அங்குசம் பார்வையில் ‘தி கிராண்ட் மாஸ்டர்’
தயாரிப்பு: வேலாயுதம், டைரக்டர்: வெற்றிச் செழியன், ஆர்டிஸ்ட்: அபர்ணதி, மாஸ்டர் லிங்கேஷ், சுரேஷ் மேனன், தமிழரசி, வெற்றிச் செழியன், அஸ்வின், அன்பு, ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி & ஆர்.எஸ். ஞானசேகர், இசை: தினேஷ் ஆண்டனி, எடிட்டிங்: சி.கே.ரஞ்சித், ஆர்ட் டைரக்டர்: ராகவன் சஞ்சீவி, பிஆர்ஓ: ‘எய்ம்’ சதீஷ்
திண்டுக்கல்லில் சாதி வெறிக்கு கணவனை பலி கொடுத்த வெள்ளையம்மா[ அபர்ணதி] சென்னையில் தூய்மைப் பணியாளராக இருக்கிறார். மகன் நந்தனை[ மாஸ்டர் லிங்கேஷ்] வக்கீலாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஆனால் நந்தனுக்கோ பெரிய செஸ் சேம்பியனாக வேண்டும் என்பது கனவு. பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டுமே செஸ் விளையாட்டுப் பயிற்சி கொடுக்கும் செண்டருக்குப் போய் அவமானப்படுகிறான். தான் படிக்கும் அரசுப்பள்ளியின் பி.டி.வாத்தியாரால் அவமானப்படுகிறான். எல்லா இடங்களிலும் ஆதிக்க சாதி வெறியர்கள், நந்தனை அடித்து துரத்தி அவமானப்படுத்துகிறார்கள். எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு, அகில உலக செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நந்தன் வென்ற கதை தான் இந்தப் படம்.
இப்போதும் சாதி வெறியுடன் அலையும் மனித மிருகங்களின் தோலை உரித்து தொங்கவிட்டதற்காக இயக்குனர் வெற்றிச் செழியனை கட்டிப்பிடித்து உச்சிமுகர்ந்து பாராட்டியே ஆகவேண்டும். வெள்ளையம்மாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்ணதி. போகும் இடங்களிலெல்லாம் சாதி வெறியால் துரத்தியடிக்கப்பட்டு, நிலைகுலைந்து போன தனது மகனை செஸ் விளையாட்டில் சாதிக்க வைக்க தானே பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் சீனில் அபாரமாக நடித்துள்ளார் அபர்ணதி. இதற்கான ஃப்ளாஷ்பேக்கை திண்டுக்கல்லில் வைத்திருப்பது தான் டைரக்டரின் சாமர்த்தியம். அதிலும் டாஸ்மாக் பாரில் புரோட்டா மாஸ்டராக இருக்கும் பெருசுவை செஸ் கேம் டிரெய்னராக காட்டியிருக்கும் டைரக்டரின் துணிச்சலுக்கு சபாஷ்.
நம்ம ஊரு ஆடுபுலி ஆட்டத்தின் மறுவடிவம் தான் செஸ் என்பதை கச்சிதமாக கனெக்ட் பண்ணியுள்ளார் டைரக்டர். உள்ளூரில் ஆதிக்க சாதி வெறியர்களின் ஆணவத்தை அடக்க ஆடுபுலி ஆடும் சீனில் அபர்ணதியின் முகபாவனைகளும் பாடிலாங்குவேஜும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன.
செஸ் அகாடமியின் தலைவனாக இருக்கும் கார்ப்பரேட் வில்லன் சுரேஷ் மேனனை எதிர்த்துப் போராடி தனது மகனை ஐந்து ரவுண்ட் நடக்கும் தகுதிச்சுற்றில் கலந்து கொள்ள வைக்க அபர்ணதி போடும் ப்ளான் செம சூப்பர்.
அபர்ணதிக்கு அடுத்து செம பெர்ஃபாமென்ஸ் பண்ணிருக்கான் மாஸ்டர் லிங்கேஷ். ஏக்கம், சோகம், கீழ்சாதி சிறுவனின் நியாயமான கோபம், க்ளைமாக்ஸில் வெற்றிப்புன்னகை என சகல சீன்களிலும் சபாஷ் போட வைத்துவிட்டான் லிங்கேஷ். இவனுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நடிகர், அபர்ணதியின் கணவராக வருபவர், அபர்ணதியுடன் வேலை பார்க்கும் நடிகை என எல்லோருமே கவனம் ஈர்க்கிறார்கள். லிங்கேஷை ஊக்கப்படுத்தும் பிச்சைக்கார சாமியார் கேரக்டருக்கு க்ளைமாக்ஸில் வேல்யூ கொடுத்து அடடே போட வைக்கிறார் டைரக்டர் வெற்றிச் செழியன்.
“நீ தனியா போ, அப்பத்தான் தைரியம் வரும்”, “கேள்வி ஆங்காரமா இருந்தா, பதில் அகம்பாவமாகத் தான் வரும்”, “நீ ஜெயிக்குறது மட்டுமல்ல, உன் சமுதாயத்தையும் ஜெயிக்க வை” இது போன்ற தீக்கனல் வசனங்கள் தான் படத்தின் பெரிய உயிர்நாடி. அபர்ணதி ஆடுபுலி ஆட்டத்தில் இறங்கும் போதும், மகனுக்கு செஸ் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கும் போதும் பறை இசையை பேக்ரவுண்ட் ஸ்கோரில் கொண்டு வந்து அதிர வைக்கிறார் மியூசிக் டைரக்டர் தினேஷ் ஆண்டனி. நிஜமான சேரிப்பகுதியா? செட்டா? என வியக்கும் அளவுக்கு அசத்தியுள்ளார் ஆர்ட் டைரக்டர் ராகவன் சஞ்சீவி.
இடைவேளைக்குப் பிறகு சில குறைகள், லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் தி கிராண்ட் மாஸ்டருக்கு ராயல் சல்யூட்.
அங்குசம் பார்வையில் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ 58/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.