மரபணு சம்பந்தப்பட்ட வியாதியா ‘பக்கவாதம்’!

விழிக்கும் நியூரான்கள் -3

0

எந்த வித முன்னறிவிப்புமின்றி ஒரே நொடியில் வரும் நோய் தான் பக்கவாத நோயாகும். நன்கு உணவருந்தி விட்டு படுக்கும் ஒருவர் காலையில் எழுந்திருக்கவில்லையென்றாலோ,பேச்சில் ஒரு தடுமாற்றமோ, பார்வையில் வேறுபாடோ அல்லது ஒரு பக்க கை, கால் செயல் இழந்து போனாலோ மூளையில் உள்ள இரத்தக் குழாயில் அடைப்பு அல்லது கசிவு ஏற்பட்டிருக்கக் கூடும்.

 

Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்

நன்றாக பேசிக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒருவர் தன் நிலை இழந்து ஒரு பக்கமாக சாயலாம் அல்லது ஒரு பொருளை ஒரு கையால் எடுக்க முடியாமல் போகலாம். ஒருவர் நடந்து கொண்டிருக்கும்போதோ அல்லது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போதோ ஒரு பக்க கை, கால் செயல் இழந்து தன் நிலை தடுமாறலாம். இன்னும் சிலருக்கு பக்கவாத நோய், வலிப்பு நோய் (ஒரு பக்க கை, கால் வெட்டி வெட்டி இழுத்தல்) போன்றும் வரலாம். இப்படி ஒரே நொடியில் வரும் பக்க வாத நோய் ஒரு சிலருக்கு முன்னெச்சரிக்கையையும் கொடுக்கிறது.

 

என்ன அந்த முன்னெச்சரிக்கை என யோசிக்கிறீர்களா?

ஒரு சிலருக்கு ஒரு பக்க கை, கால் ஒரு சில நிமிடங்களுக்குச் செயல் இழந்து மீண்டும் தன் இயல்பு நிலைக்கு வந்து விடும். பேச்சில் தடுமாற்றம் ஒரு சில நிமிடங்கள் இருந்து சரியாகிவிடும். இப்படி பக்கவாத நோயின் அறிகுறிகளில் ஏதாவது ஒரு அறிகுறி சில நிமிடங்கள் வந்து விட்டு பழைய நிலைக்கு திரும்பி விட்டால் அதை Transient Ischemic Attack (TIA) என்று அழைக்கின்றோம். இது தான் பக்கவாத நோயின் முன்னெச்சரிக்கை. இந்த அறிகுறிகள் தென்படும் நபருக்கு முழுமையான பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்டால், அதனை உதாசினம் செய்யாமல் உடனே மூளை நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும். ஏனென்றால், ஏன் அந்த நபருக்கு Transient Ischemic Attack (TIA)வந்தது என மூளை நரம்பியல் நிபுணர் ஆராய்ந்து பார்த்தால் தான், அந்த நபருக்கு பக்கவாத நோய் வராமல் தடுக்க முடியும்.

ஒரு நபருக்கு பக்கவாத நோய் ஏன் வருகிறது? என்பதை வாசகர்கள் தெரிந்து கொண்டால் தான் பக்கவாத நோயிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ள முடியும். மாரடைப்பு நோயை போன்று பக்கவாத நோயும் பல்வேறு காரணிகளால் வருகிறது. அந்த காரணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

  1. மாற்ற முடியாதவை
  2. மாற்ற கூடியவை

மாற்ற முடியாதவைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். பக்கவாத நோய் ஆண்களை அதிகமாக பாதிக்கிறது. வயது அதிகமாகும் போது பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது. குடும்பத்தில் நம் முன்னோர்களுக்கு பக்கவாத நோய் இருக்கும் பட்சத்தில் சந்ததிகளுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது மரபணு சம்பந்தப்பட்ட வியாதிகளில் ஒன்றாக இருக்கலாம். இப்படி நமது வயதையோ, பாலினத்தையோ நம் மரபணுவையோ நம்மால் மாற்ற இயலாது.

இவைகளைத்தான் மாற்ற முடியாத காரணிகள் என்கிறோம்.

மரபணுக்களால் வரும் பக்கவாத நோய் 100 % சந்ததிகளை தாக்குவது இல்லை. மரபணுக்களின் வீரியத்தன்மையை வெளிப்படுத்த விடாமல் செய்வதற்க்கும் நம்மால் ஓரளவு முடியும். எனவே அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எவரேனும் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கும் பக்கவாத நோய் வந்துவிடுமோ! என்று பயம் கொள்ள தேவையில்லை. நாம் நமது அன்றாட வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்கிறோம், நமது உடல், உள்ளம் மற்றும் உணர்வுகளை எப்படி சீராக வைத்துக் கொள்கிறோம் என்பதை வைத்தும் மற்றும் நமது உணவு முறைகளைக் கொண்டும் பக்கவாத நோய் வரவிடாமல் நம்மால் தடுக்க முடியும்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.