தேர்தல் வாக்குறுதிகள் : தூண்டில் இரையாகி விடாமல் இருந்தால் சரி !
தமிழ்நாட்டின் அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு, வணக்கம்.
தமிழ்நாட்டில் 17ஆவது ஜனநாயகத் திருவிழா – 2026, களை கட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணி கணக்குகளைத் தாண்டி தேர்தல் திருவிழாவின் கதாநாயகனே கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்தான். தமிழகத்தில் அவை வெறும் சடங்குத்தனமான அறிவிப்புகளாக அல்லாமல், மக்களின் ஓட்டுகளை நிர்ணயம் செய்யக்கூடிய முக்கியமான முன்னெடுப்புகளுள் ஒன்று என்றாகிவிட்டது.
திமுக தரப்பில் இந்தமுறை 525 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ1000-த்திலிருந்து இரண்டாயிரமாக அப்படியே இரட்டிப்பாக்கப்படும். புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ்க் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும்.

நெல் கொள்முதல் விலை: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குவிண்டாலுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தப்படும். இல்லத்தரசிகள் புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க அல்லது பழையவற்றை மாற்றிக்கொள்ள ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள்: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பிணையில்லாக் கடன் (Collateral-free loans) ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ்க் காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும்.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 5 லட்சம் புதிய வீடுகளும், நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் மூலம் 10 லட்சம் வீடுகளும் கட்டித் தரப்படும். இலங்கைத் தமிழர் நலன்: இலங்கைத் தமிழர்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் மற்றும் சேதமடைந்த வீடுகள் சீரமைக்கப்படும்.” என்பது போன்ற அறிவிப்புகளோடு, திமுக அரசில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வந்த நிலையில், “8 வயதுக்கு கீழான சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும்” என்பதாக வெளியான வாக்குறுதி கவனத்தை பெற்றிருக்கிறது.
அதிமுக தரப்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,0000.00. ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு இலவச பிரிட்ஜ் (Refrigerator) . மேலும், மாதம் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
நிறுத்தப்பட்ட அம்மா ஸ்கூட்டர் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு ரூ.25,000 மானியத்தில் 5 லட்சம் வாகனங்கள் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். தற்போது பெண்களுக்கு மட்டும் இருக்கும் இலவசப் பேருந்து பயணம் ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். முதியோர் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.” என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள்.

த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500.00; குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்; திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும், பட்டுச்சேலையும் சீராக வழங்குவேன். இடைநிற்றலை தடுக்க பிள்ளைகளின் தாய்க்கு ஆண்டுதோறும் ரூ15,000.00; தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் பேபி கிட்டும்; அரசு போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களுக்கு பஞ்சமில்லை.
29 வயதிற்கு மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
12-ஆம் வகுப்பு முதல் பி.ஹெச்டி (PhD) வரை படிக்கும் மாணவர்களுக்கு எவ்விதப் பிணையும் இன்றி ரூ.20 லட்சம் வரை வட்டியற்ற கடன் வழங்கப்படும். நேர்மையான இளம் தொழில் முனைவோருக்கு எவ்விதப் பிணையும் இன்றி ரூ.25 லட்சம் வரை வட்டியற்ற கடன் வழங்கப்படும். வெளிப்படையான மற்றும் ஊழலற்ற அரசை அமைப்பதாகத் தவெக தலைவர் ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான் வழக்கம்போல, தனக்கே உரிய பாணியில், “விவசாயிகளை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். பனை பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தையில் விற்பனை செய்தல். அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பிள்ளைகள் கட்டாயம் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும் என்ற அதிரடி விதிமுறை. சென்னையின் நெரிசலைக் குறைக்கவும், நிர்வாகத்தைச் சீரமைக்கவும் தமிழகத்தில் மண்டல வாரியாகப் பல்வேறு நிர்வாகத் தலைநகரங்கள் உருவாக்கப்படும்” என்பதாக அறிவித்திருக்கிறார்.
திமுக அரசின் மகளிர் பயணம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக்கி இலவசத்துக்கு கையேந்த வைக்கும் திட்டங்கள் என்பதாக, விமர்சித்து வந்த நிலையில் தேர்தல் நேரத்தில் தங்களது தேர்தல் அறிக்கையில் அதற்கு போட்டியாக மட்டுமல்ல அதற்கு மேலேயும் ஒரு படி சென்று ”தாய்மாமன் சீர்” ரேஞ்சுக்கு அறிவித்திருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.
எது எப்படியோ, தேர்தல் நேரத்தில் மீனுக்கு போடும் தூண்டில் இரை போல தேர்தல் வாக்குறுதிகள் அமைந்துவிடக்கூடாது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
தமிழன்புடன் : ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.