ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வினோத். அவர் ராமஜெயத்தின் மகன் உறவு முறை. நடிகர் நெப்போலியன் மாமா உறவு முறை. தி.மு.கவில் அழகிரி, ஸ்டாலின் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நெருக்கமானவர் நேரு. இந்த இரட்டை நிலையை அழகிரி விரும்பவில்லை. எனவே, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியை எதிர்பார்த்த நெப்போலியனை, திருச்சிக்கு அழைத்து வர அழகிரி காய் நகர்த்தினார்.
திருச்சியில் எம்.டி ஆக வலம் வந்த ராமஜெயம், திருச்சியில் இருந்தபடியே, மணல் மற்றும் கிரானைட் தொழிலில் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தார். அப்போது ஜெயலலிதா, இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் ராமஜெயத்தைக் குற்றஞ்சாட்டினார்.
அப்போதைய அமைச்சரான கே.என் நேருவுக்கு நிழலாக ராமஜெயம் வலம்வந்தார். அனைத்தும் அவர்தான். பிறகு தானும் அரசியலில் குதிக்க நினைத்தவர், பெரம்பலூர் எம்.பி தேர்தலில் வேட்பாளராகிட நினைத்தார் ராமஜெயம். நேருவும், பெரம்பலூர் எம்.பி. தொகுதியை ராமஜெயத்துக்கு வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டார். இந்நிலையில்தான், நடிகர் நெப்போலியனை திருச்சியின் தளபதி ஆக்க விரும்பிய அழகிரி, சத்தமில்லாமல் காரியம் சாதித்தார். அதனைப் பலரும் எதிர்பார்க்கவில்லை.
தலைமை வேட்பாளராக்கியதும், தொட்டியம் பகுதிகளில் ராமஜெயம் கூட்டம் நடத்தினார். ஆனாலும் அண்ணன் நேருவும், தம்பி ராமஜெயமும் களமிறங்கினார்கள். நெப்போலியன் எம்.பி ஆனால் அதே வேகத்தில், மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சரானார்.
“கெழக்கு செவக்கையில நான் கீரை அறுக்கையில” என ஊர் முழுக்க பாட்டுப்பாடிய நடிகர் நெப்போலியனை, மத்திய அமைச்சர் ராசாவும் அரவணைக்க ஆரம்பித்தார். ஆனால் நெப்போலியன் அவரை மீறியும் செயல்பட ஆரம்பித்தார். வளர்த்த கடா மார்பில் முட்டுகிறதே கட்சியினர் பல பேச ஆரம்பித்தனர்.
இதனால் நெப்போலியன் – ஆ.ராசா – கே.என்.நேரு என விரிசல் தொடர்ந்தது. இதுமட்டுமல்லாமல், ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது, மதுரையில் அழகிரியின் நெருக்கப்புள்ளியான எஸ்ஸார் கோபிக்கும் ராமஜெயத்துக்கும் இடையே மன வருத்தம் இருந்ததாகவும், 200 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவகாரம் தி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி உள்ளிட்ட பெருந்தலைகளின் பார்வைக்குப் போன பிறகும் பிரச்சினை தீரவில்லை. அதனால்கூட கொலை நடந்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகித்தனர்.
ஆனால் எஸ்.ஆர்.கோபி, “என்னைத் திட்டமிட்டு ராமஜெயம் வழக்கில் சேர்க்கிறார்கள் எனக்கும் அவருக்கும் பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் இருந்தது உண்மைதான். ஆனால், அது மிக சாதாரணமான பிரச்சினை” எனப் புலம்பினார்.
ராமஜெயத்துக்கு அரசியல் ஆசை இருந்தது போல், அவரின் உதவியாளராக வலம்வந்த வினோத்தையும் அரசியல் ஆசை மூட்டினார்கள் கூட இருந்த வினோத் நண்பர்கள். ராமஜெயம் இடும் கட்டளையும் உடனே முடிப்பதற்கு என வினோத் தனக்கென்று ஒரு இளைஞர் பட்டாளத்தையே வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ராமஜெயத்துக்கு மிக நெருக்கமாக இருந்த பலரும், வினோத் மூலமாகவே ராமஜெயத்தை நெருங்க கூடிய சூழல் உருவானது.
ராமஜெயம் உயிரோடு இருக்கும் போது, பிரபலமான ஜவளி நிறுவனத்தின் அதிபரின் குடும்பத்துக்கும், அவருக்கு பெரும்மோதல் போக்கு இருந்ததாகவும், அந்த அதிபர் மீதும் காவல்துறை சந்தேகரேகை பாய்ச்சியது. ராமஜெயம் வளர்ச்சி பலருக்கு அச்சுறுத்தலாக மாறினார்.
தமிழகத்தின் பிரபலமான நிறுவனங்களின் திருச்சி பத்திரிக்கை நிருபர்களும் ராமஜெயத்துக்கு நெருக்கமானார்கள். அவர்களுக்கு ராமஜெயம், அள்ளிக் கொடுத்தார். ராமஜெயம் மூலம் கோடீஸ்வரரான பத்திரிக்கையாளர்கள், போலீஸ்காரர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வரும் வாரங்களில் பார்ப்போம்.