தீயில் வெந்தும் தணியாத மணிப்பூர்!
தீயில் வெந்தும் தணியாத மணிப்பூர்
ஒன்றிய அரசின் ஆவணங்களின்படி மணிப்பூர் மாநிலத்தில் 39 வெவ்வேறு இனக்குழு பிரிவுகள் வாழ்கின்றன. என்றாலும், 37 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மணிப்பூரின் மக்கள் அடிப்படையில் மூன்று முக்கிய இனக்குழுக்களாகப் பிரிகிறார்கள், அவை.. மெய்தி, குக்கி, நாகர்கள் (Meitei, Kuki and Naga) திணை என்று பார்க்கையில் கிழக்கில் மியான்மரும் மேற்கில் அஸ்ஸாமும் வடக்கில் நாகாலாந்தும் தெற்கில் மிசோரமும் சூழ்ந்த அழகான பிரதேசம் மணிப்பூர். பெயருக்கேற்றார்போல் இந்தியாவின் “அழகிய அணிகலன்”தான் இந்த மாநிலம்.
பெரும்பாலும் காடுகள் மலைகள் என்று இயற்கை பூத்துக்குலுங்கும் இந்த நிலப்பகுதியில் கொஞ்சம் சமநிலப்பகுதியும் உண்டு. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த சமநிலப்பகுதியில் தொழிலும் வியாபாரமும் வளரப் வளர பலரும் இங்குப் புலம்பெயரத் துவங்கினர். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளும் மெல்ல அதிகரிக்க, குறைவான இடம்கொண்ட சமநிலப்பகுதியில் பெரும்பாலான மக்களும், காடு வனாந்தரங்களில் குறைவான எண்ணிக்கையிலுள்ள பூர்வக்குடிகளும் குடியேறினர்.
இந்த மலைவாழ் பூர்வக்குடிகளின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களாக அறிவித்து அதற்குரிய இட ஒதுக்கீடு உட்பட்ட அரசு சலுகைகள் அளித்துள்ளது அரசு. குக்கி மற்றும் நாகா இன மக்களுக்குக் கிடைக்கும் இந்த சலுகைகள் தமக்கும் வேண்டும் என்று மெய்தி இனமக்கள் பல ஆண்டுகளாகவே அரசுக்குக் கோரிக்கை வைப்பதும் போராட்டங்கள் நடத்துவதுமாக இருந்து வருகின்றனர்.
அவ்வப்போது சில வன்முறை நிகழ்வுகள் அரங்கேறுவதும், உடனே அரசு இனக்குழு முக்கியஸ்தர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் இங்கு நீண்டகாலமாக வாடிக்கை.
இந்நிலையில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறை காட்டுத்தீயாய்ப் பற்றி பரவி, மே மாதம் 3-ஆம் தியதி முதல் இன்றுவரை தொடர்வது ஏன்..? இரண்டு முக்கியக் காரணங்கள்….
1. மணிப்பூர் உயர்நீதிமன்றம் “மெய்தி இன மக்களுக்கும் ST அந்தஸ்து வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று வழங்கிய உத்தரவு.
2. இனக்குழுக்களுக்கு இடையேயான உரசல்களுக்கு மதச்சாயம் பூசப்பட்டு அரசாலேயே மத வெறுப்பு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருப்பது.
இதில் முதல் காரணம் ஒட்டுமொத்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினரையும் வெகுண்டெழச்செய்து விட்டது. ஏற்கனவே பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் இவர்களுக்கிடையே இருப்பதால் போராட்டம் வெகுவிரைவில் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டுத் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம் துவங்கியது.
ஆனால் இதைவிடவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது இரண்டாவதான மதச்சாயம். இனங்களைக் கடந்து மதரீதியாகப் பார்க்கையில் மணிப்பூரிகளில் 41% இந்துக்கள், 41% கிருஸ்துவர்கள், 8% முஸ்லிம்கள். இனவாதம் மதவாதமாகப் பரிணமித்ததும் வன்முறையின் போக்கு வெகுவாக மாறிப்போனது.
ஒருபுறம் சர்ச்களும் கோவில்களும் தீக்கிரையாக்கப்பட, ஒரே இனக்குழுவைச் சார்ந்த வெவ்வேறு மதத்தைப் பின்பற்றும் அண்டைவீட்டார்களும் ஒருவரையொருவர் தாக்கத்துவங்கிவிட்டனர். பெரும்பான்மை கிருஸ்துவர்களான குக்கி இன மக்களில் பலர் உயிரைக் காப்பற்ற சமநிலப் பகுதியிலிருந்து காடுகளை நோக்கி ஓடுகின்றனர். காடுகளின் எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்திருந்த மெய்தி இன மக்கள் நாற்புறமும் சூழ்ந்து தாக்கப்படப் பல கிராமங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன.
317 அகதிகள் முகாமில் 20,000 மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை இன்று. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் பற்றவைத்திருக்கும் இந்த நெருப்பு, இன்று இவர்களின் கைகளையும் மீறி எரிந்துகொண்டிருக்கிறது. மதம் எனும் போதை தலைக்கேறி விட்டதால், நேற்றுவரை சகோதரர்களாய் வாழ்ந்திருந்த ஒரே இன மக்களே இன்று ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கிறார்கள். இந்த ஆடுகளின் சண்டையால் வழியும் குருதியைச் சுவைத்தபடி இதை எப்படி வாக்குகளாக மாற்றுவது என்று குரூரமாக யோசிக்கிறது மதவியாபார அரசியல் ஓநாய்கள் கூட்டம்.
நிச்சயம் ஒருநாள் மணிப்பூரில் அமைதி திரும்பும். ஆனால், அது மயான அமைதியாக இருந்துவிடுமோ என்பதே என் அச்சம். மத வாதம், இன வாதம், சாதிய வாதம் மற்றும் பிரிவினை உருவாக்கும் ஒவ்வொரு கருத்தியலுமே வாத நோய்தான். நம்மை மட்டுமல்ல, சமூகத்தையே முடக்கிப்போடும் மோசமான நோய் இது. விழிப்புடன் வாழ்ந்திருப்போம்.
(முகநூலில் – Fazil Freeman Ali)