்கூடம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிக்காக பிரத்தியேகபிரிவு, பார்வையற்ற, காது கேளாதோருக்கு மின்ஒளி நூல்கள்வைக்கப்பட உள்ளன. நான்கு சக்கரவாகனங்கள், இரண்டு சக்கரவாகனங்கள்; நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.கட்டுமான பணிகளை விரைவில் முடிப்பதற்காக இரவு, பகல் பாராமல் தொழி லாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தமிழ் ,ஆங்கில மொழிகளில் குழந்தை நூல்கள் கணிதம், கணினி, அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல்மற்றும் உயிர் நுட்பவியல், நிலவியல், உளவியல், உணர்வியல், பொறியியல், பொருளாதாரம், பொதுநிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதைபயணம், வேளாண்மை ,சுற்றுப்புற சூழல் என கிட்டத்தட்ட 12 ஆயிரம் அரிய வகை நூல்கள் உட்பட சுமார் 2.50 லட்சம்நூல்கள் இங்கு இடம்பெற உள்ளன.
மாணவர்களுக்கு பாட புத்தகம், வாசகர்கள் சொந்தமாக நூல்கள் கொண்டு வந்து படிக்கலாம். இந்த நூலகத்தில் உறுப்பினராகவும் சேர்ந்து கொள்ளலாம். தங்களுக்கு தேவையானபுத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று படிக்கலாம்.
மாணவர்கள் தங்களது வீட்டி லிருந்து உணவைக்கொண்டுவந்து இங்கேயே சாப்பிட்டு தொடர்ந்து படிக்கலாம். பார்வை யாளர்கள் உணவருந்த பொருட்கள் வைக்க தனித்தனியே அறைகள் தயாராகி வருகின்றது. இக்கட்டிடம் முழுவதும் கண்காணிப்புகேமரா வசதி செய்யப்பட்டுள்ளது. இலவச வைபை வசதி இருப்பதால் நூல்கள் இல்லாமலே லேப்டாப் அல்லது செல்போன் மூலம் படிக்க இயலும். மாதிரி மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்குஇந்த நூலகம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்நூலகம் சுமார் 2.04 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாகதயாராகி வருகிறது. தென் மாவட்ட மக்களுக்கு அறிவொளி வழங்கும் கலங்கரை விளக்கமாக அமையும்.இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என மதுரை மக்களும், பட்டதாரிமாணவர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நாம் இதைப்பற்றி மதுரை மீனாட்சி கல்லூரியில் பி.ஏ. 2ம்ஆண்டு படிக்கும் மாணவி ஷஹானாவிடம் கேட்ட போது, என்னை போன்ற மாணவ, மாணவிகளுக்குஇது ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும்..இனிவரும் காலங்களில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு கலை, இலக்கியம் பண்பாடு ஆகியவை தெரிந்துகொள்வதற்கு சிரமம் இல்லாமல் கற்றுக்கொள்ளலாம்.
இந்த நூலகத் திட்டத்தை மதுரையில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு எங்களதுமீனாட்சி பெண்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் சார்பாகவும், மாணவிகளின் சார்பாகவும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டுபடிக்கும் மாணவர் அமல்ராஜ் கூறியது :
எங்களது கல்லூரியிலும் நூலகம்இருக்கிறது. இங்கு ஆங்கிலேயர்களாலும் எங்களது கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் அவர்களாலும்பல அரிய நல்ல புத்தகங்களும் இருக்கின்றன.
இந்த கலைஞர் நூலகம் தென் மாவட்டம் அதிலும்மதுரையில் அமைவது வரவேற்கத்தக்கது தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு குறிப்பாகஇனிவரும் காலங்களில் படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் உருவாக்கும் நல்ல திட்டமாகும்.இதை எங்கள் கல்லூரி சார்பாக வரவேற்கிறோம் என்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவி ஆதிபிரியா மற்றும் ராசாத்தி ஆகிய மாணவிகளிடம் பேசியபோது… தமிழகத்தில் சொல்லப்போனால்தென் மாவட்டங்களில் மிகப்பெரிய நூலகம் இந்த கலைஞர் நூலகம். இதில் தொல்லியல் ஆய்வு நூல்களைபற்றி நாம் படிக்க வேண்டும் என்றால் மதுரை மாவட்டத்தில் உள்ள பொது நூலகங்களில் இந்தநூல்கள் கிடையாது. ஆய்வு செய்வதற்கு முனைவர் மற்றும் இளங்கலை பட்டம் பெறுவதற்கும், போட்டிதேர்வுகளுக்கான கேள்வி பதில்களை இங்கு எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நூலகம் எங்களது வாழ்க்கைக்குவழிகாட்டியாக நாங்கள் நினைக்கின்றோம். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது கல்லூரியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். எது எப்படியோ மதுரையில் உலகமே வியக்கக்கூடிய இவ்வளவுபெரிய கலைஞர் நூலகம் அமையகிறது என்பது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பள்ளி, கல்லூரிமாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும்; மதுரை மக்களும் பெருமைப்படும் இந்த நூலகத்தை திமுக ஆட்சியின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
– ஷாகுல், படங்கள் : ஆனந்த்