தமிழில் பேசினால் தான் தமிழ் வாழும் – அகத்தியன் ஜான் பெனடிக்கட் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் “திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள்” தொகுப்பு நூல் வெளியிட்டு விழா 29.08.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலையரங்கம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அமெரிக்கா வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் அகத்தியன் ஜான் பெனடிக்ட் ‘தமிழர்களே… தமிழில் பேசுவோம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் சௌமா இராஜரெத்தினம் தலைமை வகித்தார். நிகழ்வுக்கு பத்மஸ்ரீ மா.சுப்புராம், கவிஞர் வீ.கோவிந்தசாமி, சூர்யா சுப்பிரமணி, அரிமா பா. முகமதுஷபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் சங்கரி சந்தானம் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்புரையாளரை அறிமுகம் செய்து திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வை.ஜவஹர் ஆறுமுகம் பேசும்போது,“தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பார்த்து, தமிழ்ப் பேசுங்கள்… என்று சொல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இப்போது யாரும் நூல்களைப் படிப்பது இல்லை, இதழ்கள் மற்றும் நாளிதழ்களை வாசிப்பதில்லை. இதனால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற இழிநிலை ஏற்பட்டுள்ளது. தமிழைச் சரியாக உச்சரித்து பேசினால்தான் தமிழ் வாழும். இல்லையென்றால் தமிழர்களால் தமிழ் அழியும் நிலையும் ஏற்படலாம். தமிழைச் சரியாக பேசி தமிழை நாம் வாழவைக்க வேண்டும். தமிழர்களே தமிழில் பேசுங்கள் என்று கேட்டுக்கொள்ள அமெரிக்காவின் வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர் அகத்தியன் ஜான் பெனடிக்கட் வந்து நமக்கு வேண்டுகோள் விடுக்கும் அளவுக்குத் நம் தமிழின் நிலைமை உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்” என்று உரையாற்றினார்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் நூல் தொகுப்பை திருச்சி மாவட்ட நலக்குழுவின் பொருளாளர் சேவை கோவிந்தராஜ் வெளியிட்டார். நூல் தொகுப்பை பொறியாளர் கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ரெ. மதனா, முகமது சித்திக், மருத்துவர் சுப்பையா பாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலை வெளியிட்ட சேவை கோவிந்தராஜன்,“ தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் உள்ளன. எந்த மாவட்டத்திலும் எழுத்தாளர்களுக்கென்று மாவட்ட அளவில் தொகுப்பு நூல் வந்ததாகத் தெரியவில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள 93 எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்கள் எழுதிய நூல்கள் குறித்த குறிப்புகளோடு இந்த அரியப் பணியைத் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் முனைப்போடு செயலாற்றி வெளியிட்டுள்ளது.
இந்தத் தொகுப்பு வெளிவர உழைத்த சமூக ஆர்வலர் யோகா விஜயகுமார் அவர்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். படைப்பாளர்களும் எழுத்தாளர்களும் நிறைந்த சமூகம்தான் செழிப்பான சமூகமாக நிலைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்தும் நிகழ்வுகளுக்கு இந்தக் கூட்ட அரங்கம் விலையில்லாமல் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர்களைப் பாராட்டுவதும் இலக்கிய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று திருச்சி மாவட்டத்திற்கு எழுத்தாளர் சங்கம் பெருமை சேர்க்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
சிறப்புரையாற்றிய அகத்தியன் ஜான் பெனடிக்கட் பேசும்போது,
“தமிழ் நம் தாய்மொழிதானே அதை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனநிலையில் தமிழர்கள் உள்ளனர். பொருளோடு பேசவேண்டும். பொருளற்ற பேசக்கூடாது. திருவள்ளுவர் சுட்டிக்காட்டியதுபோல், வெல்லும் சொல் அறிந்து பேச வேண்டும். பயன் இல்லாத பேச்சுகளைப் பேசக்கூடாது. இந்த சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உரிய வகையில் திட்டமிட்டு, செறிவாகவும், சுருக்கமாகவும் பேச வேண்டும். இப்போது சட்டமன்றத்தில், உறுப்பினர்கள் மன்மத வணக்கம் என்கிறார்கள். கர்மவீரர் காமராசரை காமவீரர் என்று உச்சரிக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல் அமைச்சர் விஜய், ‘தமிழ் என்றால் கெத்து… தமிழ் என்பது பவர்’ என்று குறிப்பிடுகின்றார். கெத்தும், பவரும் தமிழ்ச் சொற்களா? சட்டமன்றத்தில் இப்படியா ஒரு செய்தியைப் பேசி பதிவு செய்வது? நல்ல தமிழில் பேசவேண்டும். இல்லையென்றால் பாரதி சொன்னதுபோல் ‘மெல்லத் தமிழினி சாகும் என பேதை உரைத்தனன்’ போல தமிழ் மெல்ல அழியும் நிலை ஏற்படும். தமிழர்கள் புலனங்களில் செய்திகளைப் படிப்பதைத் தவிர்த்து, நல்ல நூல்களையும், இதழ்களையும் நாளிதழ்களையும் படிக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் நல்ல தமிழில் பேசமுடியும். தமிழில் பேசினால்தான் தமிழ் வாழும்… இல்லையெனில் வீழும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்வோம்” என்று உரையாற்றினார்.
நிகழ்வில் பிடித்த கவிதை என்னும் பொருண்மையில் கவி.செல்வா, கவிஞர் ஆநிறைச்செல்வன், நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். பிடித்த கதைகள் என்னும் பொருண்மையில் த.இந்திரஜித், ஆங்கரை பைரவி, முனைவர் இரா.ஜெயலெட்சுமி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வின் நிறைவில், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் யோக விஜயகுமார் நன்றி கூறினார். திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சலேத் நிகழ்ச்சியை அழகு தமிழில் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி மாலை 5.30 மணிக்குத் தொடங்கியது. உரையாற்றுவோருக்கு ஒதுக்கப்பட்ட 3 நிமிடம், 5 நிமிடம், 10 நிமிடம் என்ற நேர அளவில் தங்களின் உரையை நிறைவு செய்தனர். இரவு 7.55 மணிக்கு நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. சரியா இரவு 8.00 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது. இந்த வரலாறு திருச்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே புதியது என்றால் மிகையில்லை. இதுபோன்று இலக்கிய நிகழ்ச்சிகள் செறிவுடன் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது நிகழ்ச்சியின் சிறப்பு என்றே கூறலாம்.
— ஆதவன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.