டாஸ்மாக் ‘பார்’ல் விற்கப்பட்ட
மதுவை குடித்த
2 மீன் வியாபாரிகள் சாவு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் ஏற்கெனவே 22 பேர் பலியாகி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடையின் அருகே இயங்கும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடத்தில் (பாரில்) மதுபானக் கடை திறப்பதற்கு முன் சட்டவிரோதமாக சில்லறையில் விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த இளைஞர் உள்பட இரண்டு 2 மீன் வியாபாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் கீழ வாசல் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரது மகன் குப்புசாமி (68), அதே பகுதியைச் சேர்ந்த தாமஸ் வள்ளுவராஜ் என்பவரது மகன் விவேக் (36) ஆகிய இருவரும் தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை (எண்: 8123) அருகேயுள்ள அரசு உரிமம் பெற்ற மது அருந்தும் கூடத்தில் காலை 11.25 மணியளவில் ஆளுக்கு ஒரு ‘கட்டிங்’ மது வாங்கி குடித்துள்ளனர்.
அதன் பின்னர் அவ்விருவரும் மீன் மார்க்கெட் அருகே அமர்ந்துள்ளனர். அப்போது அவ்விருவருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவ்விருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், 68 வயது குப்புசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பரான விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் பிற்பகல் 2.45 மணிக்கு இறந்தார்.
டாஸ்மாக் கடை வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும். இந்நிலையில், அதையொட்டி அமைந்துள்ள அரசு அனுமதிபெற்ற மது அருந்தும் கூடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்னரே சட்டவிரோதமாக சில்லறையில் சரக்கு விற்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம் மதுக் கூடத்தை தஞ்சாவூர் வ.உ.சி நகரைச் சேர்ந்த பழனிவேல் (56) என்பவர் நடத்தி வருகிறார்.
இம் மதுக்கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட மதுவில் கலப்படம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இவ்விருவரும் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்கினற்னர் காவல்துறையினர்.
இந்த பாரில் இன்று காலை மது வாங்கி குடித்தவர்களில் இவ்விருவர் மட்டுமே இறந்துள்ளனர். மதுவில் கலப்படம் இருந்திருந்தால் இந்நேரம் நிறைய பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பர். இங்கு மது வாங்கி குடித்த வேறு யாருக்கும் இதுவரை எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. வேறு எவரும் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்கின்றனர் காவல்துறையினர்.
இச்சம்பவம் குறித்து தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எத்தியார் குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் உயரிழந்தனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்திய 8 பேர் இறந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகிய பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் சுமார் 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இவ்விஷச் சாராய சாவு அகில இந்திய அளவில் வைரலாகி தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் நபர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அதோடு, விஷச் சாராயம் குடித்து இறந்த நபர்களுக்கு தமிழக அரசு தலா ரூ10 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்தது.
விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் 22 பேர் இறந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் செந்தில் பாhலாஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது தஞ்சாவூரில் அரசு அனுமதிபெற்ற மதுபானக் கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட மதுபானம் வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.