அங்குசம் பார்வையில் வல்லவன் வகுத்ததடா !
அங்குசம் பார்வையில் வல்லவன் வகுத்ததடா !
தயாரிப்பு: ‘ஃபோகஸ் ஸ்டுடியோஸ்’ விநாயக் துரை. வெளியீடு: ’க்ரியேட்டிவ் எண்டெர்டெய்னர்ஸ்’ தனஞ்செயன். டைரக்ஷன்: விநாயக் துரை. நடிகர்—நடிகைகள்: தேஜ் சரண்ராஜ், அனன்யா மணி, ஸ்வாதி மீனாட்சி, ராஜேஷ் பாலசந்திரன், ரெஜின் ரோஸ், விக்ரம் ஆதித்யா. ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து, இசை: சகிஷ்னா சேவியர், எடிட்டிங்: அஜய், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: சக்திவேல், பி.ஆர்.ஓ. சதிஷ் & சிவா [ எய்ம் ]
மகாபாரதப் போர் நடந்ததாகவும் அந்த உக்கிரமான போர் நடந்து கொண்டிருந்த போது, ஒரு ஓரமாக உட்கார்ந்து பாண்டவர்களுக்கு கடவுள் கண்ணன் உபதேசம் சொன்னதாகவும் இன்றளவும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்க்களத்தில் கண்ணன் சொன்ன உபதேசம் தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை என்றும் நம்பவைத்தது ஒரு கூட்டம். இந்திய நீதிமன்றங்களிலும் இந்த பகவத்கீதை மீது சத்தியம் வாங்குவார்கள்.
அப்படிப்பட்ட கீதையில் இருக்கும் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு” இந்த மாதிரியான தத்துப்பித்து உளறல்கள் நான்கைந்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, இப்போதைய டிஜிட்டல் ட்ரெண்டுக்குத் தகுந்தபடி இந்த ‘வல்லவன் வகுத்ததடா’ கதையை எழுதி, அதற்கு திரைக்கதை எழுதி தயாரித்து டைரக்டும் பண்ணியுள்ளார் விநாயக் துரை.
தேஜ் சரண்ராஜும் ரெஜின் ரோஸும் முழு நேரத் திருடர்கள். அகல்யாவாக வரும் அனன்யா மணி, தன்னைக் காதலிப்பவர்களையெல்லாம் சீட்டிங் போட்டு ஜாலி லைஃப் வாழும் கேரக்டர். ஸ்டேஷனுக்கு வருபவர்களிடம் பணத்தைக் கறந்து சக்கையாகப் பிழியும் மோசமான இன்ஸ்பெக்டர் நீதிமணி கேரக்டரில் ராஜேஷ் பாலசந்திரன். செழிப்பாக வாழ்ந்து, இப்போது சோத்துக்கே சிங்கியடிக்கும் கால் டாக்சி டிரைவர் கேரக்டரில் ஸ்வாதி மீனாட்சி. வாட்ச்மேனாக வேலை பார்க்கும் அப்பா, கர்ப்பவதியான அக்கா, இவர்களுடன் வாழ்வதற்கே ரொம்ப அல்லாடுகிறார் ஸ்வாதி.
இந்த நான்கு கேரக்டர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒருவரையொருவர் சந்திக்கும் நிலைமை வருகிறது. நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்ற நீதிப்படியும் நியாயப்படியும் கெட்ட குணம் உள்ளவர்கள் வீழ்கிறார்கள். சோத்துக்கே சிங்கியடிக்கும் ஸ்வாதி மீனாட்சிக்கு கட்டுக்கட்டாக பணம் கிடைக்கிறது இதான் க்ளைமாக்ஸ்.
“இது ஒரு காலத்துல எங்களுக்குச் சொந்தமான நிலம். எங்கப்பாவுடைய குடியாலும் கெட்ட சகவாசத்தாலும் பறிப்போயிருச்சு” எனச் சொல்லியே பலரை கவிழ்க்கும் அகல்யாவாக அனன்யா மணி தான் எல்லா கேரக்டர்களையும்விட அசத்தலாக தெரிகிறார். பணப்பைத்தியமாக வரும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரனும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
அதிலும் திருடர்களிடம் “நெஞ்சுல குத்துற நண்பன், முதுகுல குத்துற சொந்தக்காரன்” என இன்ஸ்பெக்டர் பேசும் டயலாக் கனகச்சிதம். க்ளைமாக்சில்.. கோவிலில் பிரசங்கம் பண்ணும் சாமியார் ஒருவர், “சூழ்ச்சியும் தர்மம் தான்” என்கிறார். அது என்ன வகையான தர்மம் என்பது நமக்குப் புரியவில்லை.
படம் என்னவோ 104 நிமிடங்கள் தான். ஆனால் காட்சிகளின் ‘டெட் ஸ்லோ’ நாடகத்தனத்தனம் தான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனம் தான் வல்லவன் வகுத்த திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கவிட்டது. நெக்ஸ் டைம் பெஸ்டா பண்ணுங்க விநாயக் துரை`
மதுரை மாறன்