கொலை நடுங்க வைத்த ”உருவம்” !
10 வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது முன்பு இரவு 11 மணியானாலும் அந்த நேரத்தில் டிவியில் போடும் படத்தை பார்த்துவிட்டு தூங்குவது வழக்கம். அப்படி ஒரு நாள் டிவி சேனலை மாற்றிக்கொண்டே வரும்போது ஜெயா டிவியில் இரவு 11 மணிக்கு இந்த படம் ஒளிபரப்பானது. ஆத்தாடி உருவம் போடுறாய்ங்க என மனதில் நினைத்துக்கொண்டு, வீட்ல எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க நாம மட்டும் இந்த படத்தை பார்த்திருவோம் என தைரியப்படுத்திகொண்டு முதல் காட்சியை தான் பார்த்தேன், லேசாக நாய்கள்குரைப்பதும், ஒரு மந்திரவாதி ஒரு வீட்டின் முன்னே நோட்டம் இடும் அந்த முதல் காட்சியை பார்த்ததுமே பயந்துட்டு அதோட ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்டேன்.
ஆனால் இந்த படத்தை அதற்கு முன்பும் பின்பும் பலமுறை பார்த்திருக்கேன். அதே கண்கள் படத்தின் வில்லன் போல இரண்டு பொண்டாட்டி கார நாயகனின் அப்பா, அவருக்கு இன்னொரு வாரிசு, நம்ம குடும்பத்துக்கு எதுவும் செய்யல, நம்மள சரியா வைக்கல, அரண்மனை வீடும் நமக்கு கிடைக்கல என இன்னொரு மனைவியின் மகனை மட்டும் நல்லா வச்சிருக்காரு என தன் அப்பாவின் இன்னொரு மனைவி மகன் மீதும் அவர்கள் குடும்பம் சார்ந்தவர்கள் மீதும் செய்வினையை ஏவி அவர்கள் குடும்பத்தை அழிக்க முயல்வதுதான் கதை. அதன்படியே பங்காரு முனியாக வரும் சத்யஜித் அந்த குடும்பத்துக்கு செய்வினை ஏவல் மூலம் செலுத்தி அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்வது தான் கதை. கடைசியில் ஏவலால் அதிகம் பாதிக்கப்பட்ட மோகன் , அவர் தங்கை மட்டும் மிஞ்சுவது அவர் குடும்பத்தினர் எல்லோரும் அவராலேயே கொ.. படுவதும் வருத்தமான நிகழ்வாக இருந்தது. இளையராஜா இது போல திகில் படத்துக்கு எல்லாம் சொல்ல வேண்டுமா? பின்னனி இசையில் பிரித்து மேய்ந்திருந்தார். காட்சிக்கு காட்சி பயங்கர இசையில் மிரட்டி இருந்தார்.
இந்த படம் உண்மையில் மிக வித்யாசமான த்ரில்லர் படம்தான். மோகனை லட்டு போல திரையில் பல படங்களில் அழகான காட்சிகளில் பார்த்துவிட்டு அருவெருப்பான காட்சிகளில் கோரமான முகத்தில் அவரை பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை படம் ஓடாததற்கு மேலும் அந்த நேரத்து சூழ்நிலைகளும் காரணமாய் இருக்கலாம். மற்றபடி அமானுஷ்ய த்ரில்லர்க்கு உண்டான அனைத்தும் இப்படத்தில் இருந்தது. தற்காலத்தில் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் இது போல தீய சக்திகளை ஏவி விட்டு என்னென்ன அநியாயம் செய்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்தி இருந்தார்கள். மோகன் வீட்டின் மீது டாகினி, சாகினி, மோகினியை ஏவி விடும் கதாபாத்திரத்தில் பங்காரு முனியாக சத்யஜித் நடித்திருந்தார். இவரை பார்த்தாலே பயம் வரும் அளவுக்கு இருந்தது. இறுதியில் ஏவிவிடப்பட்ட மோகனே இவரையும் அழித்துவிடுவார்.
ஜோல்னா சாமியாக வரும் ஆர்.பி விஸ்வம் மோகன் வீட்டுக்கு வந்து பூஜை போட்டு தீய சக்திகளை விரட்டுவது எல்லாம் மிரட்டலாக இருந்தது. இறுதியில் ஜோல்னா சாமியால் காப்பாற்றப்பட்டு ஒரு காப்பகத்திற்கு அனுப்பபடுகிறார் மோகன். அங்கு கடவுளை நம்பாமல் போனதற்கு வருத்தப்படுகிறார். 1991 வருட ஆரம்பத்திலேயே வந்த படம் இது. மோகனுக்கு கடைசியாக பெயர் சொன்ன பெரியபடம் இது என சொல்லலாம். அழகான மோகனின் முகம் அகோரமாய் இப்படத்தில் காட்சியளித்தது வருத்தமாய் இருந்தது. நடிகை பல்லவி இப்படத்தை தயாரித்திருந்தார், அதாவது பல்லவியின் சகோதரர்கள் உடன் இணைந்து பல்லவி தயாரித்த படம் இது. இப்படத்தை அறுவடை நாள், பிக்பாக்கெட் என பல படங்களை தயாரித்த ஜி.எம் குமார் இயக்கி இருந்தார்.
— மு. குபேரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.