மூன்றாண்டு நிலுவை மூன்றே மாதத்தில் பைசல் ! சபாஷ் ஆணையர் !
மதுரை மாநகராட்சியில் கடந்த 2017 -ஆம் ஆண்டு முதலாக வரிகட்டாமல் ஏய்த்து வந்த தனியார் நிறுவனங்களை நெருக்கியும், பொதுமக்களிடம் அன்பாக நெருங்கியும் வரிவசூலித்து கவனத்தை பெற்றிருக்கிறார், புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி, காலிமனைகள் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடைவரி குடிநீர்வரி, குத்தகைவரி மற்றும் மாநகராட்சி கடைகள் வாடகை போன்ற பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு ஊழியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஊதியம், சாலை, குடிநீர், பராமரிப்பு மற்றும் விநியோகம், சுகாதாரப் பணிகள் பாதாள சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். தொடர்ந்து வரிவசூலில் மந்தநிலை நீடித்து வந்ததால் ஒன்றிய அரசின் மானியத்தை பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற தினேஷ்குமார், வார்டுகள் தோறும் வரி வசூல் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். காலை 8 முதல் இரவு 8 வரை செயல்படும் வகையில் நேரத்தை மாற்றியமைத்ததோடு, விடுமுறை நாட்களிலும் வரிவசூல் மையங்களை இயங்க வைத்தார். இவ்வாறு, பொதுமக்கள் அதிக மெனக்கடல் இன்றி வரியை கட்டுவதற்கான சூழலை ஏற்படுத்தியதோடு, போதுமான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.
”நீண்ட ஆண்டுகளாகவே உரிய வரியை செலுத்தாமல் வரிபாக்கி வைத்திருந்த தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், மால்கள், அரசுசார்பு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முறையான கடிதங்கள் அனுப்பியும் எந்த பதிலும் வராமல் இருந்தது. அவர்களையெல்லாம் நானே நேரில் சந்தித்து உடனடியாக வரி கட்டவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துவிட்டு வந்தேன். இதன் உடனடி பலனாக 90 இலட்சம் வரையில் பழைய பாக்கியை வசூல் செய்திருக்கிறோம். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலித்திருக்கிறோம். மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு இதனை செய்து முடித்திருக்கிறோம். எங்களது இந்த பணியில், யாருக்காகவும் கட்சிக்காரர்கள் சிபாரிசுக்கும் வரவில்லை. வரிவசூலை தடுக்கவுமில்லை. இந்த தீவிர நடவடிக்கை இனியும் தொடரும்..” என்கிறார் அதிரடியாக, மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார்.
ஷாகுல், படங்கள் ஆனந்த்