தொடர்கதையான ஜெயில் எஸ்கேப் ! பகீர் பின்னணி ?
ஜெயில் எஸ்கேப் பகீர் பின்னணி?
தேனி மாவட்ட சிறையிலிருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் ஆளும் த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து கொடூர கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் பின்னணியில், இந்த விவகாரம் போலீசின் சட்டம் – ஒழுங்கு விவகாரம் தொடர்பான விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
அக்-26 ஆம் தேதி இரவு 10 – 11 மணி வாக்கில், தேனி மாவட்ட சிறையிலுள்ள 3-வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 92 கைதிகளில் ஒருவரான முத்து இளங்கோவன் என்ற கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் கூச்சலிட, பிளாக் 3 மற்றும் 4 இன் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் இரவு அலுவலராக பணியிலிருந்த முதன்மை தலைமை வார்டன் மதன்மோகன் ஆகிய இருவரும் மனிதாபமான அடிப்படையில் முத்து இளங்கோவனை மீட்கும் முயற்சியில் கதவை திறக்க, இந்த தருணத்தை எதிர்பார்த்திருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட கைதிகள் 17 பேர் சிறைக்காவலர்களை கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பால் ஆன துடுப்பை பயன்படுத்தி தாக்கியதாக குறிப்பிடுகிறார்கள்.
சம்பவத்தன்று இரவே தப்பியோடிய கைதிகளில் 4 பேரை சுற்றி வளைத்த நிலையில், 20 தனிப்படைகள் அமைத்தும் டிரோன் காமிராக்களை சுழலும் விட்டும் போலீசின் தொடரும் தேடுதல் வேட்டையில் அடுத்தடுத்து கைதிகள் பிடிபட்டு வருகிறார்கள்.
ஒரு காலத்தில் தேனி தாலுகா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறையாக செயல்பட்டு வந்த நிலையில், தேனி புதிய மாவட்டமாக மாற்றம்பெற்ற பிறகு, தேனி – தேக்கம்பட்டியில் புதிய மாவட்ட சிறை கட்டப்பட்டது. 4 பிளாக்குகளை கொண்ட இந்த சிறையில் 160 முதல் அதிகபட்சம் 200 பேர் வரையில் மட்டுமே அடைக்க முடியும் என்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் செயல்பாட்டில் இருந்து வந்த போடிநாயக்கனூர் கிளைச்சிறையும் மூடப்பட்ட நிலையில், தற்போது பெரியகுளம் உத்தமபாளையம் ஆகிய இரண்டு கிளைச்சிறைகள் மட்டுமே இயங்கிவருவதாக சொல்கிறார்கள். இதன் காரணமாகவும், இங்கே கைதிகளின் எண்ணிக்கை கூடுதலாகவே இருந்து வருவதாக குறிப்பிடுகிறார்கள்.
சம்பவத்தன்று, 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கிறார்கள். மேலும், மூன்று போலீசார் சுழற்சி முறையிலான ஓய்வில் இருந்ததையும் உள்ளிட்டு சிறை வளாகத்திற்குள் 8 போலீசார் மட்டுமே பணியில் இருந்திருக்கிறார்கள். நீண்ட காலமாகவே, ஜெயிலர் பணியிடம் காலியாக இருப்பதாக சொல்கிறார்கள். 200 பேரை அடைக்க வேண்டிய இடத்தில், 334 பேரை அடைத்து வைத்துவிட்டு அவர்களை கண்காணித்து பாதுகாக்க வேண்டிய பணிக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையிலேயே பற்றாக்குறையாக சிறைக்காவலர்களை பணியில் அமர்த்தியது முதல் சிக்கலாக சொல்கிறார்கள்.
அடுத்து, தற்போது சிறை அமைந்திருக்கும் இடமே ஆள் அரவமற்ற வனப்பகுதிக்குள் அதுவும் மலையின் முகட்டில் அமைந்திருக்கிறது. பக்கத்து கிராமமே 8 கி.மீ. தூரம் தொலைவில்தான் இருக்கிறது. அங்கிருந்து பிரதான சாலையை தொட வேண்டுமெனில், இன்னும் சில கி.மீ. பயணிக்க வேண்டும். அவசர காலத்தில் கத்தி கூச்சலிட்டாலும் ஓடி வந்து பார்க்கக்கூட வழியில்லாத நிலை அடுத்த சிக்கலாக இருக்கிறது.
இதையெல்லாம்விட, சிறைத்துறை உயர் அதிகாரிகள் சிறைக்காவலர்களை நடத்தும் விதமே சிக்கலுக்குரியது என்கிறார்கள். சிறைக் கைதிகளுக்கு முன்னிலையிலேயே, சிறைக்காவலர்களை இழிவாக நடத்துவதாகவும்; இதன் காரணாமாகவே சிறைக்கைதிகளை சிறைக்காவலர்கள் கண்டிக்கும் சூழல் வந்தால், உயர் அதிகாரியிடம் சொல்லி சட்டையை கழட்டிவிடுவேன் என்ற கைதிகளின் மிரட்டலுக்கு ஆளாக நேரிடுவதாகவும் குறிப்பிடுகிறார்கள். அரசே கைதிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், அவர்கள் ஏதோ தியாகிகளைப் போல அணுகுவதாகவும்; சிறை வளாகத்தில் பணியாற்றும் சிறைக்காவலர்கள்தான் கைதிகளைப்போல கையறு நிலையில் சிக்கித்தவிக்கும் அவலத்தையும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதில், இன்னுமொரு கொடுமை சிறைக்காவலர்களுக்கு மத்தியில் சாதிய ரீதியான பிளவையும் உயர் அதிகாரிகள் ஏற்படுத்தியிருப்பதாகவும். அத்தகைய பாரபட்சம் சிறை பணியாளர்களுக்கு மத்தியில் சகஜமாகிவிட்டதன் காரணமாக, “அவன் பிரச்சினை. அவன் பார்த்துக் கொள்ளட்டும்” என்று மற்ற காவலர்கள் ஒதுங்கி நிற்பதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது, இந்த சம்பவத்தில் பணியிலிருந்த 9 சிறைக்காவலர்களும் கூண்டோடு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். போலீசின் இந்த முடிவு இப்போதைய பதட்டத்தை தணிக்க பயன்படலாம். ஆனால், சிறை வளாகத்தில் நிலவும் உண்மையான நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து அவற்றை களைய முற்படாத பட்சத்தில், இதைவிட எதிர்பாராத சம்பவங்கள் பல நேர்வதற்கான வாய்ப்புகளை சிறை சூழல் கொண்டிருப்பதாகவே எச்சரிக்கிறார்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.