இந்து அறநிலைத் துறையில் தில்லுமுல்லு… வசூல் வேட்டையில் இணை ஆணையர்… கதறும் செயல் அலுவலர்கள்!

0

இந்து அறநிலைத் துறையில் தில்லுமுல்லு… வசூல் வேட்டையில் இணை ஆணையர்… கதறும் செயல் அலுவலர்கள்!

இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், கரூர் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன.

திருச்சி மண்டலத்துடன் இருந்த கரூர் மாவட்டத்தை கடந்த 2  வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மண்டல இணை ஆணையர் அலுவலகம் திருப்பூரில் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது.

இதில் இணை ஆணையராக
இருந்த நடராஜன், பழனி பாலதண்டாயுத பாணி கோவில் இணை ஆணையராக
பணிமாற்றம்  செய்யப்பட்டார்.

இவர் கோவில்களுக்கு ஆய்வுக்கு சென்றால் வீட்டிலிருந்தே சாப்பாட்டுடன்  சென்று விடுவாராம்.

இவருக்கு பிறகு இணை ஆணையராக பொறுப்பேற்ற குமரதுரை, முன்னாள் இணை ஆணையர்  நடராஜனுக்கு எதிர்மறை சிந்தனை கொண்டவராம். கோயில்களில் ஆய்வுக்கு சென்றால் கவரை  கண்ணும் கருத்துமாக கறாராக கேட்டு வாங்கி விடுகிறாராம். கார் டிரைவருக்கும் கொடுக்கணுமாம். வந்து 6 மாதங்கள் தான் ஆகிறது, இவரைப் பற்றி பல்வேறு  புகார்கள் எழுந்துள்ளது. இவர் இதற்கு முன்பு இணை ஆணையராக தென் மாவட்டத்தில் இருந்தபோது உடல் ஊனமுற்ற நபரிடம் லஞ்சம் கேட்டதாக வாட்ஸ் அப்பில் வைரலான  செய்தி தென் மாவட்டத்தையே உலுக்கியது.

ஆனாலும், இவர் மீது இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

இணைஆணையர் குமரதுரை
இணைஆணையர் குமரதுரை

அதற்குப் பிறகு வந்த குமரதுரையின் வசூல் வேட்டைக்கு ஈடு கொடுக்க முடியாமல்  கோயில் செயல் அலுவலர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆய்வு என்கிற பெயரில் திருக்கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் கவர் இல்லாமல் வெளியில் வர மாட்டாராம். தலையில் அடித்துக் கொண்டாவது செயல் அலுவலர்கள் கவரை  ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்களாம்.

மண்டல அலுவலகத்தில் பெண் உயர் அதிகாரியும் இதற்கு துணை போகிறாராம்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வரவணையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மதிப்பீடு செய்வதற்காக சென்ற வகையில் ரூ.50 லானா தரப்பட்டதாகவும், குளித்தலையில் கட்டப்பட்டு வரும் புதிய கோவில் திருப்பணிகளுக்கு மதிப்பீடு  வழங்கியதற்காக, வெயிட்டாக கவனிக்கப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி, அறங்காவலர் நியமனம் செய்ய ஒரு லகரமாம்.

இதுபோல கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள சிந்தலாவாடி யோக நரசிம்ம சுவாமி கோவில் அறங்காவலர் நியமனத்திற்காக இரண்டு லகரமாம்…

அது மட்டும் இல்லையாம் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுகிறோம் என்ற பெயரில் போலியாக விளம்பரம் செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே அகற்றப்பட்டதாக,  கணக்கு காட்டப் பட்டுள்ளதாம். ஆனால், இன்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் வசம்தான் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே தாலுகாவில்  மகாதானபுரம் தெற்கு கிராமத்தில் உள்ள ஆசோ விஸ்வநாதர் கோவிலில் புன்செய் நிலம் சர்வே எண் 1344  45, 47, 48, 49,  50 ஆகியவற்றில் உள்ள 33 ஏக்கர் 22 சென்ட் நிலத்தை 6 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலம் மீட்கப்பட்டதாக கடந்த 4-4-2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே இருந்தவரிடம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி சுமார் 300 ஏக்கர் நிலம் இன்னும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விற்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அதே கோவிலில் சர்வே எண் 1318,  19 மற்றும் 20, மற்றும் 658ல்  உள்ள புன்செய் நிலங்கள்  44. ஏக்கர் 54 சென்ட்டை  11 ஆக்கிரமிப்பாளர் களிடமிகுந்து  மீட்கப்பட்டதாக கடந்த 23- 6- 2022  அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அந்த நிலங்கள் இன்று வரையிலும் பழைய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விற்கப்படவில்லையாம். இதன் மதிப்பு ரூ. 4 கோடி என கூறப்படுகிறது.

அதுபோல மகாதானபுரம் தெற்கு கிராமத்தில் பள்ளமுடுச்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான  புன்செய் நிலங்கள் சர்வே எண் 409ல் ரூ.50 லட்சம் மதிப்பிலான  10 ஏக்கர் 79 சென்ட்  நிலத்தை மீட்டு விட்டதாக கடந்த 21- 5- -2022 அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், இவை அனைத்தும் பழைய 12 ஆக்கிரமிப்பாளர்களிடமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மகானாதபுரம் பிடாரி பள்ளமுடிச்சி அம்மன் கோயில் நிலங்கள் ஏலம் விடுவதாக அறிவிப்பு செய்து இருந்தனர். ஆனாலும், ஏலம் நடைபெறவில்லையாம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டால் ஏன் கடந்த   10 மாதங்களுக்கு மேலாகியும் ஏன் மறு ஏலம்  விடவில்லை? என   பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முறையான ஆய்வை மேற்கொண்டு இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்து மறு ஏலம்  நடத்த வேண்டும்.

நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு சம்பந்தப்பட்ட கோயில் குடிபாட்டுகாரர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கே.எம்.என்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.