வீடியோ ஆதாரம் காட்டியும் கண்டுக்காத திருச்சி அதிகாரிகள்! கிராமசபை கூட்ட அவலம்!
வீடியோ ஆதாரம் காட்டியும் கண்டுக்காத திருச்சி அதிகாரிகள்! கிராமசபை கூட்ட அவலம்!
கடந்த மே 1ஆம் நாள் திருச்சி- திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட குண்டூர் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் திருவளர்ச்சிப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி லெட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தை நடத்தவேண்டிய ஊராட்சி மன்றச் செயலர் நடத்தவில்லை. மாறாக அடுத்து அவர் பேசுவார், இவர் பேசுவார்.
சரி உங்க பகுதி குறைச் சொல்லுங்க என்று ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திருமுருகன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் சொல்லவேண்டிய பதில்களையெல்லாம் அவரின் கணவர் திருமுருகன், மனைவியின் அருகே அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கிராமசபைக் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிக்கப்பட்டது” என்ற செய்தியை அங்குசம் செய்தி இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். (இதழ்-14.கிராமசபைக் கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் -வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள் – தலைப்பு)
இதனைத் தொடர்ந்து, கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத் தலைவர், குண்டூர் பகுதியின் சமூகநல ஆர்வலர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் 02.05.2022ஆம் திங்கள்கிழமை ‘மக்கள் குறைதீர்ப்பு நாள்’-ன் போது குண்டூர் கிராமசபைக் கூட்டம் முறைப்படி நடைபெறவில்லை என்றும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் வழங்கியது குறித்தும் விசாரணை நடத்தவேண்டும் என்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அம் மனுவை உதவி இயக்குநர் (ஊராட்சி) அவர்களுக்கு மேல்நடவடிக்கைக்காக அந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். (மனு பெற்றுக்கொண்ட ஒப்புதல் எண்.TN/RDPR/TRY/I/COLLMGDP/02MAY22/3509548) அம்மனுவோடு, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் திருமுருகன் பேசும் ஒளிப்படங்கள் 6 இணை க்கப்பட்டிருந்தது. மேலும், திருமுருகன் பேசும் வீடியோ 2.30 நிமிடம் பதிவு செய்யப்பட்டது பென்டிரைவ் மூலம் நேரில் உதவி இயக்குநர்(ஊராட்சி) அவர்களிடம் சமூக ஆர்வலர் தி.நெடுஞ்செழியன் வழங்கினார்.
மேலும், நெடுஞ்செழியன் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த 32 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை நேரில் உதவி இயக்குநர்(ஊராட்சி) அவர்களிடம் இயக்கிக் காட்டியுள்ளார். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குநர் நெடுஞ்செழியனிடம் தெரிவித்துள்ளார்.
தி.நெடுஞ்செழியன் 09.05.2022ஆம் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று நேரில் உதவி இயக்குநர்(ஊராட்சி) அவர்களைச் சந்தித்து, கிராமசபைக் கூட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனு ஏற்கப்பட்ட விவரங்கள் எதுவும் TN CM Helplineலிருந்து வரவில்லையே என்று கேட்டுள்ளார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் உங்களுக்குப் பதில் வரும் என்று நேரில் உதவி இயக்குநர்(ஊராட்சி) தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மே 25ஆம் நாள் உங்களுக்கான பதில் TN CM
Helpline இல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அலைபேசியில் மெஜேஸ் வந்தது. பதில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதில்,“மனு ஏற்கப்படுகின்றது, கூட்டப்பொருள் தொடர்பாக கேள்வி எழுப்பியதில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பதிலளிக்க முயன்றார். அதில் சிலர், ஊராட்சி மன்ற தலைவர்தான் பதில் அளிக்க வேண்டும் என கூறியதால் அனைத்து கூட்டப் பொருளுக்கும் ஊராட்சி மன்ற தலைவரே பதிலளித்தார்.
எனவே, குண்டூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது என்பதை மனுதாரதருக்கு தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அங்குசம் செய்தி இதழிடம் பேசிய சமூக ஆர்வலர் தி.நெடுஞ்செழியன்,“குண்டூர் கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமியின் கணவர் திருமுருகன் முன்னின்று நடத்தினார். எல்லா பதில்களையும் அவரே கூறினார் என்று வீடியோ ஆதாரத்துடன் கொடுத்து விசாரணை நடத்தத்தான் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தேன்.
உதவி இயக்குநர் (ஊராட்சி) அவர்கள் விசாரணை எதுவும் நடத்தாமல், கூட்டம் சிறப்பாக நடைபெற்றது என்று பதில் அளித்துள்ளார். ஆனால் அதில் ஒரு உண்மை வெளிப்பட்டுள்ளது. என்னவெனில், ‘கூட்டப்பொருள் தொடர்பாக கேள்வி எழுப்பியதில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பதிலளிக்க முயன்றார்’ என்பதாகும். பதில் அளித்தார் என்பதற்கு 32நொடிகள்+2.30நிமிடம் வீடியோ ஆதாரம் கொடுக்கப்பட்டும் உதவி இயக்குநர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.
“முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக இருக்கிறதே” என்ற சொலவடை கிராமங்களில் இன்று வழக்கில் உள்ளது. அந்த சொலவடையை உதவிஇயக்குநர் (ஊராட்சி) அவர்கள் உண்மையாக்கி விட்டார்களே என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. இந்தியாவின் இதயங்கள் கிராமங்கள். கிராமங்கள் சிறப்பாக இருந்தால்தான் இந்தியா சிறப்பாக இருக்கும் என்று அண்ணல் காந்தியடிகளின் வாக்கிற்கேற்பதான் கிராமசபை கூட்டம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது. காந்தியடிகளின் எண்ணத்திற்கு மாறாக கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு செல்லப் படும்போது உரிய நீதி கிடைக்கவில்லை என்ற வருத்தம்தான் ஏற்படுகின்றது” என்றார்.
மேலும், “30.05.2022 நாள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, மேற்படி கிராமசபைக் கூட்டம் தொடர்பாக முறையான விசாரணை கூட்டம் நடத்தப்படவேண்டும். கலந்துகொண்டவர் களையும் என்னையும் இணைத்து அந்த விசாரணை நடைபெறவேண்டும் என்று மேல்முறையீடு செய்திருக்கிறேன்.
என் மேல்முறையீடு மனு அஞ்சல் வழி 31.05.2022ஆம் நாள் ஆட்சித்தலைவர் அலுவலகம் பெற்றுள்ளது. ஆட்சித்தலைவரிடமும் எனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறுவழி எனக்குத் தெரியவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நல்லாட்சி வழங்கவேண்டும் என்று இணைய வழியில் புகார் கொடுக்கும் வசதி, பதில் பெறும் வசதி என்று பல வழிகளில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அரசு நிர்வாகத்தில் இருப்போர் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் நடந்து ஓராண்டும் முடிந்து விட்டது என்பதை அறிந்தும் அறியாதுபோல செயல்படுவதுதான் வேதனையின் உச்சக்கட்டமாக உள்ளது” என்று முடித்துக்கொண்டார். சராசரி குடிமக்களுக்கு உரிய நீதி எல்லா நிலைகளிலும் கிடைக்க அங்குசம் செய்தி இதழும் தொடர்ந்து களத்தில் நிற்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை என்பதை உரக்கச் சொல்வோம்.
-ஆசைத்தம்பி