தூய சக்தியா ? மாய சக்தியா ?
விஜய ‘பாஸ்’கர்களை கட்சியில் இணைத்து நம்பி வாக்களித்தோர் மத்தியில் ‘ஃபெயில்’ ஆகிக் கொண்டிருக்கிறார் முதல்வர், விஜய். தவெகவின் தனித்துவமே அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பெரும்பாலானோர் எளிய பின்னணியைக் கொண்டவர்கள்; புதியவர்கள் என்பதுதான்.
அதுவும், அதிமுக -திமுக அளவிற்கு பொதுக்கூட்டங்களுக்கு, தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரிய அளவில் செலவு செய்ய இயலாதவர்கள். திராவிட கட்சிகளின் பணபலம், அதிகார பலத்திற்கு எதிராக யார் வேட்பாளர் என்பதைக்கூட பார்க்காமல், விஜய் என்ற ஒற்றை முகத்துக்காக விசில்… விசில் என வாக்களித்து, அறியா முகங்களையும் அறிமுகப்படுத்தினர்.
ஆனால், நீங்களோ ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு ஊழல் பெருச்சாளிகளை அல்ல… ஊழலின் ‘டிராகன்’களை கட்சிக்குள் இணைத்துள்ளீர்கள். அது உங்கள் கட்சியையே சீரழித்துவிடும். சட்டமன்றத்தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என திமுகவை விமர்சித்துவிட்டு, சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது எம்டிஎம் குட்கா உரிமையாளரிடம் மாதம் 14 லட்ச ரூபாய் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக CBI குற்றப் பத்திரிகையில் தாக்கல் செய்துள்ள ‘குட்கா’ புகழ் விஜய பாஸ்கரையே கட்சியில் இணைப்பது, திமுகவினரை சிரிக்க வைக்காதா?
திமுகவிற்கு ஒரு செந்தில் பாலாஜி என்றால், அதிமுகவிற்கு ஒரு விஜய பாஸ்கர் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டவர், விஜய பாஸ்கர். ஊழல் செய்தவர்களை விடவே மாட்டேன் என சொல்லிவிட்டு, கட்டியணைப்பது சரியா?

நீங்கள் கரூர் செல்லும்போது, விஜய பாஸ்கர்கள் பிரமிக்கும் அளவுக்கு, பிரமாண்ட வரவேற்பை கொடுப்பார்கள். உங்களுக்கு சீர் கூட எடுத்து வருவார்கள். ஆனால், இதை பார்க்கும் உங்களது மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு நாமும் இதுபோன்ற வரவேற்பை அளிக்கவேண்டும் என்று தோன்றுமல்லவா?
அதற்கு, அவர்கள் என்ன செய்வார்கள்? விஜய பாஸ்கர்களைப் போலவே ஊழல் செய்வார்கள் அல்லவா? சொத்துகளை குவிப்பார்கள் அல்லவா? தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் அல்லவா? அப்படியென்றால், நீங்கள் சொன்ன புதிய மாற்றம் எங்கே? இதுபோன்றவர்களை சேர்ப்பதால், உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு புதிய மாற்றம் அல்ல, ஏமாற்றம்தான் மிஞ்சும்!
பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் அது விஷம்தானே? உங்களை நீங்கள் தூய சக்தியாக கூறினால், இதுபோன்றவர்களை சேர்க்கும்போது, நீங்களும் தீய சக்தியாகத்தானே மாறுவீர்கள் முதல்வர் விஜய்?
மக்கள் உங்களிடம் எதிர்பார்த்தது புதிய அரசு; புதிய ஆட்சி; புதிய வேகம்; புதிய செயல்பாடுகள் தான்! ஆனால், நீங்களோ ‘சந்திரமுகி’ அரண்மனையை வாங்கி பெயிண்ட் அடிப்பதுபோல், இவர்களை எல்லாம் வாங்கி பெயிண்ட் அடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியே போனால், தூயசக்தி மக்கள் மத்தியில் ‘மாயசக்தி’ ஆகிவிடும்!
— வினிசர்ப்பனா, பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.