அரைநூற்றாண்டு காலம் திராவிட கட்சிகளே தமிழகத்தை ஆண்டுவிட்டன. இதில் ஒரு மாற்றம் தேவை என பெரும்பான்மை மக்கள் விரும்பியதால், தமிழகத்தில் இப்படி ஒரு யாரும் கற்பணைகூட செய்து பார்த்திராத ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. திமுக அதிமுக ஆட்சிகளை இதுவரை பார்த்துவிட்டோம். ஒரு மாற்றத்துக்காக இவர்களிடம் கொடுத்துதான் பார்ப்போமே, என்று சிறுபிள்ளைத்தனமாக மக்கள் எடுத்துவிட்ட முடிவு என்றே பலரும் சொல்கிறார்கள்.
இந்த மாற்றம்கூட, எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவாதங்கள் தற்போது முன்னிலைக்கு வந்திருக்கிறது. இதுவரை பாஜக-வை யாரெல்லாம் காத்திரமாக எதிர்த்து வந்தார்களோ? ஆளும் பாஜகவின் மக்கள்விரோத கொள்கைகளுக்கு எதிராக, நேருக்கு நேர் நெஞ்சுரத்தோடு சமர் புரிந்தார்களோ அவர்களெல்லாம் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். மேற்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி, பீகார் வழியே, மே.வங்கம், கேரளா, தமிழகம் என தெற்கையும் தன்வசமாக்கியிருக்கிறது பாஜக. இது அமித்ஷா அண்ட் கோ – வின் பக்காவான பாலிடிக்ஸ் என்கிறார்கள்.
இந்த அரசியல் ”மாற்றத்தை” எப்படி புரிந்து கொள்வது? முதலில் மாற்றம் என்பதுதான் என்ன? மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், எங்கோ ஒரு இடத்தில் அந்தப் பொறுப்பை நாம் அடுத்தவர் கையில் கொடுத்துவிடுகிறோம்.
தேர்தல் அரசியல் என்பது நாம் வாக்களிப்பதன் மூலம் வருவது மட்டுமல்ல; அது நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. ஆனால், மாற்றம் என்பது மேலிருந்து வரும் என்று நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம். உண்மையில், ஒரு சமூகமாக நாம் எதை ஏற்றுக்கொள்கிறோம், எதை அலட்சியப்படுத்துகிறோம், எதைச் சரி என்று சாதாரணமாகக் கடந்து போகிறோம் என்பதன் பிரதிபலிப்புதான் அரசியல்.
நாம் தலைவர்களைப் பத்திப் பேசிட்டு, விவாதிச்சுட்டு, அப்புறம் பழையபடி நம் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். நாம் காத்திருக்கிறோம். வேடிக்கை பார்க்கிறோம்.
நட்பிலோ, திருமணத்திலோ அல்லது நகைச்சுவை என்ற பெயரிலோ சாதி தலைதூக்கும்போது நாம் மௌனமாக இருக்கிறோம். வசதிக்காக பாலின சமத்துவத்தை கண்டுகொள்ளாமல் விடுகிறோம். அழகுத் தரநிலைகளில், அன்றாடப் பேச்சில் நிறவெறியை இயல்பான ஒன்றாக மாற்றுகிறோம். தனிமனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் நசுக்கும் ஆதிக்க முறைகளை ஏற்றுக்கொள்கிறோம். அன்பை விட வெறுப்பை மிக எளிதாக வெளிப்படுத்துகிறோம். எந்த அமைப்புகளை நாம் எதிர்க்கிறோம் என்று சொல்கிறோமோ, அதே அமைப்புகளுக்குள் மிக நாகரீகமாக நாமும் ஒரு அங்கமாகி விடுகிறோம். ஆனாலும், “மாற்றம் வர வேண்டும்” என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
உண்மை என்னவென்றால், மாற்றம் என்பது மேலிருந்து வரும் என்றோ, ஒரு தலைவராலோ அல்லது ஒரு தேர்தலாலோ மட்டுமே நடக்கும் என்று நாம் கற்பனை செய்யும் வரை, நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டிய சுமையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்கிறோம் என்பதே கசப்பான உண்மை. அதனால்தான் இங்கே எதுவுமே மாறுவதில்லை.
ஏனெனில், உண்மையான மாற்றம் என்பது மிகவும் நிதானமானது, சத்தமில்லாதது. நாம் எதைப் பொறுத்துக் கொள்கிறோம்? எதைக் கேள்வி கேட்கிறோம்? எதை இனி அனுமதிக்க முடியாது என்று மறுக்கிறோம் என்பதில் இருந்தே அந்த மாற்றம் தொடங்குகிறது.
ஜனநாயகம் என்பது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பங்கேற்பது மட்டுமல்ல; அது நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டிய, அல்லது வாழத் தவறிக்கொண்டிருக்கிற ஒரு வாழ்க்கை முறை.
வாய்ப்புகள் கிடைப்பதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. மாற்றம் நமக்குள் இருந்து தொடங்கி, நம் செயல்களால் மட்டுமே நிலைபெறும்.
— முனைவர் ரேவதி ஜெ.டி.ஆர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.