‘ஹாய்’ என்ற மெசேஜின் விலை ரூ.3.50 லட்சம்! எம்பிஏ பட்டதாரியை ஏமாற்றிய 2 ‘தில்லாலங்கடி’ பெண்கள் கைது!
‘ஹாய்’ என்ற வாட்ஸ்ஆப் மெசேஜின் விலை ரூ.3.50 லட்சம் என யாராவது சொன்னால் அதை உங்களில் எவரேனும் நம்புவீர்களா?
இப்போது நீங்கள் அதை நம்பித்தான் ஆக வேண்டும்.
முன்பின் அறிமுகமில்லாத இளம் பெண் ஒருவரிடம் இருந்து வாட்ஸ் ஆப்-ல வந்த ‘ஹாய்’ என்ற மெசேஜுக்கு ஆர்வக்கோளாறில் தானும் ‘ஹாய்’ என பதிலளித்த ஒரே ஒரு பாவத்திற்காக தற்போது ரூ.3.50 லட்சத்தை இழந்து பரிதவித்து நிற்கிறார் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி இளைஞர்.
அவரை காதலிப்பதாகக் கூறி, மனதை மயக்கி நூதன முறையில் பணம் பறித்து ஏமாற்றிய பெங்களுரைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ இளம் பெண், அதற்கு உடந்தையாக இருந்த தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர் தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 28. சாதாரண விவசாயியின் மகன்.
எம்பிஏ பட்டதாரியான மணிமாறன் சிறிது காலம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். தற்போது வெளிநாடு சென்று வேலை செய்வதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் இவரது மொபைலுக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு புதிய எண்ணில் இருந்து ‘ஹாய்’ என வாட்ஸ் ஆப்-ல் ஒரு மெசேஜ் வந்துள்ளது.
அதைக் கண்ட மணிமாறன் ஆர்வக்கோளாறில் தனது பங்கிற்கு ‘ஹாய்’ என பதில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த புதிய எண்ணுக்குரிய நபர் தனது பெயர் ‘ஷர்மிளா’ எனவும், பெங்களுரில் TCS எனப்படும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே பல ஆண்டுகள் பழக்கமான நெருங்கிய நண்பர்களைப் போல இருவரும் மாறி மாறி மெசேஜ் அனுப்பினர்.
தான் ஒரிஜினலாக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவள் என்றும், எம்.சி.ஏ படித்துள்ளதாகவும், பெங்களுரில் TCS நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
அவளது வாட்ஸ் ஆப்-ல் இருந்த அழகிய இளம் பெண்ணின் புகைப்படத்தைக் கண்டு கொஞ்சம் மனசு தடுமாறிய மணிமாறன் உடனடியாக அப் பெண்ணை மொபைலில் தொடர்பு கொண்டார். அப்போது கொஞ்சிக் கொஞ்சி பேசிய அவளது போதையூட்டும் குரலில் ‘க்ளீன் போல்டு’ ஆனார் மணிமாறன்.
“தனக்கு அப்பா இல்லை எனவும், தனது சொந்த ஊரில் அம்மாவும் அக்காவும் இருப்பதாகக் கூறினாள். தற்போது வீட்டில் இருந்தவாறு பணிபுரிந்து வருவதாக கூறினாள். தான் பணிபுரியும் வுஊளு நிறுவனத்தில் சம்பளம் போட கொஞ்சம் லேட் ஆகி வருவதாகவும், அவசரமாக செலவுக்கு ரூ.1,500 தேவைப்படுவதாக கூறினாள். தனக்கு சம்பளம் கிடைத்தவுடன் அத் தொகையை உடனடியாக திருப்பி தருவதாகக் கூறினாள்,” என்கிறார் மணிமாறன்.
அவளது அழகிய போதையூட்டும் குரலில் மயங்கிய மணிமாறன் உடனடியாக அத் தொகையை Google Pay மூலம் அனுப்பினார். அதன் பின்னர் இருவரும் தினமும் மொபைலில் தொடர்பு கொண்டு வழக்கம்போல கடலை போட்டு வந்தனர்.
இந்நிலையில், அப் பெண் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென ‘உங்களை மனதார விரும்புகிறேன்’ எனக்கூறி மணிமாறனிடம் தனது காதலை வெளிப்படுத்தினாள். அவ்வளவுதான்…அதன்பின்னர், மந்திரித்துவிட்ட கோழி போல அப்பெண்ணின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டார் மணிமாறன்.
அதன் பின்னர் ஒருநாள், தற்போது பெங்களுரில் உள்ள தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு ஒரு பெரிய புராஜெக்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை செய்து முடித்தவுடன் தனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் எனக் கூறி இருக்கிறாள்.
அதோடுஇ அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவ்வப்போது ரூ.10,000, ரூ.20,000 என அவள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார் மணிமாறன்.
இந்நிலையில், திடீரென ஒருநாள் அவள் தன்னுடைய புராஜெக்ட் ஒர்க் நல்லபடியாக முடிவடைந்து விட்டதாகவும், அதற்கு பரிசாக தனக்கு ரூ.4,20,000 தனது நிறுவனம் கொடுத்துள்ளதாகக் கூறி அதற்கு ஆதாரமாக அத் தொகைக்கான செக் ஒன்றை வாட்ஸ்ஆப்-ல அனுப்பினாள் ஷர்மிளா.
“அப்போதுதான் எனக்கு முதன் முதலாக அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக கூகுளில் தேடிப்பாரத்தபோது அதே எண் மற்றும் தொகை கொண்ட செக் வேறொருவர் பெயரில் இருப்பது தெரிய வந்தது. அவள் எனக்கு அனுப்பியிருந்த செக் போலியானது என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து அவளுக்கு மெசேஜ் செய்து விளக்கம் கேட்டேன்.
இவை அனைத்து ஜனவரி 10-ம் தேதிக்குள் நடைபெற்றன. அதன் பின்னர் அவளை மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்கிறார் மணிமாறன்.
தான் ஏமாற்றப்பட்டுள்ளதை ரொம்ப தாமதமாக உணர்ந்த மணிமாறன் இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 27 வயதுடைய ஷர்மிளா இதுபோல ஏமாற்றி பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட ஓர் தில்லாலங்கடி பேர்வழி என்பதும், அதற்கு தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் வசிக்கும் அவரது தூரத்து உறவினரான ஐஸ்வர்யா என்ற 32 வயது பெண் உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் போலீஸாரின் புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவ்விரு ‘தில்லாலங்கடி’ பெண்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.
“தில்லாலங்கடியான ஷர்மிளா தனது தூரத்து உறவினரான திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் சம்மதத்துடன் அவரது ஆதார் கார்டைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் பெற்று அவற்றைப் பயன்படுத்தி மணிமாறனை ஏமாற்றியுள்ளார். அதோடு, ஐஸ்வர்யாவின் வங்கி கணக்கு எண்களை அனுப்பியே மணிமாறனிடம் பணம் பெற்றுள்ளார் ஷர்மிளா. அதற்கு கைமாறாக, ஷர்மிளாவிடம் இருந்து ரூ.2,00,000 பெற்றுள்ளார் ஐஸ்வர்யா,” என்கிறார் காவல்துறை அதிகாரி.
ஐஸ்வர்யா 9வது வரை படித்துள்ளார். சிறிது காலம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
தான் எம்சிஏ படித்ததாக கூறுகிறாள் ஷர்மிளா. ஆனால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதுவும் அவளிடம் இல்லை,” என்கிறார் அந்த அதிகாரி.