நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா ?

வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக-பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா?

னல் பறக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் களம். இறுதிக்கட்டப் பரப்புரையில் இருக்கிறது முதல் கட்ட வாக்குப்பதிவு. கூட்டணிக் கணக்கும், தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பமும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை சராசரி வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனினும், ‘நாடும் நமதே.. நாற்பதும் நமதே’ என்கிற மு.க.ஸ்டாலினின் முழக்கம் முழுமையான வெற்றியை எந்தளவில் பெறப் போகிறது என்பதுதான் கடைசி நேரக் கேள்வி.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி ஜெயித்தால், இந்திய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அடுத்து அமையவிருக்கும் மத்திய ஆட்சியில் தமிழ்நாடு முக்கியத்துவம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 2004 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40க்கு 40 என்ற முழுமையான வெற்றியைத் தி.மு.க. கூட்டணி பெற்றது. அதன் காரணமா, அடுத்த பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தி.மு.க. செல்வாக்குடன் இருந்தது. தமிழ்நாடும் இந்திய அளவில் முக்கியத்துவமான மாநிலமாகப் பார்க்கப்பட்டது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களில் வென்றது. மோடியா, லேடியா என்ற ஜெயலலிதாவின் அனல் பறந்த பிரச்சாரம் அந்த வெற்றிக்கு கைக் கொடுத்தது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால், அ.தி.மு.க.வின் வெற்றி இந்திய அளவில் எந்தப் பயனையும் தரவில்லை. தமிழ்நாட்டிற்கான முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களை தி.மு.க. கூட்டணி வென்றது. ஆனால், இந்த முறையும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிதான் அமைந்தது. முந்தைய தேர்தலைவிட கூடுதல் இடங்களைப் பெற்று பிரதமரானார் நரேந்திர மோடி. தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி மத்திய ஆட்சிப் பொறுப்பில் பலனளிக்கவில்லை. எனினும், கலைஞர் கருணாநிதி இல்லாத நிலையில், தி.மு.க.வின் இந்த வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் களத்தில் தனி இடத்தைக் கொடுத்தது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கூட்டணியைக் கட்டமைப்பதிலும் கட்டிக்காப்பதிலும் ஸ்டாலினின் அணுகுமுறை பல தலைவர்களையும் கவர்ந்தது. அதன் விளைவாக, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியுடன் வெற்றி பெற்று முதலமைச்சரான ஸ்டாலின், தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவாவதற்கும் துணை நின்றார். தமிழ்நாட்டில் தனது தலைமையிலான கூட்டணியை வலுவாக்கி இந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார்.

நாற்பதும் நமதே.. நாடும் நமதே என்பதை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.தான் பலம் வாய்ந்த கட்சி. அதற்கடுத்து, வடமாவட்டங்களில் பரவலாக வாக்குவங்கி உள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள். நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பா.ஜ.க. எதிர்ப்பு அலை என்பது காங்கிரசுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் செல்வாக்கு என்பது குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும்தான்.

வடமாவட்டங்களில் உள்ள வன்னியர் சமுதாயத்து வாக்குகளைப் பெறுவதில் பா.ம.க, அ.தி.மு.க., தி.மு.க மூன்றும் போட்டி போடுகின்றன. கொங்கு மண்டலம் எனப்படும் மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்து வாக்குகளைப் பெறுவதில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் முனைப்பாக உள்ளன. அங்கே தி.மு.க. கடும் போட்டியை சந்திக்கிறது.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் முறையே கோவை, நீலகிரி தொகுதிகளில் போட்டியிடுவதால் மோடியும் அமித்ஷாவும் இந்தத் தொகுதிகளில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள். அ.தி.மு.கவுக்கும் இந்தத் தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதால் இங்கே தி.மு.க.வுக்கு சவால் அதிகரித்துள்ளது. கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இந்தத் தொகுதிகளில் இல்லாததும், வெளிமாவட்ட அமைச்சர்களைக் கொண்டு வந்து வேலை செய்வதும் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.

தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வின் கணக்கு கன்னியாகுமரி தொகுதி. மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கே போட்டியிடுகிறார். போன முறை விட்டதை இந்த முறை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. தேனி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். எதிர்த்து நிற்கும் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் டி.டி.வி.தினகரனின் பழைய சிஷ்யர். தி.மு.க. நிர்வாகிகளுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஒட்டுதல் குறைவு.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதையும் படிங்க :

4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?

உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார்? அங்குசம் நடத்திய அதிரடி சர்வே முடிவுகள் !

♦  கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர் !

நாடாளுமன்றத் தேர்தல் களம் – 2024 : திமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக ?

தர்மபுரியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வின் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். பா.ம.க.வுக்கு செல்வாக்கான தொகுதி என்பதால் இங்கு எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என ராமதாஸில் தொடங்கி அவரது பேரன் பேத்திகள் வரை களமிறங்கி வேலை செய்யும் நிலையில், தி.மு.க. தனது வியூகங்களை மேம்படுத்தியாக வேண்டும்.

தி.மு.க.வுடன் அ.தி.மு.க நேரடியாக மோதும் தொகுதிகளைவிட, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுடன் மோதும் தொகுதிகளில் தனக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் எனக் கணக்கிட்டு செயல்படுகிறது அ.தி.மு.க.

10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் பலரையும் தி.மு.க.தான் சுமந்து செல்லவேண்டும். இது நிர்வாகிகளிடம் சலிப்பை ஏற்படுத்துகிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க அன்றாடப் பிரச்சாரம், பூத் பணிகள் என செலவுகளை கவனிக்க வேண்டும். இதை வேட்பாளர் செய்வாரா, கட்சி செய்யுமா என்ற குழப்பம் பல தொகுதிகளில் நிலவுவதால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

நெல்லையில் பா.ஜ.க வேட்பாளர் பணம், கோவையில் அ.தி.மு.க. வேட்பாளர் பணம் ஆகியவை அண்மையில் பிடிபட்ட நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க. வேட்பாளர்களே அதிகம் குறிவைக்கப்படுவார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வேலூர் தொகுதியில் பிடிபட்ட பணத்தால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல, பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி ஒரு சில தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவைக்கும் வாய்ப்பும் உண்டு. வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக-பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

திருமொழி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.