நடுக்குவாத நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள்
நடுக்குவாத நோயை எப்படி கண்டறிவது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நடுக்குவாத நோய் உள்ளதா, இல்லையா என்பதை, நோயாளியை பரிசோதனை செய்வதன் மூலமும், அவர்கள் அளிக்கும் பதில்களின் மூலமும் மூளை நரம்பியல் நிபுணரால் சுலபமாக கண்டறிய முடியும். இதற்கு எந்த பிரத்யேக இரத்த பரிசோதனையோ அல்லது ஸ்கேனோ தேவையில்லை.
ஆனால் நடுக்குவாத நோய் ஏன் வந்தது? மூளையில் ஏதேனும் கோளாறு உள்ளதா? மூளையில் சுருக்கம் ஏற்பட்டு விட்டதா? என்பதை கண்டறிவதற்கு சில பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. அதில் முக்கியமானது MRI Brain Scan.
டோபமின் என்ற நொதி குறைவதால் வருவது தான் நடுக்குவாத வியாதி என்று முன்பே பார்த்தோம். இந்த டோபமின் நொதி மூளையில் எந்த பகுதியில் குறைந்து உள்ளது என்பதை உறுதி செய்வதற்கு PET Scan உதவி செய்கிறது. ஆனால் இந்த பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே நடுக்குவாத நோய் என்பது மருத்துவரால் நோயாளியின் உடலில் உள்ள மாற்றங்களை வைத்தே எளிதாக கண்டறியும் ஒரு நோயாகும்.
இப்போது நடுக்குவாத நோய்க்கான சிகிச்சை முறைகளை பற்றி பார்ப்போம். மூளையில் இயல்பாக சுரக்க வேண்டிய டோபமின் என்ற நொதி சரிவர சுரக்காததால், இதை நாம் மாத்திரைகளாக கொடுக்கிறோம்.
மேலும் இந்த நொதியின் செயல் திறனை தூண்டுவதற்கு, ஒருசில மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.
இந்த மாத்திரைகள் 6 மணி நேரமே வேலை செய்யக் கூடியது. எனவே ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து ஐந்து முறை மாத்திரைகளை உட்கொள்ளும் நிர்பந்தத்திற்கு நோயாளி தள்ளப்படுகிறார்.
ஒருநாளில் ஒரு வேளை மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் மிகவும் மோசமாக நோயின் அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறார். இந்த மாத்திரைகள் எல்லா வகையான நடுக்குவாத நோய்க்கும் பலன் அளிக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
நடுக்குவாத நோயில் பல வகைகள் உள்ளன. சில வகைகள் மாத்திரைகளுக்கு நன்கு கேட்கும், சிலவற்றிற்கு மாத்திரைகளால் எந்த பலனும் கொடுக்க முடியாது. மூளையில் ஒருசிலப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் போது மாத்திரைகள் சரிவர பலன் அளிப்பதில்லை. சில நோயாளிகள் முதல் மூன்றுலிருந்து ஐந்து வருடங்கள் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு நன்முறையில் இருக்கிறார்கள்.
இதே நோயாளிக்கு ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே மாத்திரைகள் பலனை அளிக்காமல், பல்வேறு விதமான பிரச்சினைகளையும் தருகின்றன.
இதைத் தவிர்க்க இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மூளை நரம்பியல் நிபுணரை சந்தித்து பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து மாத்திரைகளின் அளவை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் பல நாட்கள் தொந்தரவுகளிலிருந்து விலகி இருக்கலாம்.
புதிய மருத்துவ முறை ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வி இதை படிக்கும் அனைவர் மனதிலும் உதிக்கும் என்றே நினைக்கிறேன்.
ஆம். DBS (Deep Brain Stimulation) என்னும் புதிய மருத்துவ முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முறைக்கு நோயாளி தகுதி உடையவரா என்பதை மூளை நரம்பியல் நிபுணர் கண்டறிந்து, எந்த பகுதி தூண்டப்பட வேண்டும் என்பதை ஆலோசித்து, இந்த கருவியானது உடலில் பொருத்தப்படுகிறது. இது ஒரு Pace Maker போன்ற கருவியாகும்.
மூளையின் எந்த பகுதியை தூண்ட வேண்டுமோ அந்த பகுதியை Electrode கொண்டு தூண்டப்படுகிறது. தகுதி உடையவர்கள் இந்த சிகிச்சை செய்து கொண்டு பயன்பெறலாம். இந்த சிகிச்சை இப்போது நமது திருச்சியிலேயே உள்ளது.
நடுக்குவாத நோய்க்கு மாத்திரைகள் மட்டும்தான் சிகிச்சை முறை என்று எண்ண வேண்டாம், உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் நமது மூளையை தினமும் தூண்டச் செய்து மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தலாம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது உடற்பயிற்சிக்காக மற்றும் தியானத்திற்காக ஒதுக்க வேண்டும்.
நடுக்குவாத நோயாளிகளுக்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.