மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த இராஜபாளையத்தை சேர்ந்தவர் கொ.ம.கோ.இளங்கோ. பஞ்சாலைகளுக்கும் நெசவுக்கும் புகழ்பெற்றது மட்டுமல்ல; பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கிய மண்ணும் கூட.
இவரது தந்தை கொ.மா. கோதண்டம், ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர். பஞ்சாலைத் தொழிலாளியான அவர், வேலை முடிந்து வீடு திரும்பியதும் புத்தகங்களில் மூழ்கிவிடுவார். தாயார் இராஜேஸ்வரி கோதண்டம் பன்மொழிப் பண்டிதர். பல இந்திய மொழிகளிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்குத் தந்தவர். அத்தகைய இலக்கியக் குடும்பத்திலிருந்து உருவான சிறார் எழுத்தாளர் கொ.ம.கோ.இளங்கோ.
‘ஜிமாவின் கைபேசி, ‘சஞ்சீவி மாமா’ ஆகியவை இவரது அடையாளம். 50-க்கும் மேற்பட்ட உலகச் சிறார் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறார் இலக்கியம், அறிவியல் புனைவு, சமூக அக்கறை, மாய யதார்த்தம், வனவியல் எனப் பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார் என்பதைவிட எழுதிக் குவித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
”சிறார் இலக்கியம், வாசிப்பு, கலை, அறிவியல் ஆகியவற்றை இணைத்து ஒரு தொடர்ச்சியான இயக்கமாக முன்னெடுப்பதே சிறார் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி” என்கிறார், கொ.மா.கோ. இளங்கோ.

எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ நேர்காணல்:
உங்களைப் பற்றியும், நீங்கள் வளர்ந்த இலக்கியச் சூழல் குறித்தும் கூற முடியுமா?
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் இராஜபாளையம். அது பஞ்சாலைகளுக்கும் நெசவுக்கும் புகழ்பெற்றது. பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கிய மண்ணும் கூட.
எனது தந்தை திரு. கொ.மா. கோதண்டம், ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர். பஞ்சாலைத் தொழிலாளியான அவர், வேலை முடிந்து வீடு திரும்பியதும் புத்தகங்களில் மூழ்கிவிடுவார். தாயார் திருமதி. இராஜேஸ்வரி கோதண்டம் பன்மொழிப் பண்டிதர். பல இந்திய மொழிகளிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்குத் தந்தவர். அத்தகைய இலக்கியக் குடும்பத்தில் பிறந்ததே நான் பெற்ற பாக்கியம்.
எங்கள் வீட்டு நூலகத்தில் சுமார் 30,000 புத்தகங்கள் இருக்கின்றன. “இவைதான் உனக்கான சொத்து” என்று அப்பா அடிக்கடி சொல்வார். வீட்டிற்கு வரும் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்களின் சுவாரஸ்யமான பேச்சுக்கள் என்னுள் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டின.
நாங்கள் ‘கோகுலம் சிறுவர் சங்கம்’ நடத்தினோம். வாரந்தோறும் எங்கள் வீட்டில் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், பயிற்சி வகுப்புகளும் நடக்கும். வீட்டில் சிறார் இதழ்கள் குவிந்திருக்கும். சோவியத் ரஷ்யப் பதிப்பகங்கள் வெளியிட்ட வண்ணப் படக்கதைகள் எனக்குப் படிக்கக் கிடைத்தன. இத்தகைய அருமையான சூழல்தான், பதினோரு வயதிலேயே என்னை ஓர் எழுத்தாளனாக உலகிற்கு அறிமுகம் செய்தது.
உங்களுடைய கல்வி, மற்றும் பணியைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
இயந்திரவியலில் இளநிலைப் பொறியியல் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவன். மொழிகள் மீது கொண்ட ஆர்வத்தால், தாயாரின் வழிகாட்டுதலில் இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கற்றேன்.
தொழில்முறையாக, சிமெண்ட் ஆலைக் கட்டுமானம், உற்பத்தித் துறையில் அனுபவம் பெற்றேன். நைஜீரியா, சியேரா லியோன், தாய்லாந்து, மியன்மார், ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்தேன். தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஒரு முக்கியச் சிமெண்ட் ஆலையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.
இந்த உலகளாவிய பயணங்களும், பல்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரச் சந்திப்புகளுமே எனது சிந்தனை வட்டத்தை அகலப்படுத்தின. சர்வதேசக் கதைகளைத் தமிழில் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கும், உலகச் சிறார் இலக்கியங்களை நோக்கி பயணிப்பதற்கும் இந்த அனுபவங்களே முக்கியக் காரணம்.
சிறார் இலக்கியத்தையே முதன்மையாகத் தேர்வு செய்ததற்குக் காரணம் என்ன?
குழந்தைகளுக்கு உலகம் புதிது, உயிர்கள் புதிது. இந்த வயதில் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலே தேவைப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வாசிப்புப் பழக்கம்தான், ஒருவரது வாழ்நாள் முழுமைக்குமான தேடலைத் தீர்மானிக்கிறது.
சிறார்களுக்காக எழுதும்போது, ஒரு புதிய வாசகனை உருவாக்கும் பெருமை கிடைக்கிறது. ஒரு குழந்தை வாசிக்கும் முதல் புத்தகம் நான் எழுதியதாக இருந்தால், அவனுக்குள் வாசிப்பு என்னும் விதையை ஊன்றும் பேறு எனக்குக் கிடைக்கிறது.
சிறார் இலக்கியத்தின் எளிமையும், எல்லையற்ற கற்பனைச் சுதந்திரமும் என்னை ஈர்த்தவை. ஒரு கதையை எளிய மொழியில் விறுவிறுப்பாக நகர்த்துவது ஒரு கலை.
இன்றைய தலைமுறைச் சிறார்களுக்குத் தேவை எதார்த்தமான அன்பு, கருணை, தூய நட்பு, மனிதநேயம் ஆகிய பண்புகளே. இவற்றை பழங்கதைகளாகக் கூறாமல், சமகாலப் பார்வையோடு எளிய மொழியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உந்துதலே என்னைச் சிறார் இலக்கியத்தைத் தேர்வு செய்ய வைத்தது.
சிறாருக்காக எழுதுவது எதிர்காலத்தைச் செதுக்குவதற்குச் சமம்.
தங்களின் படைப்புகள் மற்றும் மொழியாக்கப் பணிகள் குறித்து விரிவாகக் கூற முடியுமா? அவற்றில் உள்ள சிறப்புகள் என்னென்ன?
எனது படைப்புகளில் சிறார் இலக்கியம், அறிவியல் புனைவு, சமூக அக்கறை, மாய யதார்த்தம், வனவியல் எனப் பல்வேறு தளங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஜிமாவின் கைபேசி’ சிறார்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அறிவியல் புனைவு நாவல். சாதியத் தீண்டாமை, அடித்தட்டு மக்களின் துயரம், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை ஆகியவற்றைப் பதிவு செய்யும் ‘சஞ்சீவி மாமா’ எனது மிக முக்கியமான படைப்பாகும்.
ஆப்பிரிக்க மூடநம்பிக்கைகளுக்குப் பின்னுள்ள அறிவியல் உண்மைகளைப் பேசும் ‘மொகாபாத் மர்மம்’, அடிமை வாழ்வின் கொடுமைகளையும் போராட்டங்களையும் பதிவு செய்யும் ‘பச்சை வைரம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளின் கற்பனைக்கு விருந்தளிக்கும் மாய யதார்த்தக் கதைகளாக ‘மந்திரக் கைக்குட்டை’, ‘சூரியனை ஒளித்த சிறுமி’, ‘நட்சத்திரக் கண்கள்’, ‘அலைகளில் அம்மா யார்?’ ஆகிய தொகுப்புகளை எழுதியுள்ளேன். வனவியலுடன் அறிவியல் செய்திகளை அறிமுகப்படுத்தும் ‘மலைபூதம் வாய்பிளந்த மர்மம்’, ‘சுழற்காற்றாக வந்த சிறுவன்’ ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.
மொழியாக்கப் பணியில், ‘மாயி-சான்’, ‘ரெட் பலூன்’, ‘புத்திசாலிப் பேடுனியா’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உலகச் சிறார் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். உலகப் புகழ்பெற்ற படக்கதைகள் ‘கதைப் புதையல்’ தொகுப்பாக வெளிவந்துள்ளன. குழந்தைகளின் கற்பனையுடன் அறிவியலையும், சமூகச் சிந்தனையையும் இணைத்துச் சொல்வதே எனது படைப்புகளின் தனிச்சிறப்பாகும்.
தமிழ் சிறார் இலக்கியத்தின் முக்கியத் திருப்புமுனையாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
பாரதியார் காலத்திலிருந்தே சிறார் கதைகள் எழுதப்பட்டு வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெ.தூரன், அழ.வள்ளியப்பா, ரேவதி, கொ.மா.கோதண்டம், பூவண்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் ஏராளமான கதைகளைப் படைத்தனர். பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் அறிவுரைகள் என்ற வழக்கமான வடிவத்திலிருந்து விடுபட்டு, குழந்தைகளின் உலகத்தை அவர்களின் மொழியிலேயே யதார்த்தமாகப் பேசத் தொடங்கியதே தமிழ் சிறார் இலக்கியத்தின் முதல் திருப்புமுனை.
2012-க்குப் பிறகு, சமகாலச் சிறார் இலக்கியத்தில் ஏற்பட்ட மாபெரும் பாய்ச்சல் இரண்டாவது திருப்புமுனை. நல்ல சிறார் நூல்களுக்குத் தேடிவந்து பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் குவிந்துள்ளன. வெறும் நீதிக்கதைகளாக மட்டுமே இருந்த சிறார் உலகைச் சமகாலச் சமூகச் சிக்கல்களை நோக்கித் திருப்பிய பெருமை இந்தத் தலைமுறைக்கு உண்டு.
அதற்குச் சான்றாக, மருத்துவ அறிவியல் நூலான இரா.நடராசனின் ‘ஆயிஷா’, நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை முன்வைத்து யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’, கீழடி வரலாற்றைச் சிறார் இலக்கியத்தில் கொண்டு சேர்த்த உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’ ஆகிய நூல்களைக் கூறலாம். சமூகப் பார்வை, அன்பு மற்றும் பரிவை முன்னிறுத்திய யூமா வாசுகியின் ‘தான்வியின் பிறந்த நாள்’, விஷ்ணுபுரம் சரவணனின் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விழியனின் ‘மலைப்பூ’, சிறுமிகளின் மாதவிடாய் விழிப்புணர்வை முன்வைத்து சரிதா ஜோ எழுதிய ‘சரஸ்வதிக்கு என்னாச்சு?’, சாதியத் தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பும் ‘சஞ்சீவி மாமா’, ஆப்பிரிக்க அடிமை முறையைப் பேசும் பஞ்சுமிட்டாய் பிரபுவின் ‘ஓலாடா’ போன்ற நூல்கள் சிறார் இலக்கியத்தின் முக்கிய வகைமைகளில் தனித்துவமானவை.
சிறுவர்களுக்கான கதைகள் எந்தெந்தப் பொருண்மையில் (Themes) இருக்க வேண்டும்?
சிறுவர்களுக்கான கதைகள் அன்பு, கருணை, தூய நட்பு, நேர்மை, மனிதநேயம் ஆகிய வாழ்வியல் விழுமியங்களை மையமாகக் கொண்டு அமைய வேண்டும்.
சிறுவர்களுக்குக் கற்பனைக் கதைகளும், மாய யதார்த்தக் கதைகளும் நிச்சயமாகத் தேவை. கற்பனைதான் குழந்தையின் மூளையைச் சுறுசுறுப்பாக்கி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான விதையை விதைக்கிறது. அழகிய தமிழ் நடையில் சித்திரங்கள் நிறைந்ததாகக் கதைகள் அமைய வேண்டும்.
அறிவியல், சுற்றுச்சூழல், வனயியல் சார்ந்த கதைகள் குழந்தைகளுக்கு மிக மிகத் தேவை. இன்றைக்குச் சிறுவர்கள் கைபேசித் திரைகளில் தங்களது உலகத்தை மறந்து முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த டிஜிட்டல் உலகத்திலிருந்து குழந்தைகளை வெளியே கொண்டுவந்து, இயற்கையோடும் அறிவியலோடும் அவர்களை மறுபடியும் இணைக்கும் பாலமாகச் சிறார் புத்தகங்கள் திகழ வேண்டும்.
சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்?
காட்சி ஊடகங்கள் குழந்தைகளுக்குத் தற்காலிகமான பொழுதுபோக்கையும் கவனச்சிதறலையும் தருகின்றன. வாசிப்பு அவர்களின் சிந்தனையைத் தூண்டி, சொற்களின் வழியே புதிய உலகத்தை மனக்கண்ணில் உருவாக்கி, தேடலுக்கு வழிகாட்டுகிறது.
புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகள் தங்களை அறியாமலேயே கதாபாத்திரங்களுடன் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இதன் மூலம் பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் கருணையும், சுயசிந்தனையும் இயல்பாக வளர்கின்றன.
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும், ஏமாற்றங்களையும் சமாளித்து, மனத்தளவில் வலிமையுடன் முன்னேறுவதற்கான பயிற்சியைப் புத்தகங்கள் தருகின்றன. வாழ்க்கைக்கு வாசிப்பு சிறந்த துணையாகிறது.
தற்காலச் சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்குப் பெற்றோர்களும், கல்விக் கூடங்களும் செய்ய வேண்டியவை என்ன?
குழந்தைகள் நாம் சொல்வதைக் காட்டிலும், நாம் செய்வதையே பின்பற்றுகிறார்கள். பெற்றோர்கள் முதலில் மொபைல் பயன்பாட்டைக் குறைத்து, குழந்தைகள் முன்பு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வீட்டில் ஒரு சிறிய அலமாரியிலாவது குழந்தைகளுக்கான நூலகத்தை உருவாக்கலாம். அழகிய படங்களுடன் கூடிய கதைப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து, குழந்தைகளுடன் சேர்ந்து வாசிக்க வேண்டும்.
பள்ளிகளும் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது கதை சொல்லல், புத்தகக் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளை வகுப்பறைகளில் நடத்தலாம். ஆசிரியர்கள் மாணவர்களைப் புத்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கவும் ஊக்குவிக்கலாம்.
சில பள்ளிகளில் இதுபோன்ற நல்ல மாற்றங்கள் ஏற்கனவே நிகழ்ந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
தற்காலச் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நாம் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய பணிகள் என்னென்ன?
இன்றைய சிறாரின் அறிவு வளர்ச்சிக்கு, உலகின் சிறந்த இலக்கியங்கள் அனைத்தும் தடையின்றித் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கிடைக்க வேண்டும். பள்ளிகளிலும், உள்ளூர் அமைப்புகளிலும் தொடர்ந்து கதைசொல்லல் விழாக்களையும், சிறார் எழுத்தாளர்களுடனான நேரடிச் சந்திப்புகளையும் அதிகளவில் நடத்த வேண்டும். அறிவியல் விழிப்புணர்வை வளர்க்கும் சிறந்த படைப்புகளைச் சிறார்களின் கைகளில் கொண்டு சேர்ப்பது முக்கியம்.
அரசு நூலகங்களில் நடைபெறும் கதைசொல்லும் நிகழ்ச்சிகளும், கலைச் செயல்பாட்டாளர்களின் முன்னெடுப்பில் நடைபெறும் கதை வகுப்புகளும் சிறார்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளன. ‘வாசிப்பு இயக்கம்’, ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ போன்ற முயற்சிகள் மூலம் வெளியாகும் நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிடும் ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ போன்ற சிறுவர் இதழ்களும் இன்று அரசுப் பள்ளிகளில் கிடைப்பது பாராட்டத்தக்கது.
இதேபோல், தனியார் பள்ளிகளிலும் சிறுவர் இதழ்களைச் சந்தா செலுத்திப் பெறுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். அரிதாக வெளிவரும் சிறுவர் பத்திரிகைகளையும், சிறார் பக்கங்களை வெளியிடும் தினசரிகளையும் தமிழகத்தின் அனைத்துச் சிறார்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். சிறார் இலக்கியம், வாசிப்பு, கலை, அறிவியல் ஆகியவற்றை இணைத்து ஒரு தொடர்ச்சியான இயக்கமாக முன்னெடுப்பதே சிறார் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி.






Comments are closed, but trackbacks and pingbacks are open.