சிறார் இலக்கியத்தின் சிறகுகள் ! எழுத்தாளர் துரை. அறிவழகன்
சிறார் இலக்கியம் -ஆசிரியா் அறிமுகம்
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த வலையன்வயல் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் துரை.அறிவழகன். ‘அன்னம்’ மீரா அவர்களின் மகன் கதிரின் பால்ய நட்பால் புத்தக வாசம் அந்த பள்ளி நாட்களிலேயே தனக்குள் படர்ந்துவிட்டதாக குறிப்பிடும் அவர், கல்லூரி நாட்களில் ‘சுருதி’ எனும் நவீன இலக்கியம் சார்ந்த சிற்றிதழையும் நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார்.
மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
2020-ல், 17 சிறார் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து “ஒரு ஊர்ல ஒரு நரி” எனும் தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார். பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்திற்காக, இவர் எழுதிய சிறார் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. சாகித்ய அகாதெமி நிறுவனத்திற்காக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ள ‘சிறார் அறிவியல் சிறுகதைத் திரட்டு’ நூலிலும் இவரது சிறார்கதைகள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன.

“நீலியின் பயணம்” சிறார் சாகச நாவல், தான்சானியாவின் ஸ்வாகிலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட Read It Publishers, Tanzania என்ற பதிப்பகத்தாருடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும், தினமலர் – பட்டம் மாணவர் பதிப்பில் இவரது சிறார்களுக்கான கதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வருகிறது. இதுவரை சிறார்களுக்கான ஏழு நாவல்களை எழுதியிருக்கிறார்.
1967 பிப்ரவரி மாதம் 22ம் தேதி பிறப்பு. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த வலையன்வயல் எனும் குக்கிராமம். கல்லூரி காலம் துவங்கி கலை இலக்கிய, சிறுபத்திரிக்கை சூழல் செயல்பாடுகளுடன் பயணம்.
எனது பால்ய காலம் மதுரையிலும், சிவகங்கையிலும் கழிந்தன. மேற்படிப்பு பயின்றது காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளியில். இளங்கலை அறிவியல் (வேதியியல்) பட்டம் திருப்பத்தூற் கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து தபாலில் இதழியலில் முதுகலை டிப்ளமோ பட்டத்தை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பெற்றேன்.
1997-ல் “கோகுல் கம்ப்யூட்டர்ஸ்” எனும் சொந்த நிறுவனத்தை காரைக்குடியில் தொடங்கி ஆறு வருடங்கள் நடத்தியுள்ளேன். 2004-ஆம் ஆண்டு இறுதியில் மலேசியாவிற்கு தோட்டவிசாவில் சென்று பதினான்கு ஆண்டு காலம் அங்கு பணிபுரிந்த பின்னர் 2018-ல் ஏற்பட்ட “மூளை பக்கவாதம் நோய் காரணமாக நாடு திரும்பினேன். அதன் பிறகு தொடர்ந்து எழுத்தையும், வாசிப்பையும் முழு நேரப் பணியாக மாற்றிக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
மனைவி ஜெயசுதா, மகன்கள் கோகுல்ராஜ் மற்றும் சபரி கண்ணன் குடும்பத்தினருடன் தற்பொழுது காரைக்குடியில் வசித்து வருகிறேன்.
இலக்கியத்துடனான அறிமுகம் எப்படி தொடங்கியது?
77-80 ஆண்டுகளில் எனது குழந்தைப் பருவ நீட்சியின் நிலமாக அமைந்தது சிவகங்கை, அந்த 10 முதல் 13 வயது வரையிலான ஆரம்பப் பள்ளி காலகட்டத்தில் கிடைத்த ‘அன்னம்’ மீரா அவர்களின் மகன் கதிரின் பால்ய நட்பால் புத்தக வாசம் அந்த நாட்களிலேயே எனக்குள் படர்ந்துவிட்டது. நவீன இலக்கிய வாசிப்பு என்பது எனது கல்லூரி முதலாம் ஆண்டில் பத்தொன்பதாம் வயதில் நிகழ்ந்தது.
அந்நாட்களில் ‘கவிஞர் மீரா’ நடத்திய “அன்னம் விடு தூது”, கதிர் நடத்திய “ஊசிகள்” ஆகிய இதழ்களில், சிறு சிறு ஈடுபாட்டின் மூலம் என் சிறகுகளை பதப்படுத்திக் கொண்டே இருந்தேன். மேலும் ‘சுருதி’ எனும் நவீன இலக்கியம் சார்ந்த சிற்றிதழையும் நண்பர்களுடன் இணைந்து நடத்தியுள்ளேன். இப்படித்தான் எனக்குள் நவீன இலக்கியத்தின் விழிப்பு நிகழ்ந்தது.
சிறார் இலக்கியத்திற்குள் தடம் பதித்தது குறித்து….
2018 இறுதியில் மூளை பக்கவாதம் காரணமாக மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய பின் வாசிப்பும், எழுத்துமே எனக்குள் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான உணர்வு தளத்தின் வெளிப்பாடாக மாறின.
எனக்குள் அலையோடி நின்ற, குழந்தைமை நிலத்தின் வரைபடத்தை வரைவதாகவும், குழந்தைகளின் அக உலகு மலர்வுக்கான களமாகவும் படப்பிலக்கியத்திற்குள் பயணிக்கத் தொடங்கினேன். சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கினேன்.
தங்களின் சிறார் இலக்கிய பங்களிப்புகள் குறித்து….
2020-ல், 17 சிறார் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து “ஒரு ஊர்ல ஒரு நரி” எனும் தொகுப்பு நூலைக் கொடுத்துள்ளேன். பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் ‘மகி எழுதிய முதல் கதை’, ‘தலைவர் உருவாகிறார்’, ‘கனவு டாக்டர்’, ‘திவ்யா நடந்த பாதை’ ஆகிய நான்கு கதைகள் (9-12 வயது குழந்தைகளுக்கானவைகள்) இதுவரை நூலாக்கம் பெற்றுள்ளன.
2024-ல் கொ.மா.கோ. இளங்கோ அவர்களால் சாகித்ய அகாதெமி நிறுவனத்திற்காக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ள ‘சிறார் அறிவியல் சிறுகதைத் திரட்டு’ நூலில் எனது “தாத்தா சொன்ன கதை” இடம் பெற்றுள்ளது.
2026-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி நிறுவனத்தின் நூலாக்கத்திற்காக திரு. பூபதி பெரியசாமி அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவர இருக்கும் ‘குழந்தைகள் சிறுகதைத் தொகுப்பு’ நூலில் இடம்பெற எனது “குட்டி தேவதைகள்” கதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எனது “நீலியின் பயணம்” சிறார் சாகச நாவல், தான்சானியாவின் ஸ்வாகிலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட Read It Publishers, Tanzania என்ற பதிப்பகத்தாருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் – பட்டம் மாணவர் பதிப்பில் எனது சிறார்களுக்கான கதைகள் தொடர்ந்து பிரசுரம் கண்டு வருகின்றன. சிறார்களுக்கான எனது ஏழு நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
சிறார் இலக்கியத்தை கொண்டு சேர்ப்பதில் நம் கடமைகள் என்ன?
உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. தற்போது மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வது மட்டுமே இலக்காக இருக்கும் நேரத்தில் அவர்களின் திறன் மேம்படவும் சுயச்சிந்தனைத் திறன் மேம்படவும் விளையாட்டுக் கல்வி, கலைக் கல்வி, கதைக் கல்விப் போன்றவற்றின் தேவையை விளக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து வருகிறோம்.
பின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை நாமும் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு பள்ளியின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன். சுவீடன் கல்வி முறையும் இப்படியானதாகவே உள்ளது.
“குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பகுதியை, சிறார் கலை இலக்கியத்துக்கும் நாம் கொடுக்க வேண்டும். நம்மையறியாமலேயே சிறாரின் எல்லையற்ற படைப்பூக்கத்தை இல்லாமற்செய்து, அவர்கள் இயல்பின் மகிமைகளை நாம் அழித்துவிடுகிறோம்.
பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு குழந்தைகளின் உலகத்தை விசாலமாக்கும்; அறிவை ஆழமாக்கும். அந்த வகையில் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மதிப்பீடுகளைக் கடத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 5-8 வயது வயது வரையிலான குழந்தைகளுக்கு 100-150 சொற்களிலான கதைகள், 9-11 வயது வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 சொற்களிலான கதைகள், 12 – 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு அதிகபட்சமாக 750 சொற்களிலான கதைகள் ஆகியவைகளை தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. முதல்கட்டமாக வெளியீடு கண்ட இவ்வகையிலான 119 நூல்கள் 48-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, 2025–யில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக, வயது வாரியாக சிறார் நூல்களை வெளியிட்ட இம்முயற்சி பெரும் பாராட்டுக்குரியதாகும்.
இத்திட்டத்தில் வெளியான எனது கதை நூல்கள் உட்பட அனைத்து நூல்களும் எங்கள் நகரத்தின் “வளர் தமிழ் நூலகத்தில்” சிறார் நூல்கள் பிரிவில் வாசிப்பிற்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி நூலகங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்கள் இவைகள்.
மற்றொரு முக்கிய விஷயம், தாய் மொழி வழி கல்வியின் மூலம் தான் குழந்தைகளின் சிந்தனைத் திறன் மலர்ச்சி அடைய முடியும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
புத்தகக் கண்காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டியது பெற்றோர் ஆசிரியர்களின் கடமை. ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒருமுறை அரங்க மேலாளராக பணியில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் பல்வேறு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் அரங்கத்தைப் பார்வையிட அழைத்து வரப்பட்டார்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர்கள் ரூ.200/- ஐ வகுப்பு ஆசிரியர்கள் வசம் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். குழந்தைகளுக்கான புத்தகங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்து வாங்கிக்கொடுத்தார்கள். உயர்கல்வி மாணவ மாணவியர்கள் குறைந்தது ரூ.400/- உடன் வந்திருந்து தங்களுக்கான இலக்கிய புத்தகங்களை தாங்களே தேர்வு செய்தார்கள். இந்த விழிப்புணர்வு எல்லா நகரங்களிலும் ஏற்பட வேண்டும்.
தங்களின் அடுத்த சிறார் நூல் குறித்து சொல்ல முடியுமா?
சிறப்புக் குழந்தைகளின் தனித்துவமான சிந்தனைத் திறன், புத்திகூர்மை ஆகிய பரிமாணங்களை வெளிப்படுத்தும் சிறார் நாவல் ஒன்றை எழுதி முடித்துள்ளேன். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியீடு காண இருக்கிறது.
டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். 1992 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையால் ஊக்குவிக்கப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு தினம் இது. உலகம் முழுவதும் பல்வேறு அளவிலான வெற்றிகளுடன் அனுசரிக்கப்படுகிறது இத்தினம். இதன் முக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகளை சமூகம் ஏற்றுக்கொள்ளுதல், அவர்களின் திறன்களை அங்கீகரித்தல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் அவர்களை ஈடுபடுத்துதல் ஆகும்; மற்றும் மாற்றுத்திறனாளிகளைத் தாழ்வாகப் பார்க்காமல், அவர்களுக்கு சமமான மரியாதையையும் வாய்ப்புகளையும் வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் ஆகும். சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையான பாராட்டு, ஊக்குவிப்பு, புன்னகை, அன்பான அணுகுமுறை ஆகியவைகளால் அவர்களின் இருட்டு உலகை வண்ணமயமான உலகமாக மாறும் பரிமாண ஒளி ரேகைகள் சிறார்களை ஈர்த்து வாசிக்க வைக்கும் முறையில் இந்த என புதிய நாவல் எழுதப்பட்டுள்ளது.
துரை. அறிவழகன்
வீட்டு எண் : 15/2, டெலிபோன் காலனி, உதயம் நகர்,
(ஆஞ்சநேயர் கோவில் அருகில்), கோட்டையூர் (Post). பின்கோடு: 630 106.
காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்.
அலைபேசி எண் : 73392 79026
மின்முகவரி: haridurairaj23@gmail.com






Comments are closed, but trackbacks and pingbacks are open.