பெண் ஊழியருடன் ‘கூடா நட்பு’ காரணமாக தாக்கப்பட்ட பேராசிரியர்! 2 பேர் கைது – மூவர் தலைமறைவு!
தஞ்சாவூர் தமிழ்ப் பல்ககைலக் கழக பேராசிரியரை கடத்திச் சென்று கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் 3 நபர்களை தேடிவருகின்றனர்.
அதே பல்கலைக்கழகத்தில பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருடனான ‘கூடா நட்பு’ காரணமாக அவரை அப் பெண்ணின் மகன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று தாக்கியுள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் காலனி 7வது தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (47). தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியரான முனைவர் பாலசுப்பிரமணியன் மார்ச் 14-ம் தேதி காலையில் வழக்கம்போல பணிக்கு புறப்பட்டுச் சென்றவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை.
அதற்கு அடுத்த நாள் (15-ம் தேதி) மாலை கொடுங் காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது தோற்றம் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வளர்மதி என்ன நடைபெற்றது என அவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, கல்லூரி முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்திச் சென்று வல்லம் பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கியதாக கூறிவிட்டு அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 17-ம் தேதி கண் விழித்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி நடைபெற்ற சம்பவம் குறித்து அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். மேலும் , வளர்மதி அளித்த புகாரின்பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவ்விசாரணையில், அதே பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் ஒருவருடனான ‘கூடா நட்பு’ காரணமாக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் அப்பெண்ணின் மகன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, எதிரிகள் மீது 307 (கொலை முயற்சி), 365 (சட்டவிரோதமாக கடத்திச் சென்று அடைத்து வைத்தல்), 386 (காயம் ஏற்படுத்தி மிரட்டி பணம் பறித்தல்), 341 (சட்டத்துக்குப் புறம்பாக தடுத்து நிறுத்துதல்) உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, திருவையாறு பகுதியைச் சேர்ந்த அப்பெண்ணின் மகன் சந்தோஷ் (25), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி (27) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
‘கூடா நட்பு’ காரணமாக தாக்கப்பட்டுள்ள பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தமிழ், மொழியியல், ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய மூன்று பாடங்கிளல் எம்ஏ பெற்றுள்ளார். தமிழ் இலக்கணத்தில் முனைவர் பட்டம் (பிஎச்.டி) பெற்றுள்ளார்.
மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது’ உள்பட இதுவரை நான்கு விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.