நண்பர்களிடம் நான் அடிக்கடி செல்வது உண்டு: ‘சென்னையில் வசிக்கிறேன். தஞ்சையில் வாழ்கிறேன்.’ நாமெல்லாம் வாழ்வதாகச் சொல்லிக்கொள்ளும் இடங்களில் நாம் வாழ்கிறோமா என்பதுதான் கேள்வி. பிழைப்புக்காகச் சென்னை வந்தோம். பிழைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
வசிப்பதற்கும் வாழ்வதற்கும் இடையே அப்படி என்ன வேறுபாட்டைக் கண்டு விட்டீர்கள் என்று நண்பர் கேட்டார். நான் சொன்னேன்: எங்கே உங்களுக்கு இருக்கப் பிடிக்கிறதோ அங்கே நீங்கள் வாழ்கிறீர்கள். எங்கே நீங்கள் இருக்குமாறு விதிக்கப்பட்டிருக்கிறீர்களோ அங்கே வசிக்கிறீர்கள்.
வாழ்தல் என்பதுதான் என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார்.
‘உயிர்க்கெல்லாம் நாம் அன்பு செயவேண்டும்1
பெருநகரங்களில் நீங்கள் அன்பு செய்யமுடியாது. கம்ப்யூட்டர் செய்யலாம். கைபேசி செய்யலாம். கார் செய்யலாம். அன்பு மட்டும் செய்ய முடியாது.
அன்பு செய்யத் தேவையான கச்சாப்பொருள் ‘மனிதம்.’ அது பெருநகரங்களில் கிடைக்காது.
அன்பு செய்ய வேண்டுமானால் நீங்கள் தென்காசிக்கு வரவேண்டும். திருநெல்வேலிக்குச் செல்லவேண்டும். தஞ்சாவூர் போகவேண்டும். திருச்சி காவிரிக் கரையோர மனிதர்களைப் பார்க்கவேண்டும்.
இங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அன்பு செய்யவே பிறந்தவர்கள். ஆகவேதான் இந்த மண்ணில் ஞானிகளும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் கவிகளும் காலம்தோறும் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.
வாழ்தலைப் போலவே வாசித்தலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. வாசித்தல் என்றால் நாம் புத்தகங்களை வாசித்தல் என்ற பொருளில்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வீணையையும்தான் வாசிக்கிறோம். புத்தகத்தை வாசிப்பதற்கும் வீணையை வாசிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா? இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் நான் இல்லை என்றுதான் சொல்லுவேன். வீணையை விரலாலும், புத்தகத்தை மனசாலும் மீட்டுகிறோம். இரண்டிலிருந்தும் ஓசை வருகிறது. மனதிலிருந்து வருகிற ஓசையைக் கேட்கமுடியாது. உணரமுடியும்.
புத்தகங்களை மட்டுமல்ல, மனிதர்களையும் மரங்களையும்கூட வாசிக்க முடியும். நாம்தான் வாசிக்க முயற்சிப்பதில்லை. மனிதர்கள் எல்லோரும் நடமாடும் புத்தகங்கள்தான். ஆகவே அவர்களை வாசியுங்கள்.
ஒரு நண்பர் தன் வீட்டில் நாலாயிரம் புத்தகங்கள் இருப்பதாகப் பெருமை அடித்துக்கொண்டார். எங்கள் வீட்டிலே அதிகபட்சமாக ஆறு புத்தகங்கள் மட்டுமே இருப்பதாக நான் சொன்னேன்.
ஒன்று என் தந்தை. மற்றொன்று என் தாய். பிறிதொன்று என் மனைவி. அப்புறம் பாட்டி. இரண்டு குழந்தைகள்.

அப்பா என்ற புத்தகம் அதிகம் படிக்கப்படுவதில்லை. என் வீட்டில் மட்டுமல்ல; எல்லார் வீட்டிலும்தான். அந்தப் புத்தகத்தின் பொருள் புரிய எனக்கு அரை நூற்றாண்டுக் காலம் தேவைப்பட்டது. பிறகு நான் அதைத் தேடும்போது காணாமலே போய்விட்டது. அம்மா என்ற புத்தகத்தின் பாசத்தின் ஈரம் படிந்த பக்கங்களை மறக்கமுடியுமா?
பாட்டியைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பழைய பழுப்பேறிய புத்தகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கும். ஆத்திசூடியும், மருத்துவக் குறிப்புகளும், விக்கிரமாதித்தனும், வேதாளமும் தன்னகத்தே கொண்ட புத்தகம் அது. குழந்தைகள் என்கிற புத்தகங்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும். மயிலிறகுகள், பட்டாம்பூச்சிகள், அம்மா மடியின் கதகதப்பு இவற்றால் அச்சடிக்கப்பட்டவை அவை. அதனால்தான் கவிஞர் அப்துல் ரகுமான் தன் கவிதையில் இப்படிச் சொல்கிறார்.
‘புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்’
மரங்களை நீங்கள் கீழிருந்து மேலாக வாசிக்கவேண்டும். மரங்களை வாசிக்கிறவனுக்குப் புத்தகப் பஞ்சமே வராது. மரங்களில் அமர்ந்து பறவைகள் கத்துவதாகக் கூறுவது பிழை. அவை மரங்களை வாய்விட்டு வாசிக்கின்றன.
இரவு வானம் நட்சத்திர வரிகள் நிரம்பிய புத்தகமாய்த் தோன்றுகிறது.
பிரபஞ்சம் என்ற புத்தகம் முடிவற்ற பக்கங்களுடன் புரள்கிறது.
மின்விசிறி சுழல்கிறது. கீழே வைக்கப்பட்டிருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் படபடக்கின்றன.
இது புத்தகம் தன்னைத்தானே வாசித்துக்கொள்வதுபோல் தோன்றுகிறது!
— தஞ்சாவூர்க் கவிராயர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.