பொக்கிஷமான கடிதம் இது ! இது தான் இலக்கியம் எனக்கு !
எத்தனை வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தாலும் , புதிய புதிய குழந்தைகளுடன் பயணிக்கும் போது ஆசிரியர் பணியின் முதல் நாள் அனுபவமாகவே உணர்கிறேன்.
#இதுதான்_இலக்கியம்_எனக்கு ❤️ எத்தனை வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தாலும் , புதிய புதிய குழந்தைகளுடன் பயணிக்கும் போது ஆசிரியர் பணியின் முதல் நாள் அனுபவமாகவே உணர்கிறேன்.
நான் அவர்களை உடனே எனது குழந்தைகளாக ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளும் போது தான் பதற்றம் நீங்கிய ஒரு நிம்மதி ஏற்படும் . அந்த வகையில் எட்டு மாதங்கள் பழகிய ஒரு குழந்தை இன்று ஓடி வந்து இதைக் கொடுத்த போதும் , வீட்டில் போய் படியுங்கள் என்ற போதும் சற்றே பதட்டமும் ஆர்வமும் மேலோங்க, அதை வாங்கி வைத்துக் கொண்டேன்.
வீடு வந்து சற்றே தயக்கத்துடன் தான் கடிதத்தைப் பிரித்தேன். இந்தக் கடிதம் எதிர்மறையாக எழுதப்பட்டு இருந்தாலும் இங்கு பகிர்ந்து இருப்பேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் ஆங்கிலத்தில் சுமாரான கற்பித்தல் திறன் மட்டுமே பெற்றவள்.
அடிப்படையில் சிறு வயதில் ஆங்கிலம் வராத மாணவி நான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எப்படி மனப்பாடம் செய்து எழுதினேன் என்பது இன்னும் நினைவு இருக்கிறது. என்பதுகளில் அரசுப் பள்ளியில் படித்தவள் நான். அப்போது ஒன்பதாம் வகுப்பு வரை எங்களுக்கு ஆங்கில இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. ஏனென்றால் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் ஏழாம் வகுப்பில் வந்து நன்றாகப் பாடம் நடத்தினார்.
ஆனால் அடிப்படை புரிந்தால் தானே அவரது கற்பித்தல் புரியும்? அவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். உட்கார்ந்து பாடம் நடத்தும் தொனியும் ஒரே இடத்தில் அமர்ந்து எப்போதும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து தான் நடத்துவார். இன்றுள்ள புரிதல் எல்லாம் நமக்கு அப்போது ஏது? அப்படி அவர் உட்கார்வதில் நமக்கு அவர் மீது விமர்சனமில்லை. ஆனால் அவர் ஒரே இடத்தில் உட்கார்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஆங்கிலத்திலேயே பேசிவிட்டு போய்விடுவார். அப்புறம் எங்களுக்கு எப்படி ஆங்கிலம் தெரியும்🤣😢. ஆறாம் வகுப்பிலோ, வந்த ஆசிரியர் ஆங்கிலம் நடத்தவே மாட்டார்.
இதையும் படிங்க :
♦ தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு அன்பான வேண்டுகோள் !
♦ எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்… எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்… ஆனால்…
அடுத்து எட்டாம் வகுப்பு யார் ஆங்கிலம் நடத்தினாரகள் என்று நினைவே இல்லை. ஒன்பதாம் வகுப்பில் ஒரு ஆசிரியர் வகுப்பிற்கு வந்து What is Grammar ? என்று கரும்பலகையில் எழுதிய போது நான் மட்டுமல்ல வகுப்பறை முழுவதுமே திருதிருவென்று முழித்தோம். எழுதிய அந்த ஆசிரியர் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் என்பதால் வகுப்புக்கு வருவதே அரிது, பத்தாம் வகுப்புக்கு மட்டுமே போவார். அலுவலக வேலையாகவே எப்போதும் தலைமை ஆசிரியர் அறையில் தான் பணி.அன்றிலிருந்து இன்று வரை அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர் இல்லாத நிலைதான் பாருங்கள்.
இப்படியான சூழலில் தான் ஆங்கிலம் படித்து வந்தேன், புரிந்து படித்தாலும் வார்த்தைகள் தெரியாது என்பதால் கடினமாகவே இருக்கும் . மனப்பாடமாகவே படித்து படித்து பள்ளிக் காலத்தை முடித்தவள் தான் நான்.
இப்போது இந்தக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க வாய்ப்பு, இருப்பினும் முழுத் திருப்தியுடன் சொல்லித்தர நேரமோ சூழலோ இல்லை. காரணம் நான் எப்போதும் சொல்வது போல அடிப்படையே கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத குழந்தைகள், எண்ணிக்கையோ அறுபது, இன்னும் சில காரணங்கள்.
இவர்களுக்கு என்னால் இயன்ற வரை ஆங்கில வகுப்பு எடுத்தேன். இந்தக் குழந்தை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். பொக்கிஷமானவற்றுள் ஒரு கடிதம் இது. இந்த வகுப்பில் பயிலும் அறுபது குழந்தைகளுக்கும் #ஆங்கில #அகராதி வேண்டும். நட்பில் இணைந்துள்ளவர்கள் உதவி செய்தால் பெருமகிழ்ச்சியாக இருக்கும்.
உமா❤️
– ஆசிரியை உமா மகேஷ்வரி