இளைஞரை நூதன முறையில் ரூ.1.70 லட்சம் ஏமாற்றிய ‘தில்லாலங்கடி’ பெண்!

0

இளைஞரை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டு இனிக்க இனிக்க பேசி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.70 லட்சம் பெற்று நூதன முறையில் ஏமாற்றிய திருப்பூரைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ பெண்ணை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர் தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் .

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணிமாறன். வயது 36. கடந்த ஜனவரி 6-ம் தேதி இவரது மொபைலுக்கு திடீரென ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப்-ல் அழைப்பு வந்துள்ளது. யாராக இருக்கும் என மனதில் எண்ணியவாறு அந்த அழைப்பை ஏற்று ‘ஹலோ’ எனக் கூறியுள்ளார் மணிமாறன்.

மறுமுனையில் வசீகர குரலில் பேசிய பெண் தன்னை ‘கனி ப்ரியா’ எனக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலை தொடர்பான சேவை நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

பின்னர், தொடர்ந்து பேசி, மணிமாறனுக்கு வெளிநாட்டில் ‘புராஜெக்ட் ஒர்க்’ செய்ய ரூ.70,000 மற்றும் சதீஷ்குமார் என்ற அவரது சகலைக்கு வெளி நாட்டில் வேலை வாங்கி கொடுப்பதற்கு ரூ.1,00,000 செலவாகும் எனக் கூறி அத் தொகையை தான் கூறும் வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். அப் பெண்ணின் வசீகர குரலில் மயங்கிய மணிமாறன், அந்த ‘டீல்’ பிடித்துப்போகவே, பணம் அனுப்ப சம்மதித்தார்.

பின்னர், அப் பெண் அறிவுறுத்தியவாறு இரண்டு வெவ்வேறு வங்கிகளில் வெவ்வேறு பெயர்களில் உள்ள கணக்குளில் முறையே ரூ.70,000 மற்றும் ரூ.1,00,000 அனுப்பியுள்ளார் மணிமாறன்.

அதன் பின்னர் நாட்கள் உருண்டோடின. ஆனால் அப்பெண் கூறியபடி வெளிநாட்டு வேலையும் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் செல்போன் அழைப்புகளையும் அப்பெண் தவிர்த்தார்.

தான் ஏமாற்றப்பட்டத்தை கொஞ்சம் லேட்டாக உணர்ந்த மணிமாறன் இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் மனு அளித்தார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான சைபர் க்ரைம் விசாரணை பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில், ‘கனி ப்ரியா’ என்ற பெயரில் மணிமாறனை தொடர்பு கொண்டு பேசி ரூ.1.70 லட்சம் ஏமாற்றிய ‘தில்லாலங்கடி’யின் ஒரிஜினல் பெயர் தீபிகா என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பூர்பாளைத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் என்பதும் தெரிய வந்தது.

சென்னையில் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து, அங்கிருந்து தலைமறைவாகி, கோயம்புத்தூர் காந்திபுரம் அருகில் உள்ள ராயல் பார்க் என்ற லாட்ஜில் பதுங்கியிருந்த தீபிகாவை சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து தஞ்சாவூர் அழைத்து வந்தனர். அதன் பின்னர் முறையான விசாரணைக்கு பின் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபற்றி போலீஸார் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டம் அனுப்பூர்பாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் தீபிகா. வயது 30. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, Tally 9.0 என்ற கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்துள்ளார்.

தீபிகாவுக்கு சசிகுமார் என்பவருடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இரு குழந்தைகளையும் கணவரின் பெற்றோர் பராமரித்து வருகின்றனர். தீபிகாவிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது கணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்னை குன்றத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தீபிகா, தான் வாங்கிய சம்பளம் சென்னையில் செலவு செய்யவும், குடும்பத்திற்கு கொடுக்கவும் பத்தாததால், ஆன்லைனில் மோசடி செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

அதன் விளைவாக, தான் பணிபுரியும் நிறுவனத்தில் வழங்கப்பட்ட வெவ்வேறு பெயர்களில் உள்ள சிம் கார்டுகளைப் பயன்படுத்தி, மணிமாறனை மொபைலில் கனி ப்ரியா என்ற பெயரில் தொடர்பு கொண்டுள்ளார் தீபிகா. அவர் விரித்த வலையில் ரொம்ப எளிதாக விழுந்தார் மணிமாறன்.

இதைத் தொடர்ந்து, தனக்கு தொழில் ரீதியாக ஏற்கெனவே அறிமுகமான வேறு இரண்டு நபர்களின் வங்கிக் கணக்கு எண்களை அனுப்பி மணிமாறனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார் தீபிகா என்கின்றனர் சைபர் க்ரைம் போலீஸார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.