அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026 : ட்ரம்புக்குக் கிடைத்த வரலாற்றுத் தோல்வி – உலக அரசியலில் உருவாகும் புதிய அதிகாரச் சமநிலை. ஈரான் போர், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், ஊழல் குற்றச்சாட்டுகள், மக்கள் அதிருப்தி – குடியரசுக் கட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் என்ன? இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு இனி மாறுமா? இந்திய வம்சாவளியினரின் அரசியல் எழுச்சி எத்தகைய மாற்றத்தைக் குறிக்கிறது? உள்ளிட்ட அம்சங்களை ஆராய்கிறது, இந்த சிறப்புக் கட்டுரை.
2026 நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ட்ரம்பின் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் எச்சரிக்கையாகவும், அவரது உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான தீர்ப்பாகவும் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
ஏன் தோற்றுப்போனது குடியரசுக் கட்சி ?
பணவீக்கம், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, மளிகைப் பொருட்களின் விலை, எரிபொருள் விலை போன்ற பொருளாதார விவகாரங்களில் மக்களின் அதிருப்தி. ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியது. வேட்பாளர் தேர்வில் தகுதி, அனுபவம் ஆகியவற்றைவிடத் தனிப்பட்ட விசுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததாக எழுந்த விமர்சனங்கள். ட்ரம்பின் குடும்பத் தொழில், கிரிப்டோகரன்சி முதலீடுகள், பெருநிறுவனங்களுடனான உறவுகள் போன்றவை அரசியல் விவாதங்களாக மாறியது. குறிப்பாக, இளைஞர்கள் கறுப்பின மக்கள், ஹிஸ்பானிக் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தது, உள்ளிட்டவற்றை ட்ரம்பின் தோல்விக்கான காரணங்களாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
வரலாற்று சாதனைகளோடு வென்ற ஜனநாயக கட்சி :
அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றை டாக்டர் அப்துல் எல் சையத் – மிச்சிகன் படைத்துள்ளார்.
வெளிப்படையாகத் தன்பாலின ஈர்ப்பை அறிவித்த முதல் ஆண் செனட்டர் என்ற அடையாளத்தோடு கிறிஸ் பாப்பாஸ் – நியூ ஹாம்ப்ஷயர் அரசியலில் பிரவேசிக்கிறார். குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட டெக்சாஸில் பெருவெடிப்பை ஏற்படுத்தியிருக்கிறார், ஜேம்ஸ் தலாரிகோ.
இந்திய வம்சாவளியினர் அமெரிக்க அரசியலில் செல்வாக்கு பெற்றுவரும் சூழலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு விவேக் ராமசாமி தோல்வியை தழுவியிருப்பதும் கவனத்தை பெற்றிருக்கிறது.

ட்ரம்பின் வீட்டோ அதிகாரம் என்ன ஆகும்?
இது அமெரிக்க அரசியலில் மிகவும் முக்கியமான கேள்வி. அமெரிக்க அதிபருக்கு நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ (Presidential Veto) அதிகாரம் தொடர்ந்து இருக்கும். தேர்தலில் தோல்வியடைந்ததால் ட்ரம்பின் வீட்டோ அதிகாரம் பறிக்கப்படாது. ஆனால், அதிகாரச் சமநிலை மாறுகிறது. இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரித்தால் அதிபரின் வீட்டோவை முறியடிக்க முடியும். எனவே, ட்ரம்ப் அதிபராகத் தொடர்ந்தாலும், அவரது அரசியல் அதிகாரம் கட்டுப்படுத்தப்படும்.
கூட்டாளி இஸ்ரேலின் நிலை என்ன?
இந்தத் தேர்தலின் சர்வதேச அரசியல் தாக்கங்களில் மிகவும் முக்கியமானது இஸ்ரேல் தொடர்பான அமெரிக்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கை. அது பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட ராணுவ, உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டணி. 2019–2028 காலகட்டத்திற்கான ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுக்கு அமெரிக்கா 38 பில்லியன் டாலர் ராணுவ உதவியை வழங்க உறுதியளித்துள்ளது.
அமெரிக்கா உடனடியாக இஸ்ரேலுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திவிடும் என்று கருத இடமில்லை. அதேசமயம், உதவியின் அளவு, அதன் நிபந்தனைகள் மற்றும் அரசியல் ஆதரவின் தன்மைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இந்தியாவுக்கு என்ன ஆகும்?
இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது. ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக வரிக் கொள்கைகளை ஜனநாயகக் கட்சி விமர்சிக்கவும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தவும் வாய்ப்புள்ளது. 2026 தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் அரசியல் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது.
உலக அரசியல் என்ன ஆகும்?
இந்தத் தேர்தல் வெறும் அமெரிக்காவின் உள்நாட்டுத் தேர்தல் அல்ல. உலக அரசியலின் அதிகாரச் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு. ஈரானுக்கு எதிரான போர்; ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள்; பாலஸ்தீன விவகாரம்; இஸ்ரேல் உடனான உறவு; இந்தியா, சீனாவுடனான வர்த்தக கொள்கைகள் உள்ளிட்டவைகளில் நிச்சயம் மாற்றங்களை கொண்டுவரக்கூடிய நிகழ்வு.
ட்ரம்பின் தோல்வி அமெரிக்க முதலாளித்துவ அரசியல் அமைப்பின் முடிவு அல்ல. ஜனநாயகக் கட்சியின் வெற்றியும் தானாகவே தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றியாகிவிடாது. ஆனால், மக்கள் அதிருப்தி ஆளும் கட்சியின் அதிகாரத்தை மாற்றக்கூடியது என்பதைத்தான் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது, 2026 அமெரிக்க தேர்தல் முடிவுகள்.
– தேவராஜன் தன்சேகர்










Comments are closed, but trackbacks and pingbacks are open.