‘ The Fall ” ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்
The Fall என்றொரு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன், நல்ல காட்சி அனுபவம் தரக்கூடியது தான். ஆனால், எந்த லாஜிக்கும் இல்லாத ஒரு அதீதப் புனைவு. 2000 அடி உயர தொலைக்காட்சி கோபுரத்தில் ஏறும் இரண்டு பெண் நண்பர்களின் சாகசம் தான் படம்.
ஏணிப்படிகள் எல்லாம் உடைந்து நொறுங்கிய நிலையில் அவர்கள் அந்த கோபுரத்தின் உச்சியில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இறுதியில் என்னவானார்கள் என்பது தான் படம்.
திரைப்படத்தில் வரும் Hunter எனும் நாயகியின் தோழி “அச்சத்தை வென்று விட்டால், வாழ்வின் உச்சத்தை அடைய முடியும், வாழ்வு மிகக் குறுகிய காலம்தான், இந்தக் காலத்தில் நாம் வாழ்வதற்கான உணர்வை சாகசங்களால் அடைய முடியும்” என்று சொல்லி நாயகியை உயரத்துக்கு அழைத்துப் போவாள்.
Hunter பேசுகிற வசனங்கள் அமெரிக்கர்களின் தத்துவார்த்த உளவியல் சார்ந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. நாயகி Becky தொடர்ந்து அச்சப்படுகிறாள். என்னால் முடியாது என்று பின்தங்குகிறாள். ஆனால், தத்துவார்த்தமான உணர்வு மயப்படுத்தும் சொற்களைக் கொண்டு வழி நடத்துகிறாள் Hunter.
போராடுவதா? சரணடைவதா? என்ற கேள்வி நம்முடைய வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். 15 வயதில் இருந்து 30 வயது வரை மனிதர்கள் போராடிப் பார்ப்பதற்கான மனமும், உடலும் இணைந்திருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் போராடிப் பார்த்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகான வாழ்வில் தத்துவார்த்த வழிகளில் சரணடைதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது வாழ்வை மிக அழகானதாக மாற்றும்.
ஒரு அவசரமான வேலையாக வெளியில் போகிறீர்கள், ஒரு குறிப்பிட்ட மனிதரை குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வேண்டும். பாதி வழியில் சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல், மெல்ல நகர்கிறீர்கள்.
திடீரென்று மழை வேறு குறிக்கிடுகிறது. என்ன செய்வீர்கள்? அமைதியாக நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு ஒரு ஓரமாக நின்று முடிந்தால் ஒரு தேநீர் சாப்பிடலாம். இதுதான் சூழலில் சரணடைதல்.
இயல்பாக நிகழும் இடர்களை அல்லது துன்பங்களை எதிர்த்துப் போராடுவது என்பது துன்பம் அதிகரிக்குமே தவிர குறையாது. இது போக பெருவாழ்வு நாம் திட்டமிடுகிறபடி செயல்படுகிற ஒன்றல்ல.
அதன் திட்டங்களின்படி தான் நாம் இயங்கியாக வேண்டும். உலகின் பல்வேறு திட்டங்களை ஒரு பெருந்தொற்றால் இரண்டு வருடங்கள் முடக்கி விட முடிந்தது. உயிர்பிழைத்திருத்தல் மட்டுமே ஆகப்பெரிய தத்துவமாக ஒரே இரவில் மாறிப்போனது.
சூழல்களின் அடிமைகளாகத்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. திடீரென்று வருகிற அதிர்ஷ்டம், எதிர்பாராமல் வருகிற துன்பம் என்று இரண்டு வாய்ப்புகளும் நம்மோடு பயணிக்கிறபோது நாம் இரண்டு சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
ஏகாந்தமாக, இதுதான் வாழ்வு என்று இருப்பதை ஏற்றுக்கொள் என்றுதான் பெரும்பாலான மதங்களும், தத்துவங்களும் சொல்கின்றன.கீதை “எதற்காக வருந்துகிறாய், எதைக் கொண்டு வந்தாய்? என்கிறது.கிறிஸ்துவம் “கலங்காதிரு, அவரே உனது வெளிச்சமாக முன்னே செல்கிறார்” என்கிறது.இஸ்லாம் “துன்பங்களின் வழியே நீ இன்பத்தை அடைவாயாக” என்கிறது.போராட்டங்களைத் தாண்டி அமைதியாக வாழ்வை எதிர்கொள்கிற “சரணடைதல்” மேலான விடுதலையை வழங்குவதாக இருக்கிறது. அது புதிய பாதைகளைத் திறந்து இன்னும் சிறந்த பாதைகளின் வழியே பயணிக்க உதவுகிறது.
திட்டமிடுதல் அல்லது முயற்சித்தல் என்கிற அறிவியல் விஷயங்களுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். திட்டமிடுங்கள், கனவு காணுங்கள், அதற்காக உழையுங்கள், போராடுங்கள், வெற்றியடையுங்கள். அதுதான் நவீன மனிதர்களின் ஆகச்சிறந்த தத்துவமாக இருந்திருக்கிறது. மனித நாகரீகத்தை அதுதான் கட்டமைத்து வழிநடத்தி இருக்கிறது.
இறுதியில் உங்கள் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையை இழந்து விடவேண்டாம் என்பதே நான் சொல்ல வருவது. திட்டமிடுங்கள், தோல்வி வருகிறதா? ஏற்றுக் கொள்ளுங்கள், போரிடுங்கள், தோல்வியடைகிறீர்களா?, தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுகிறீர்களா? கொண்டாடி மகிழுங்கள். இறுதியில் வாழ்க்கை என்பது அற்புதமான Biological Probability என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள், அந்த அனுபவத்தை இழந்து விட்டால் எந்த ஒரு பொருளையும் உங்களால் கண்டடைய முடியாது.
இறுதிவரை பொருளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், வேகவேகமாக சாப்பிடுவார்கள், வேகவேகமாக கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்.
இதை இப்படி மாற்றுவேன், அதை இப்படி ஆக்குவேன் என்று ஒரு பரபரப்பான மனவுலகிலேயே வாழ்வார்கள். இறுதியில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் போது
“ஒரு நாளில் கூட இருக்கிறவற்றை அனுபவித்து நிதானமான அமைதியான ஒரு வாழ்க்கையை வாழத் தவறிவிட்டேனே?” என்று புலம்புவார்கள்.
வேகமான பரபரப்பான வாழ்க்கை ஒரு அந்தஸ்து அல்லது தகுதி என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. நிதானமான, எளிமையான வாழ்வே உண்மையான தகுதி.
நான் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு வெளிநாட்டுத் தூதுவர் வீட்டுக்கு மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்பவனாக இருந்தேன்.
வாழ்க்கையை நிதானமாகவும் கொண்டாட்டமாகவும் வாழ்கிற மனிதர். அவரது வீட்டின் வரவேற்பறையில் ஒரு அலங்காரம் பொருட்கள் வைக்கிற பெரிய கண்ணாடி அலமாரி இருக்கும்.
அந்த அலமாரி முழுவதும் உடைந்த பொருட்கள், உடைந்த கண்ணாடிக் குடுவைகள், உடைந்த மரப்பொம்மைகள், உடைந்த கற்கள் என்று ஒழுங்கற்ற பொருட்களால் நிரப்பி இருப்பார். புதிய புதிய உடைந்த பொருட்களையும் அடுக்குவது சேர்ப்பது என்று மிகுந்த ஈடுபாட்டோடு அந்த வேலைகளை செய்வார்.
அந்த அலமாரி யின் மேலாக ஒரு சிறிய சொற்றொடரை நான் பார்த்தேன், “To be beautifully broken is to be broken before the Lord” அன்று என்னால் அந்த சொற்றொடரின் பொருளைக் கண்டடைய முடியவில்லை. ஆனால் இப்போது உடைந்து போனவற்றிலும் நம்மால் அழகியலைக் கண்டடைய முடியும் என்பதைத் துல்லியமாக உணர முடிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சூளகிரி அருகே பெயர் தெரியாத மலைக்கிராமம் ஒன்றில் இருந்தேன். நாங்கள் ஒரு கனவானின் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து நின்றபோது மதில் சுவருக்குப் பக்கத்தில் ஒரு சக்கர நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான்.
பரபரப்பான அந்த மகிழுந்துகளின் வருகை, மனிதர்களின் உரையாடல் என்று எல்லாம் கடந்து அவன் ஒரு ஏகாந்த மனநிலையில் இருந்தான். அவனால் பேசவியலாது, அவனால் நடக்கவியலாது, நான் மெல்ல அவனருகில் போய் நின்று “தம்பி உன் பெயரென்ன?” என்றேன்.
“பாயாச்சி…..பாயாச்சி” என்று உற்சாகமாக பெருங்குரலில் பேசினான். என் கையில் இருந்த ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்து அவனுக்கு ஊட்டினேன். அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், உற்சாகமும் பரவியது. உடனடியாக அவனது அம்மா அங்கு வந்து “பாலாஜி, எனது மூத்த மகன்” என்றார், பாலாஜியின் சக்கர வண்டியை நகர்த்தி அந்த வீட்டின் பெரிய மாமரத்தின் வழியே நடந்தேன். கூடவே இரண்டு சிறுவர்கள் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஒரு அரைமணி நேரம் பாலாஜியுடன் நாங்கள் உரையாடினோம்.
இறுதியில் விடைபெறும் போது “Bye பாலாஜி” என்று உரத்த குரலில் விடை கொடுத்தேன். வாசல் வரை வந்து பாலாஜியின் தாய் திடீரென்று எனது கைகளைப் பிடித்துக் கொண்டார். அவரது கண்கள் ஈரமாகி இருந்தது.”நாங்கள் அவனைப் புறக்கணித்து விட்டோம், நாங்கள் அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை, மூன்று வேளையும் உணவு கொடுப்பதோடு முடித்துக் கொள்வோம், நீண்ட காலத்துக்குப் பிறகு அவனது பெயரைச் சொல்லி விடை பெறுவது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்” என்றபடி என் கைகளை விடாமல் பற்றிக் கொண்டார்.
நிதானமான வாழ்க்கை என்பது சிலருக்கு வரம், சிலருக்கு சாபம். பாலாஜியின் நிதானமான வாழ்க்கை, அந்தத் தாயின் துயரம். இதன் நடுவே விருந்தினனாகப் போன என்னுடைய இருப்பு என்று யோசித்துப் பார்த்தால் வாழ்வின் முடிச்சுகள் அவிழ்ந்து அதன் போக்கையும், நம்முடைய பரபரப்பான வாழ்வின் பொருளற்ற தன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.
பாலாஜியைப் போல உலகமெங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ரத்தமும் சதையுமாக யாராவது நம்மிடம் வந்து உரையாட மாட்டார்களா என்று தனிமையில் வாடுகிறார்கள். பேசக்கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் மறுதலித்து நாம்தான் எங்கேயோ ஓடிக்கொண்டே இருக்கிறோம்.”எங்கே ஓடுகிறோம்?” என்றொரு கேள்வியை எழுப்பினால் அமைதியாக அதன் விடை மிக எளிமையாக நமக்குக் கிடைத்து விடும்.
முகநூலில் இருந்து
– கை.அறிவழகன்